Published : 25 Jul 2018 07:39 PM
Last Updated : 25 Jul 2018 07:39 PM
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்மந்தப்பட்ட குட்கா ஊழல் புகார் மீது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. இந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் அடுத்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
திமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். 2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ல் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் இருந்து ஓபிஎஸ் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதுதொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் 3 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது ஊழியருக்கு எதிராகப் புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தவேண்டிய கடமை உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
அதேபோல், அறப்போர் இயக்கமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகார்களை எழுப்பி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை விசாரித்தார். அப்போது, கடந்த 18-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். முதல்கட்ட விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவிடப்பட்டிருக்கிறது என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்து நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
துணை முதல்வர் பதவி விலக வேண்டும்
இந்த வழக்கைத் தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி நம்மிடம் பேசுகையில், “ஓபிஎஸ் மீதான இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும். விசாரணை வளையத்திற்கு உட்பட்டவர்கள் அரசுப் பதவி வகிப்பது முறையல்ல.
பல ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கை தொடுத்தோம். விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசு சொல்வதில் அரசியல் இருப்பதாக கருதவில்லை” எனத் தெரிவித்தார்.
விசாரணை நியாயமாக நடைபெறுமா?
அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் இதுகுறித்து கூறுகையில், “லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தோம். கிட்டத்தட்ட 7 மாதங்கள் எங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அலைக்கழித்துள்ளது. அந்தப் புகாரை தலைமைச் செயலருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பியது. தலைமைச் செயலரும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. தன்னிச்சையாக விசாரணை செய்வதற்கு இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை விரும்பவில்லை. நீதிமன்றம் சிபிஐ அல்லது வேறு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப் போகிறது என்ற பயத்தில் தான் இப்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசு சொல்லியிருக்கிறது. விசாரணை செய்ய மாட்டோம் என லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய கடிதமே எங்களிடம் உள்ளது. நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.
ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் விசாரணை முடியாவிட்டால் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். லஞ்ச ஒழிப்புத் துறை தலைமைச் செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது. துணை முதல்வர் கொடுத்த அழுத்தத்தினால் தான் இதுவரை விசாரணை நடைபெறவில்லை. இனிமேலும் விசாரணை நியாயமாக நடைபெறாமல் இருப்பதற்கு அவர் முயற்சிகளை எடுப்பார்” என தெரிவித்தார்.
புகார்களுக்கு என்ன ஆதாரங்கள்?
ஓபிஎஸ் மீதான புகார்களுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெயராம், “2006-ல் ஓபிஎஸ் பெயரில் 3 லட்சத்துக்கு மட்டும் தான் சொத்துகள் உள்ளன. அவர் மனைவியின் சொத்துகளையும் சேர்த்து மொத்தமே 20 லட்சத்துக்குதான் சொத்து இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். 2008-2009 இல் வானி ஃபேட்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற பெயரில் 30 லட்சத்தை முதலீடு செய்து அவருடைய மகன்கள் இருவரும் இயக்குனர்களாகின்றனர்.
2009-2010 இல் அவரின் மனைவி 25 ஏக்கர் நிலம் வாங்குகின்றார். நிலங்களுக்கான ஆவணப் பத்திரங்களை தாக்கல் செய்திருக்கிறோம். மகன்கள் 2010-11 இல் 80 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கின்றனர். அதற்கான முழு ஆவண ஆதாரங்களையும் இணைத்திருக்கிறோம். 2015-ல் 5 லட்சம் முதலீடு செய்து ஒரே வருடத்தில் 30 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஒரே வருடத்தில் இவ்வளவு பெரும் தொகை கிடைப்பதற்கான வாய்ப்பே கிடையாது. கறுப்புப் பணம் புழங்காமல் இதனை எப்படி செய்ய முடியும்? இதற்கான ஆதாரங்களை இணைத்திருக்கிறோம். ஆண்டு வருமானம் 2006-ல் 36,000 என சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ் மனைவி. 2014-15-ல் ஆண்டு வருமானம் 46 லட்சம் என சொல்கிறார். 10 ஆண்டுகளில் எப்படி 100 மடங்குக்கு மேல் ஆண்டு வருமானம் உயர்ந்திருக்கிறது என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறோம்” என தெரிவித்தார்.
வலுவில்லாத லோக் ஆயுக்தா அமைப்பு:
”ஊழல்கள் மிகப்பெரும் அளவில் அதிகமாகியிருக்கிறது. முதல்வரின் உறவினர் வீடுகளில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பெரும் அளவில் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இந்த புகார்களை விசாரிக்காமல் மற்றவர்களை மிரட்டுவதற்காகத் தான் பயன்படுத்துகிறது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பை தன்னிச்சையாக விசாரிக்கும் அமைப்பாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு அரசு அதிகாரி மீது புகார் அளித்தால் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தான் வர வேண்டியிருக்கிறது. வலு இல்லாத அமைப்பாக லோக் ஆயுக்தா உள்ளது. லோக் ஆயுக்தாவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது” என லோக் ஆயுக்தா குறித்தும் ஜெயராம் தெரிவித்தார்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT