Published : 27 Jul 2018 09:30 AM
Last Updated : 27 Jul 2018 09:30 AM
எதிர்பாராத வகையில் வெற்றி சிக்ஸரை அடித்திருக்கிறார் இம்ரான் கான். அம்பயர் நாட் அவுட் என்று அவருக்கு சாதகமாக தவறான தீர்ப்பு கொடுத்து விட்டார் என்று உரத்து ஒலிக்கின்றன எதிர்க்கட்சிகளின் குரல்கள்.
சில போட்டிகளில் பந்து வீசுவதற்கு முன்பாக பந்தின் ஒரு பகுதியில் சோடா பாட்டில் மூடியால் தேய்த்து பந்தை உருமாற்றியதாக பல ஆண்டுகளுக்குப் பின் இம்ரான் கான் ஒத்துக் கொண்டது உண்டு. இந்த நேர்மையை அரசியல் களத்தில் அவரிடம் எதிர்பார்க்க முடியாது.
நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம் (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்) - இதுதான் இம்ரான் கான் 1996-ல் தொடங்கிய அமைப்பு. இது முதலில் ஒரு சமூக அரசியல் இயக்கமாகத்தான் உருவெடுத்தது. 1999-ல் அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டது. 2002 தேர்தலில் தனது சொந்த மண்ணான மியான்வாலி தொகுதிக்கு இம்ரான் கான் எம்.பி. ஆனார்.
‘சிந்தனைச் சுதந்திரம் தேவை, வருமான வரி இருக்கக் கூடாது, மதத்தை அடிப்படையாக் கொண்ட பாரபட்சம் இருக்கக் கூடாது’. இவற்றை அந்தக் கட்சி முன்
வைத்தது. 2002 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைப் பிடித்த இம்ரானின் கட்சி 2008 தேர்தலை புறக்கணித்தது. ஆனால் 2013-ல் 75 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மொத்த பாகிஸ்தான் அரசியலையும் இம்ரான் கான் தொடர்ந்து குறை கூறிவருகிறார். ஊழல் நிறைந்த, திறமையற்ற ஆட்சிகளை மட்டுமே பாகிஸ்தான்
இதுவரை கண்டிருக்கிறது என்றார். முகம்மது இக்பாலின் (தனி பாகிஸ்தானுக்கான இயக்கத்தை தீவிரமாக எடுத்துச் சென்றவர்) பாதையே சிறப்பானது எனும்
இம்ரான் கான், ஜின்னாவின் ‘இஸ்லாமிய ஜனநாயகக் கலாச்சாரத்தை’ பின்பற்றுவோம் என்றும் கூறுகிறார்.
இம்ரானின் முன்னாள் மனைவி ஜெமீமா, தெற்கு பஞ்சாபில் உள்ள உச் என்ற இஸ்லாமியக் கல்வி மையத்தின் கூரையிலிருந்த பழமையான 397 ஓடுகளை பிரிட்டனிலுள்ள தனது தாய்க்கு அனுப்ப முயற்சித்தார் என்று பாகிஸ்தான் சுங்கத் துறை 1999-ல் குற்றம் சுமத்தியது. “இது அரசியல் சதி” என்று அறிக்கை விட்டது இம்ரானின் கட்சி.
கிரிக்கெட் வாழ்க்கை
13 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் இம்ரான் கான்.1992-ல் கிரிக்கெட் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியபோது இவர்தான் அந்த அணியின் கேப்டன், வேகப்பந்து வீச்சாளர், அற்புதமான ஆல்ரவுண்டர். லாகூரில் படித்த இவர்,இங்கிலாந்திலுள்ள ராயல் கிராமர் ஸ்கூல் ஓர்செஸ்டரில் மேற்கல்வி பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
1971-ல் பர்மிங்ஹாமில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்தான் இவர் முதலில் களம் இறங்கினார். குறிப்பிடத்தக்க அளவுக்கு இவரது ஆட்டம் அப்போது இல்லை.
1974-ல் ப்ரூடன்ஷியல் கோப்பை பந்தயங்கள்தான் இம்ரானின் முதல் ஒரு நாள் போட்டிக்கு தொடக்கமாக அமைந்தது. 1976-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் ஆடிய அபாரமான ஆட்டம் அவரை மிகவும் கவனிக்க வைத்தது. 1982-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார். 28 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் வெற்றியை, இம்ரானின் தலைமையில், பாகிஸ்தான் சுவைத்தது.
தனது முகவாயில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்ரான் கான் 2 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார். 1987-ல் மீண்டும் களத்தில் இறங்கி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். 1987-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் அதற்கு அடுத்த வருடமே பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் விளையாடத் தொடங்கினார். 1992-ல் கிரிக்கெட்டிலிருந்து (மீண்டும்) ஓய்வு பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 3807 ரன்களும், 382 விக்கெட்களும் அவர் கணக்கில் இருந்தன. ஒரு நாள் போட்டியில் 3709 ரன்களும், 182 விக்கெட்களும் இருந்தன.
மிகச்சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பதற்காக விருதுகள் பெற்றவர் இம்ரான் கான். சர்வதேச கிரிக்கெட் குழுவில் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற ஒளி வட்டத்திலும் இவர் சேர்க்கப்பட்டார். சிறந்த பாகிஸ்தான் பிரதமர் என்ற பெயரை இவர் வாங்குவாரா?
திருமண வாழ்க்கை
தனி வாழ்வில் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர் இம்ரான். ஒரு ப்ளே-பாய் பிம்பமும் அவருக்கு உண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித்தை மதம் மாற்றி, 1995-ல்திருமணம் செய்து கொண்டார். சுலைமான்,காசிம் என்ற இரண்டு மகன்கள். ஒன்பது வருட மணவாழ்வு விவாகரத்தில் முடிந்தது.
இதையடுத்து, பி.பி.சி.யில் பணியாற்றிய பிரிட்டிஷ் – பாகிஸ்தான் வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். அவர் குடும்பத்திலேயே இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஒரு வருடத்துக்குள்ளாகவே விவாகரத்து நடைபெற்றது. பின்னர் பிப்ரவரி 2008-ல் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான்.
இதனிடையே, அமெரிக்காவிலுள்ள பிரபல மாடல் அழகி சீட்டா ஒயிட் என்பவர் இம்ரான் கானுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் டிரியனின் தந்தை இம்ரான் கான் என்றும் கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதை மறுத்தார் இம்ரான் கான். சீட்டா வழக்கு தொடர்ந்தார். ஒருவழியாக சீட்டாவுடன் தனக்கு தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டாலும் டிரியன் தன் மகள் அல்ல என்று சாதித்தார். ‘மரபணு சோதனைக்கு அவர் உடன்பட்டு இதை நிரூபிக்கட்டும்’ என்று சவால் விட்டார் சீட்டா. இம்ரானின் அடுத்த அமெரிக்க பயணத்தின்போது சீட்டாவையும் டிரியனையும் இம்ரான் சந்தித்தார். அதற்குப் பிறகு இந்த விஷயம் தலைப்புச் செய்தியாகவில்லை.
புற்றுநோயால் தன் தாய் இறக்க,லாகூரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை இம்ரான் கான் எழுப்பினார். ஏழைகளுக்கு அதில் இலவசச் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
தேர்தலுக்கு முன்பு இம்ரான் கட்சியுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்பியது. ஆனால் இம்ரான் ஏற்கவில்லை. தேர்தலுக்குப் பிறகாவது, பாகிஸ்தான் மக்கள் கட்சி அளிக்கும் ஆதரவை ஏற்று கூட்டணி ஆட்சியை இம்ரான் கான் அமைப்பாரா? அந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் ‘ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு’ எனும் புற்றுநோயை குணப்படுத்துவாரா? அதற்கு அந்த நாட்டு ராணுவம் சம்மதிக்குமா? காலம் விரைவிலேயே இந்தக் கேள்விகளுக்கான விடை கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT