Published : 23 Jul 2018 03:50 PM
Last Updated : 23 Jul 2018 03:50 PM

மத்திய அரசு தங்களுடைய கருத்துகளை யுஜிசி மீதோ, பல்கலைக்கழகங்கள் மீதோ திணிப்பதை நிறுத்த வேண்டும்: கல்வியாளர் நந்தினி சுந்தர் பேட்டி

62 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் என்கிற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்ட வரைவு நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் 27-ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய உயர்கல்வியில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த மிக முக்கிய மாற்றம் நிகழவிருக்கிறது. யுஜிசி கலைக்கப்படுகிறது” என பதிவிட்டார். மேலும், இதுதொடர்பாக தாயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதா குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களின் கருத்துகளை ஜூலை 7 வரை அனுப்பி வைக்கலாம் எனவும் ஜவடேகர் குறிப்பிட்டிருந்தார்.

யுஜிசி அமைப்பிடம் உயர்கல்வியை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கும் அதிகாரமும் உள்ளது. ஆனால், உயர்கல்வி ஆணையம் கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் எனவும், மானியம் வழங்கும் அதிகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வரைவு மசோதா மீது கருத்து தெரிவிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும். அதனால் புதிய அமைப்பை ஏற்படுத்தக் கூடாது” என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.

யுஜிசியை கலைக்க காட்டப்படும் அவசரமும், உயர்கல்வி ஆணைய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி, மாநில உரிமைகள், மாணவர்களின் விமர்சன மீள்பார்வை, இந்தியாவின் பன்முகத் தன்மையை உள்ளடக்கிய கல்வி அமைப்பு ஆகியவற்றை சிதைக்கும் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மற்றொருபுறம், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய அமைப்புகள் காலாவதியாகிவிட்டன என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதப் காண்ட் தெரிவித்திருக்கிறார்.

உண்மையிலேயே யுஜிசியை கலைக்க இப்போது அவசியம் உள்ளதா, யுஜிசி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா, புதிய ஆணையம் மீது கல்வியாளர்கள் சுட்டும் குற்றச்சாட்டுகள் எதன் அடிப்படையிலானவை என்பது குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியரும் கல்வியாளருமான நந்தினி சுந்தரிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.

யுஜிசியை கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கு தற்போது ஏதேனும் அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா?

யுஜிசியை கலைக்க வேண்டிய அவசியமில்லை. யுஜிசிக்குள் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை யுஜிசிக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு தங்களுடைய கருத்துகளை யுஜிசி மீதோ, பல்கலைக்கழகங்கள் மீதோ திணிப்பதை நிறுத்த வேண்டும். இந்திய வரலாற்று ஆய்வு கழகம் (ஐசிஹெச்ஆர்), இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐசிஎஸ்எஸ்ஆர்) ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு நேர்மையான கல்வியாளர்களையும், தலைவர்களையும் நியமிப்பது தான் அவசியமானது.

செயல்பாட்டு தரத்தை மேம்படுத்தத் தான் யுஜிசி கலைக்கப்பட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசு சொல்கிறதே?

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவின்படி, தரத்தை உயர்த்துவதற்காக அந்த ஆணையம் எடுக்கும் எந்தவொரு முடிவுகளுக்கும், மாற்றங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். யுஜிசி அமைப்பு கூட, மேற்கொள்ளும் முடிவுகளுக்கு பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது போன்று பாசாங்கு செய்து கொண்டுதான் இருந்தது. எனில், இதற்காக ஒரு புது அமைப்பு என்பது தேவையில்லை. இப்போது அமைக்கப்பட இருக்கும் உயர்கல்வி ஆணையம் எடுக்கும் முடிவுகளில் மத்திய அரசின் திணிப்பு இருக்க வாய்ப்புண்டு.

நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள துறை அமைச்சகம் வைத்துக்கொள்வது என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்?

யுஜிசி அமைப்பு பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்வதால், கல்வி நிலையங்களை கண்காணிக்க முடிவதில்லை, கல்வித்தரத்தை உயர்த்த முடியவில்லை, ஆதலால், உயர்கல்வி கண்காணிப்பை வலிமைப்படுத்தும் நோக்கில் தேசிய உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. ஆனால், இந்த முடிவு பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கப்படுவதை இன்னும் அரசியல்மயப்படுத்தும்.

நிர்வாகம் சார்ந்த காலதாமதங்களை ஏற்படுத்தும். மானிய அதிகாரம் விஷயத்தில் யுஜிசியும் கடந்த காலங்களில் மோசமாகவே செயல்பட்டுள்ளது. அதிகாரப் போக்குடன் முடிவுகளை எடுத்துள்ளன. யுஜிசியும் மத்திய அரசைப் போலத்தான் நிதி அதிகாரத்தை செயல்படுத்தி வந்தது. ஒவ்வொரு வருடமும் அனைத்து நிதிகளும் பிப்ரவரி மாதத்தில் ஒதுக்கப்பட்டு மார்ச் மாதத்தில் செலவிடப்பட வேண்டும். எந்தவொரு இந்திய பல்கலைக்கழகத்துக்கும் செல்லுங்கள். வருடம் முழுவதும் நிதி இல்லாமல் ஆய்வுகளும், மாநாடுகளும் மார்ச் மாதம் வரை தேங்கி கிடக்கும். அரசாங்கமே நேரடியாக நிதியளிப்பது இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும். மத்திய அரசுக்கு சார்பாக செயல்படாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட வாய்ப்புகள் அதிகம்.

 

உயர்கல்வி ஆணையத்தில் இடம்பெறும் மொத்த 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள் என்கிறது அரசு. இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

கல்வியாளர்களின் குறைந்த பிரதிநிதித்துவம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். உயர்கல்வி குறித்து ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948-49), கோத்தாரி கமிஷன் (1966) ஆகியவை அரசாங்கத்திடமிருந்து விலகி தன்னிச்சையாக இயங்குவது பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தின. யுஜிசியில் 50 சதவீத உறுப்பினர்கள் அரசுக்கு வெளியே விவசாயம், வனம், மருத்துவம், சட்டம் என பல்வேறு துறைகளிலிருந்து இருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், மற்றொருபுறம், உயர்கல்வி ஆணையத்தில் அரசு அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்துவார்கள். மேம்போக்காக பேச்சுக்கு மட்டும் கல்வியாளர்களை நியமித்தால், உயர்கல்வி ஆணையம் அதிகாரிகளைக் கொண்ட தொழில்கூடம் போன்றே இருக்கும். அதனால், கல்வியை அரசாங்கம் பொதுநலனாக கருதவில்லை என்பது தெளிவாகிறது.

ஜேஎன்யு, டெல்லி பல்கலைக்கழகம் இரண்டிலும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். இரண்டின் தன்னாட்சியிலும் யுஜிசி தலையிட்டிருக்கிறதுதானே? அதனால், மாணவர்கள், கல்வியாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்பதை விவரிக்க முடியுமா? உயர்கல்வி ஆணையம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் என நினைக்கிறீர்களா?

ஜேஎன்யு, டெல்லி பல்கலைக்கழகம் இரண்டின் தன்னாட்சியிலும் யுஜிசியின் தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை, பேராசிரியர்களை, பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையே பறிபோய் விட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 2011-ல் ஆண்டு தேர்வை மாற்றி செமஸ்டர் முறையை யுஜிசி கொண்டு வந்தது. 2013-ல் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்த 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு பதிலாக 4 ஆண்டு இண்டர்டிசிப்ளினரி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு அது மீண்டும் 3 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டது. 2015-ம் ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கு சிபிசிஎஸ் பாடத்திட்டத்திற்கான மைனர் மற்றும் மேஜர் துணைப்பாடங்களை (எலெக்டிவ்) தேர்ந்தெடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டோம். இந்தாண்டு முதுகலை படிப்புகளுக்கு மாணவர்களுக்கு 80 கிரெடிட்டுகளை உருவாக்க வாரத்துக்கு 20 வகுப்புகள் எடுக்க வேண்டும் என யுஜிசி கூறியது. முன்பு, 60 கிரெடிட்டுகள்தான் இருந்தது, 12-15 வகுப்புகளை வாரத்திற்கு எடுப்போம். அதிகாரிகளும், அமைச்சர்களும் கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறார்களா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் கோச்சிங் வகுப்புகளுக்குத் தான் சென்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஒரு பாட வகுப்பு என்பது என்னவென்று அவர்களுக்கு தெரியுமா? ஆசிரியர்கள் வகுப்புக்காக தயார் செய்ய வேண்டும். மாணவர்கள் வகுப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். தேவையின் அடிப்படையில் வகுப்புகளை பாதியாக குறைக்கவோ, கூட்டவோ முடியாது

உயர்கல்வி ஆணையம் சமூகநீதியை உறுதிசெய்யுமா ?

இன்று ஜேஎன்யு, டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்குமான உரிமைகள், பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுந்திருக்கிறது.உயர்கல்வி ஆணையத்தில் சமூக நீதிக்கான எந்தவொரு அம்சமும் இல்லை. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எவ்வாறு கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தப் போகிறது என்பது குறித்தோ, ஆதிதிராவிட, பழங்குடியின, மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் பங்குபெறுவதை ஊக்குவிக்க என்ன செய்யப் போகிறது என்பது குறித்தோ தெளிவாக குறிப்பிடவில்லை. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில் ஏற்கெனவே கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

மாநில உரிமைகள் பற்றி மிகப்பெரும் விவாதங்கள் நடக்கும் காலமிது. உயர்கல்வி ஆணையத்தால் மாநில கல்வி உரிமைகள் என்னவாகும்?

உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்பட்டால் நான் ஏற்கெனவே சொன்ன கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதிக கட்டுப்பாடுகள் மாணவர்களின் அரசியல் சார்ந்த பார்வையை நெருக்கும். தற்போதுள்ள டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மீதும் நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் மீறியதுதான் உயர்கல்வி ஆணையம். ஒரு மாநிலம் தான் சரியென கருதும் ஒரு பகுதியில் கல்வி நிறுவனங்கள் அமைக்கும் உரிமை கூட பறிபோய் விடும்.

ஜியோ பல்கலைக்கழக சர்ச்சை, உயர்கல்வி ஆணையம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளை இந்தியாவின் உயர்கல்வி இக்கால கட்டத்தில் அதிகமாக சந்திக்கிறது. உண்மையில் இந்திய அரசு உயர்கல்வியில் என்னென்ன பிரச்சினைகளை அவசரமாக சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு, இந்தியாவின் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாதன் மூலமே எதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை அறியலாம். தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பெரும்பாலான கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள், உள்கட்டுமானம், அவ்வளவு ஏன் கழிவறை கூட இல்லை. இந்தியாவில் 760 பல்கலைக்கழகங்கள், 38,498 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் படிக்கும் 31.56 மில்லியன் மாணவர்களில், 78% மாணவர்கள் இளங்கலை படிப்பும், வெறும் 0.67% மாணவர்கள் தான் பிஹெச்டி படிக்கின்றனர். புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்கள், புகழில்லாத கல்வி நிறுவனங்கள் என அதிகார படிநிலையை உருவாக்கி அரசு என்ன செய்யப் போகிறது?

டெல்லியில் இம்மாதம் நடைபெற்ற ஆசியா கல்வி மாநாட்டுக்கு வர பாகிஸ்தான் கல்வியாளர்களுக்கு இந்திய அரசு விசா வழங்கவில்லை. இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தரம், ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல், மாட்டுக்கறி பெயரால் நடைபெறும் தாக்குதல்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களுக்கு தடை, மாணவர்களையும், ஆசிரியர்களையும் தேச விரோதிகளாக சித்தரித்தல் இவைதான் நடக்கின்றன.

இவற்றை சரிபடுத்தி கல்வி சுதந்திரத்தை ஏற்படுத்துவதுதான் இப்போதைக்கு இந்திய உயர்கல்வியில் நிகழ வேண்டிய அவசர மாற்றமாகும். 

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x