Published : 06 Jun 2018 08:34 AM
Last Updated : 06 Jun 2018 08:34 AM
அ
த்தனை போட்டித் தேர்வுகளிலும் முதன்மையானது, முக்கியமானது ‘ஐஏஎஸ் தேர்வு’ என்று பரவலாக அறியப்படும், யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தேர்வு. எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில், யுபிஎஸ்சி மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், கால அட்டவணையில் இருந்து துளியும் மாறாமல், துல்லியமாகத் தேர்வுகள் நடத்தி, தனது திறனை நிரூபித்து வருகிறது இந்தத் தேர்வாணையம்.
இந்த ஆண்டு சுமார் 780 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2013-ல் சுமார் 1,120 இடங்கள் இருந்தன. இதேபோல, தமிழகத்தில் இருந்து தேர்வாகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. குடிமைப் பணித் தேர்வின் முதல் நிலைத் தேர்வு (Peliminary Exam) கடந்த ஜூன் 3-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்வு எப்படி இருந்தது?
வரலாறு, புவியியல், அரசமைப்பு சட்டம் ஆகிய ‘பாரம்பரிய பகுதிகள்’ (conventional portions) சரியாகக் கையாளப்பட்டுள்ளன. மாறிவரும் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப, நவீனப் பாடங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வினாக்களாகக் கேட்கப்பட்டுள்ளன. வினாத்தாள் முழுக்க, தொழிற்முறை நிபுணத்துவம் (professional expertise) பளிச்சிடுகிறது. கேள்விகளின் வடிவமைப்பில் ஒருவித நேர்த்தி தெரிகிறது. கொள்குறி வகை வினாக்களில், தரப்படுகிற தெரிவுகள் (options), தரமானதாகத் தரப்பட்டுள்ளன. பல புதிய உத்திகள் முயற்சிக்கப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஆசிரியர் ஆவதற்குத் தேவையான தகுதி (கே. 91); தனிநபர் அந்தரங்க உரிமை - தனி நபர் உயிர்வாழும் உரிமை இடையிலான தொடர்பு (கே. 32); பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியப் பொருளாதாரம் சந்தித்த விளைவு (கே. 22); ‘சட்டத்தின் ஆட்சி’ உணர்த்துவது என்ன (கே. 70) ஆகிய வினாக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
இந்திய வன உரிமைச் சட்டம் 2006 (கே. 38), தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் (கே. 93, 95), பொருட்கள் மீதான சர்வதேசக் குறியீட்டு (பதிவு & பாதுகாப்பு) சட்டம் (கே. 96) பசுமைப் பொருளாதாரம் (கே. 8) என்று இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முன்னேற்றங்களை யுபிஎஸ்சி மிகச் சரியாக அடையாளம் கண்டு, அவற்றின் பக்கம் பார்வையைத் திருப்பி இருக்கிறது.
‘ஆதார்’ - எதிர்பார்க்கப்பட்டது. இதில், 2 கேள்விகள் (கே. 52, 87) மத்திய, மாநில அரசுகள் இடையே நிதிப் பங்கீடு (கே. 49, 97), ஜிஎஸ்டி விலக்கு பெற்ற பொருட்கள் (கே. 37) தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (கே. 33), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (கே. 44) ஆகியவையும் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளே.
சர்வதேச விவகாரங்களில் வினாக்கள், நடப்புச் செய்திகளுடன் நேரடித் தொடர்பு உடையதாக இருக்கின்றன. ‘இரு நாடு தீர்வு’ (கே. 94) அணுசக்தி சப்ளை குழு (கே.47) ஏமன், தெற்கு சூடான் இனப் பிரச்சினை (கே. 88), சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் 138 & 182 சம்மேளன தீர்மானம் (கே. 100), ‘ஆசியான்’ நாடுகள் (கே. 50), செய்திகளில் அடிபடும் சர்வதேச நகரங்கள் (கே. 62) என்று ஒவ்வொரு வினாவும் இன்றைய உலக நடப்புடன் நெருக்கமாய், மிகப் பொருத்தமாக விளங்குகின்றன.
ஆனாலும், வேறு இரு பகுதிகளில்தான் இந்தத் தேர்வு நம்மை வியக்க வைக்கிறது. தரமான தூய பொது அறிவுக்கு வழிகோலும் வினாக்கள் இருக்கின்றனவே.. அடடா! நீண்ட காலத்துக்குப் பிறகு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. ஒரு கேள்வி.. (கே. 99). ‘தீர்க்க ரேகை’ அடிப்படையில், டெல்லிக்கு அருகில் உள்ள நகரம் எது? அ) நாக்பூர் ஆ) புனே இ) ஹைதராபாத் ஈ) பெங்களூரு.
பொதுவாக நமக்கு, இந்திய வரைபடத்தை, மேலிருந்து கீழாகப் பார்க்கிற வழக்கம்தான் அதிகம். அதாவது, வடக்கு - தெற்காக. பக்கவாட்டில் பார்ப்பது மிக அரிது. ‘கிழக்கு, மேற்காகப் பார்த்தால், எது டெல்லிக்கு அருகில் உள்ளது?’ அருமையான கேள்வி. இதேபோல, கேள்வி எண் 76. மிக நீளமானது. ஆதலால் இங்கே தர இயலவில்லை.
எல்லாமே ‘டிஜிட்டல் பணம்’ என்றால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையைக் கொண்டுவந்து நிறுத்தி, ‘virtual network’ பற்றி கேட்டுள்ளனர். கேள்வி கேட்பதில் ஒரு புதிய உத்தி, புதிய வடிவம் இது. புதிய ஆரோக்கியமான முயற்சி.
அடுத்து ஒரு பகுதி. இளைஞர்களை அதிகம் ஈர்க்கக் கூடிய மின்னணு சாதனங்கள் பற்றிய கேள்விகள். அடுத்த நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டது தேர்வாணையம்.
‘டிஜிட்டல்' பரிமாற்றங்களில் BHIM பணி என்ன? (கே. 98), GPS தொழில்நுட்பம், எங்கு, எவ்வாறு பயன்படுகிறது? (கே 25), இந்தியாவில் உள்ள ATMகளை இணைக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது? (கே 55), ‘க்ரிப்டோ கரன்சி’, ‘ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்’ துறைகளில் புழங்கும் சொற்கள் என்ன? (கே. 74).
இந்திய போட்டித் தேர்வுகளில், ‘இளமைக்கு’ வழிகாட்டி இருக்கிறது ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு. சரியான தருணத்தில் ஏற்பட்டுள்ள மிக நல்ல முன்னேற்றம்.
மாலைப் பிரிவில், நுண்ணறிவுத் தேர்வு. ‘கிராஃப்’, வரைபடங்களைப் பார்த்து தீர்மானிக்கிற வழக்கமான வகையில் சில; இதுதான் பதில் என்று அறுதியிட்டுக் கூற இயலாத முறையில் சில; சற்றே கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிற சில என்று கதம்பமான வினாத்தாள். ஆனாலும், 80 வினாக்களில், எளிமையான 27 இருக்கவே செய்தது. (தகுதிக்கான 1/3).
இதேபோல, லாப நட்டக் கணக்கு, ஆட்களின் இருக்கை வரிசை, பருவகால மாற்றம் பற்றிய ஆங்கிலப் பத்தி ஆகியன, வழக்கத்தைவிடவும் எளிமையாகவே தோன்றுகிறது. கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகிற இந்தப் பகுதி, எளிமையாக அமைவது நல்லது. மொத்தத்தில், தரமான தேர்வை, சிறு தவறும் நேராத வகையில், சிறந்த முறையில் நடத்தி முடித்து, எண்ணற்ற இளைஞர்களின் நன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது தேர்வாணையம்.
ஆம்.. இந்தத் தேர்வின் மிகச் சிறந்த கேள்வி..? பரிசைத் தட்டிச் செல்கிற கேள்வி இதோ.. ‘proposis juliflora’ என்கிற தாவரம், செய்திகளில் வரக் காரணம் என்ன...? அ) அழகுப்பொருட்களில் அதிகம் பயன்படுகிறது; ஆ) வளர்கிற பகுதியைச் சுற்றிலும் பல்லுயிர்ச் சூழலை (bio-diversity) கெடுக்கிறது; இ) இதன் சாரம், பூச்சிக்கொல்லித் தொகுப்பில் பயன்படுகிறது; ஈ) எதுவும் இல்லை.
‘proposis juliflora’ என்றால், ‘நம்ம ஊரு’ கருவேல மரம்!
சமூக அக்கறை, இலக்கு நோக்கிய தேடல், இன்றைய, நாளைய தேவை உணர்ந்த வெளிப்பாடு மற்றும் எளிமையான அர்த்தமுள்ள வினாக்களால், உயர் தரத்துடன் உயர்ந்து நிற்கிறது யுபிஎஸ்சி. சபாஷ்! சபாஷ்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT