Published : 09 Jun 2018 09:04 AM
Last Updated : 09 Jun 2018 09:04 AM
இந்தியாவிலேயே முதல் முறை யாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 10 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக மலைபோல குவிந்திருந்த 2 லட்சம் டன் குப்பை 3 ஆண்டுகளிலேயே மறுசுழற்சிக்காக அகற்றப் பட்டுள்ளது.
கும்பகோணம் நகராட்சியின் 45 வார்டுகளில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் இருந்து தினமும் சுமார் 70 டன் குப்பை சேகரிக்கப்பட்டு தேப்பெருமாநல்லூரில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.
புகை மூட்டத்தால் மக்கள் அவதி
23 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியால் வாங்கப்பட்ட, சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் 10 ஏக்கர் பரப்பளவில் மலை போல குப்பை குவித்து வைக்கப்பட்டது. குப்பைக் குவியலில் அவ்வப்போது தீப்பற்றி புகை மூட்டத்தால் அப்பகுதியில் வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தினமும் குப்பை குவிந்துவந்த நிலையில் மக்கும், மக்காத குப்பை எனப் பிரித்து மறுசுழற்சிக்காக அனுப்புவதென நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, ஜிக்மா என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் தொடங்கியது.
10 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பையை தினமும் இயந்திரத்தின் உதவியுடன் பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டை, ரப்பர், செருப்பு, டயர், தேங்காய் நார், இரும்பு என 15 வகையான பொருட்கள் தனி்த்தனியாக பிரிக்கப்பட்டன. இப்பணி யில் தினமும் 80-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.
மக்கும் குப்பை உரமானது
அவற்றில் உள்ள மண் பிரிக்கப்பட்டு மக்கும் தன்மையுடைய குப்பை தனியே பிரிக்கப்பட்டு தேங்காய் நார், மரத்துகள்கள் உள்ளிட்டவை எரிபொருளுக்காக ஹோட்டல்களுக்கும், மக்கும் பிற குப்பை வயல்களில் உரமாகப் பயன்படுத்தவும், தேங்காய் சிரட்டைகள் செங்கல் சூளைக்கும் அனுப்பப்பட்டன.
பிளாஸ்டிக் பைகள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. செருப்பு உள்ளிட்ட ரப்பர் பொருட்கள் ராணிப்பேட்டைக்கும், இரும்பு உள்ளிட்ட பொருட் கள் சேலத்துக்கும் அனுப்பப்பட்டன.
கடந்த 2015-ம் ஆண்டு 1.40 லட்சம் டன் குப்பை இருந்தது. கடந்த 2016-ல் மகாமகப் பெருவிழா நடைபெற்ற நிலையில், 60 ஆயிரம் டன் குப்பை இங்கு சேர்ந்தது. மொத்தம் 2 லட்சம் டன் குப்பையும் தரம் பிரிக்கப்பட்டு உரமாகப் பயன்படுத்த, மறுசுழற்சிக் காக என அனுப்பப்பட்டுவிட்டது.
இதுகுறித்து ஜிக்மா நிறுவன இயக்குநர் பி.தர்மராஜ் கூறும்போது, “கும்பகோணம் நகராட்சியில் குவிந்திருந்த குப்பையை அகற்றும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. 2 லட்சம் டன் குப்பை முழுவதும் 3 ஆண்டுகளிலேயே தரம் பிரித்து அகற்றப்பட்டு, குப்பைக் கிடங்கு தற் போது மைதானம்போல மாறியுள்ளது” என்றார்.
நாட்டிலேயே முன்மாதிரி
இதுகுறித்து நகராட்சி ஆணை யர் கே.உமாமகேஸ்வரி கூறியபோது, “குப்பையை தரம் பிரிக்கும் பணி கும்பகோணம் நகராட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குப்பை அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக் காக வெளியே அனுப்பப் பட்டுள்ளது.
இது, இந்தியாவிலேயே நகராட்சிகள் அளவில் கும்பகோணம் நகராட்சியில்தான் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளில் முன்மாதிரி பணியாக, கும்பகோணம் நகராட்சியின் இப் பணி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT