Published : 09 Jun 2018 08:59 AM
Last Updated : 09 Jun 2018 08:59 AM
தடுப்பணைகள் அமைக்கப்படாததால் தென்பெண்ணை ஆற்று தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. பாசனத்துக்கு கிடைக்க வேண்டிய ஆற்று நீர் வீணாக கடலில் கலப்பதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று தென்பெண்ணை ஆறு. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து 430 கி.மீ. தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்த ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீட்டர் பாய்கிறது. பின்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 கி.மீட்டரும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி. மீட்டரும் பயணம் செய்து, இறுதியில் கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணை ஆறுகளாகும்
நீர்த்தேக்க கட்டமைப்புகள்
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள் ஆகும்.
இந்த ஆற்றில் வெள்ள காலத்தில் திரண்டு வரும் நீரைத் தேக்கி வைக்க விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் - கடலூர் இடையே எந்தவிதமான நீர்த்தேக்க கட்டமைப்புகளும் இல்லை.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கொம்மந்தான்மேடு பகுதியில் பெயரளவுக்கு ஒரு தடுப்பணை இருக்கிறது. அதனால் பெரிய அளவில் நீரை சேமிக்க முடியவில்லை.
ஆண்டுதோறும் தொடரும் அவலம்
கிருஷ்ணகிரி தொடங்கி கடலூர் மாவட்டம் வரையில் 6 மாவட்டங்களில் காவேரிப்பட்டிணம், இருமத்தூர், அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அக ரம் பள்ளிப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர், பேரங்கியூர், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், கடலூர் ஆகியன இந்த ஆற்று வழி ஊர்கள். இந்தப் பகுதி பாசனம் தென்பெண்ணை ஆற்றையே பிரதானமாக நம்பியிருக்கிறது.
32 டிஎம்சி நீர் வீண்
கடந்த 2015-ல் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 32 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. கடந்த ஆண்டு கேஆர்பி அணையில் மதகு சேதமடைந்ததை அடுத்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
முறையான தடுப்பணைகள் இல்லாததால் சுமார் 4 நாட்களில் 7 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது.
தற்போது கர்நாடகாவில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
தென்பெண்ணையில் அதிக நீர்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை தண்ணீரும் சேர்ந்து கிருஷ்ணகிரி அணைக்கு (கேஆர்பி அணை) விநாடிக்கு 1068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கேஆர்பி அணையின் (கிருஷ்ணகிரி அணை) மதகு சரிபடுத்தும் பணி நடந்து வருவதால் அணையில் இருந்து விநாடிக்கு 2,064 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆறு, பாசன கால்வாய் ஆகியவற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப் பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2,064 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆறு செல்லும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கட லூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
7 டிஎம்சி நீர் வீணாகும்
கிருஷ்ணகிரி அணையில் திறக்கப்படும் தண்ணீர் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கடலூர் தாழாங்குடா பகுதியில் வீணாக கடலில் கலக்கும்.
நீர்வரத்தைப் பொறுத்து சுமார் 5 டிஎம்சியில் இருந்து 7 டிஎம்சி தண்ணீர் கட லில் கலக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக் கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஆங்காங்கே மாவட்டத்துக்கு ஒரு தடுப்பணை கட்டினால் அந்தந்த மாவட்ட விவசாயத்துக்கு பலன் கிடைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும். உதாரணத்துக்கு 7 டிஎம்சி தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தினால் 50 ஆயிரம் ஏக்கரில் 3 போகம் விளைச்சல் காணலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதனால்தான் ஒவ்வொரு முறையும் நீர் வீணாகும்போது, தடுப்பணை கட்டி நீரை தேக்கிவைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT