Published : 06 Jul 2018 10:23 AM
Last Updated : 06 Jul 2018 10:23 AM
மதுரை அருகே உள்ள திருநகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி ‘திருநகர் பக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர். எங்கு மரங்கள் வெட்டப்படுகிறதோ அங்கு உடனே சென்று அந்த மரங்களை மரமாகவே மற்றொரு இடத்தில் நட்டு விடுகின்றனர். வேரென இருக்கும் இந்த இளைஞர்களால் வீழ்ந்துவிடாது இருக்கின்றன மரங்கள்.
சாலை விரிவாக்கத்துக்காகவும் புதிய திட்டங்களுக்காகவும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்கள் கொத்து கொத்தாக சர்வ சாதாரணமாக வேராடு வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அரை மணிநேரத்தில் அரை நூற்றாண்டு கால மரத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனாயாசமாக வீழ்த்துவதைக் கண்டு இயற்கை ஆர்வலர்கள் ரத்தக் கண்ணீர் விடுகின்றனர்.
வெட்டி வீழ்த்தப்படும் மரங்க ளால் நகரங்கள், கிராமங்கள் பாரபட்சமில்லாமல் மரங்கள் அடர்த்தி குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற சாலை விரிவாக்கம் மற்றும் மிகப்பெரிய திட்டங்களுக்காக மரங்களை அகற்ற வேண்டிய நிலை வந்தால், நவீன இயந்திரத்தின் துணையோடு மரத்தை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் பாதுகாப்பாக நடுகின்றனர். அந்த நடைமுறையை பின்பற்ற நமது அரசு ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால், அரசு செய்யாவிட் டால் என்ன, அதை நாங்கள் செய்கிறோம் என்று களம் இறங்கியுள்ளனர் இந்த ‘திருநகர் பக்கம்’ இளைஞர்கள். இவர்கள் ஒன்றிணைந்து ‘பசுமை காவலர்கள்’ குழுவை அமைத்து பெரிய மரங்களை வேரோடு அகற்றி, அவற்றை வேறு இடத்தில் நடுகின்றனர். அதாவது சாகக்கிடந்தவரை ஐசியூவில் வைத்து காப்பாற்றி தேற்றி உயிர் பிழைக்கச் செய்வதைப் போன்றது இவர்களது முயற்சி. இவ்வாறு நடுவதற்கான பிரத்யேகப் பயிற்சியையும் அவர்கள் பெற்றுள்ளனர்.
அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வாவிடம் பேசினோம். ‘‘எத்தனையோ மரக்கன்றுகளை இதுவரை நடவு செய்துள்ளோம், அதில் பல வளர்ந்து இன்று மரமாக நிற்கின்றன. சில மரக்கன்றுகள் மனிதர்கள், கால்நடைகள், காலநிலையின் தாக்கத்தால் மண்ணோடு மக்கி உரமானது. இந்நிலையில், வளர்ந்த மரங்களை பாதுகாக்கவும் அவற்றை வேறு இடத்தில் நட்டு பசுமையை உருவாக்கும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
இதற்காக மதுரை அன்னவயல் அறக்கட்டளை நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான காளிமுத்து மற்றும் அவரது குழுவினரிடம் மரங்களை மரமாகவே நடுவதற்கு பயிற்சி பெற்றோம். அதன் படி பல இடங்களில் வெட்டப்பட இருந்த மரங்களை காப்பாற்றி, அவற்றை வேரோடு எடுத்து, வேறு இடத்தில் நட்டு பராமரித் துள்ளோம்.
ஆலமரம், அரசமரம், பூவரசம், உதயம், லச்சக்கட்டை, முருங்கை ஆகிய மரங்களை மதுரை அருகே திருநகர் சேமட்டான்குளம் கண் மாய் கரையில் நட்டோம். தற் போது அந்த மரங்கள் துளிர்விட்டு வளர ஆரம்பித்துள்ளன.
இதுதவிர, மரத்தின் வளர்ந்த கிளையை (போத்து) சரியான முறையில் தேர்ந்தெடுத்து, 3 அடி ஆழ குழியில் நட்டு பராமரித்து வளர்க்கிறோம். முன்னதாக இந்த போத்தின் கீழ் மற்றும் மேல் முனைகளில் சோற்றுக் கற்றாழை பசையை நன்கு தடவி விடுவோம். இது நோய் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கும். மேலும், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.
அதோடு, மாட்டின் சாணத்தையும் பூசுவோம். இதனால், போத்து விரைவில் ஈரப்பதத்தை இழக்காமல், உயிர்ப்போடு புது துளிர் விட உதவும். பின் வைக்கோலை எடுத்து கயிறு திரித்து, அதை போத்து முழுவதும் இடை வெளி விடாது மூடிவிடுவோம்.
நடும் முன்பு குழிக்குள் சிறிது காய்ந்த நாட்டு மஞ்சள் கிழங்கு அரைத்த பொடியை தூவுவோம். பின்னர், போத்தை மண்ணுக்குள் இறக்கி மண்ணை வாரி அணைத்து, நன்கு பாதம் கொண்டு அழுத்திட மண் இறுகி போத்துக்கு அசைவு கொடுக்காது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். சில நாட்களிலேயே கணுக்களில் இருந்து துளிர் விடத் தொடங்கும். ஓராண்டுக்குள் மரமாகி நல்ல பயன் தரும்’’ என்றார்.
ஒரு கன்று மரமாகி நிற்க ஆண்டுக்கணக்கில் ஆகும். அதேநேரம் வெட்டப்படவிருக்கும் வளர்ந்த மரத்தின் உயிரை பறிபோகாமல் காத்து, அதை அப்படியே இடம்மாற்றி நட்டுவைத்து நன்கு பராமரித்து வளர்த்தெடுப்பது இங்கு புது முயற்சிதான்.
மரத்தை மரமாகவே வளர்க்கும் நுட்பம் இன்று எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் பல பத்தாண்டு காலமாக வளர்ந்து நிற் கும் மரங்களுக்கு அத்தனை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது இப்போது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT