Published : 20 Jun 2018 09:47 AM
Last Updated : 20 Jun 2018 09:47 AM
த
மிழகத்தைப் போலவே புதுச்சேரி நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பால் மறைந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரலாறு காணாத பருவமழை பெய்தது. இதனால் புதுச்சேரி முழுவதும் இருந்த நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க இயலாமல் போனது.
நீர் வீணாவதை தாங்க முடியாத இளைஞர்கள் சிலர் நீரை தேக்கி வைக்கும் முயற்சியில் களமிறங்கினர். புதுச்சேரியைச் சேர்ந்த ‘மிஷன் கனகன் டிசம் பர் 31’ அமைப்பின் கீழ் ‘விழித்தெழுந்த தமிழர் மாணவர் இளைஞர் பேரவை’, ‘உயிர்துளி உறவு கள்’ உள்ளிட்டவை அமைப்புகள் ஒன்றாக இணைந்து, ‘வாரம் ஒரு குளம்’ என ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் குளங்களை தூர்வாரும் பணியை செய்யத் தொடங்கினர்.
இதனால் கொம்பாக்கம், மூலகுளம், கோபாலன்கடை, சுல்தான்பேட்டை, நோணாங்குப்பம், கடுவனூர், தானாம்பாளையம், தேங்காய்த்திட்டு ஆகிய 8 குளங்களை தூர்வாரப்பட்டு தண்ணீரை நிரப்பிக்கொள்ள காத்திருக்கிறது.
தன்னலமற்ற இந்த சேவையை நேரில் பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். புதுச்சேரி - மரப்பாலம் பகுதி குளப்பகுதியை கூட்டமாக தூர் வாரிக் கொண்டிருந்தனர். தங்களது பெயர்களை முன்னிறுத்தாமல் தங்கள் அமைப்பை முன்னிறுத்தி பேசுகின்றனர்.
“தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து குப்பைக் கூளங்கள் மண்டிக் கிடக்கும் நீர் நிலைகளை தூர் வார முடிவு செய்தோம். முதலில் கனகன் ஏரியை தேர்ந்தெடுத்து 2017 டிசம்பர் 31-ம் தேதி களமிறங்கினோம். நாங்கள் 30 சதவீதம் தூர்வாரிய பின்னர், ஆளுநர் கிரண்பேடி அதனை பார்வையிட்டு, முழுவதும் தூர்வாரி செப்பனிட நடவடிக்கை எடுத்தார். இந்தப் பணி எங்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. உடனே, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளங்களை தூர்வாருவது என முடிவு செய்வோம். இதற்காக ‘மிஷன் கனகன் டிசம்பர் 31’ என்ற புதிய அமைப்பை தொடங்கினோம்.
50-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று கூடுகிறோம். எங்களால் முடிந்த தொகை அளித்து ஒரு குளத்தை முடிந்த வரையில் தூர்வாரி முடிக்கிறோம். தூர் வார ஒரு குளத்துக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது.
குளங்களை தூர்வாருவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று அப்பகுதி இளைஞர்கள், ஊர் முக்கிய பிரமுகர்களை அழைத்து பேசுவோம். குளத்தை தூர்வாரிய பின்னர் அவற்றை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். அவர்கள் பராமரிப்பதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அந்த குளத்தை தூர்வாருவோம். குளங்களை தூர்வாருவதுடன் நிறுத்தாமல், வாரம் ஒருமுறை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறோம்.
எங்களுடையே இந்த வேலைகளைப் பார்த்து அந்தந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் பாராட்டும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம்” என்றனர். இதே அமைப்பினர் சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘தூய்மை இந்தியா’ என்பது கவர்ச்சிகரமான விளம்பர பதாகைகளில் இல்லை. செயல்பாடுக ளில் இருக்கிறது. குளம் தூர்வாரும் தூய்மைப் பணிக்கான தூதுவர்களாக அவதாரம் எடுத்திருக்கின்றனர் இந்த இளைஞர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT