Last Updated : 25 Jun, 2018 04:29 PM

 

Published : 25 Jun 2018 04:29 PM
Last Updated : 25 Jun 2018 04:29 PM

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்

மஞ்சள்  நிறக் கதிரவன் அதிகாலை ஒளிக்கீற்றுகளை வீசும்வரை தோழியுடன் அந்தப் பூங்காவில் பல நாட்கள் நடைப்பயிற்சி  மேற்கொண்டிருக்கிறேன்.

வடசென்னையின் அனைத்து தரப்பு  மக்களையும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக  அங்கு கடந்துவிடலாம். அருகம்புல் சாறு தம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு கூட்டம் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க (காலை வேளைகளில் நடைப்பயிற்சிக்கு வருபவர்களைவிட அங்கு விற்கும்  ஆரோக்கிய உணவுகளை வாங்குபவர்கள்தான் அதிகம்) மறுபக்கம் காதுகளில் ஹெட்செட் அணிந்துகொண்டு ஒரு கூட்டம் முன்னே ஓடிக் கொண்டிருக்கும்.,

இவர்களுக்கு எதிர் திசையில் வெறும் கால்களுடன்  விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் சிறுவர்களுக்கு மத்தியில்  அருகில்  ஒரு கூட்டம் யோகா பயிற்சிகளை மேற்கொண்டிருக்கும்.

இதே காட்சிகளை பல நாட்கள் கண்டதால் இன்னும் இன்னும் அதன் பிம்பங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது அந்தப் பூங்காவுக்குச் செல்வதில்லை. ஆனால் இன்னும் கூடுதல் வண்ணங்களுடன் புதுப்புது மனிதர்களுடன்  நாட்களைக் கடத்திக் /கழித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பூங்கா.

முரசொலிமாறன் பாலம் கீழே அமைந்துள்ள பெரம்பூர்  ஃப்ளை ஓவர் பூங்காவை பற்றித்தான் சொல்கிறேன்.

பெரம்பூர்.. வடசென்னையின் பெரிய தொகுதி. வட சென்னையின்  பெரிய தொழில் நகரம். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகட்டி வாழும் பகுதி. மாதம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் என அனைவருக்குமான ஓரளவு   பொருளாதார வசதிகள் நிறைந்த பகுதி பெரம்பூர்.

சாமானிய மக்களுக்கான பொருளாதார வசதிகள் மட்டுமில்லை. பெரம்பூருக்கு என  பல தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது 1952 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட பெரம்பூர் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை. இங்கு உற்பத்தியாகும் ரயில் பெட்டிகளும், ரயிலின் பிற உபகரணங்களும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது தனிச் சிறப்பு .

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அரசுப் பள்ளிகள்…

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிக்கும், பெரம்பூர் எம். எச். ரோட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜமாலியா அரசுப் பள்ளி, பந்தர் கார்டன்  போன்ற ஏராளமாக தரம் மிகுந்த அரசுப் பள்ளிகள் பெரம்பூரைச் சுற்றிலும் உள்ளன.

 

வடசென்னையைப் பற்றிய இந்தத் தொடரில் இந்த முறை பெரம்பூரைப்  பற்றி பெரம்பூர் வாசியுடன் ஆரம்பித்தால்தானே நன்றாக இருக்கும்? இதோ, பெரம்பூர் வாசியும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல்  ஆய்வு மாணவருமான சுரேஷ் நம்மிடையே…!

’’ஒருகாலத்தில், மூங்கில் காடுகளால் நிறைந்திருந்த பகுதியாம் இது. எனவே, இது பெரம்பூர் என அழைக்கப்படுகிறது என்று இங்கிருக்கும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குதான்… பெரம்பூர் 25 வருஷத்துக்கு முன்னாடி, மிகவும் புகழ் வாய்ந்த தொழில் நகரமாக இருந்தது. உதாரணத்துக்கு பெரம்பூர் பாரக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பின்னி மில்லைச் சொல்லலாம்.  1990 ஆம் வருஷத்தில், சுமார் 20,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்த இடம் இந்த பின்னி மில்.

இங்கிருந்து உலகெங்கிலும் பல நாடுகளுக்கு ராணுவத்துக்கான உடைகளை, ஷூக்களை  ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். தற்போது சென்னையின் நவ நாகரீக அடையாளமாகப் பார்க்கும் அண்ணா நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு அப்போது பெரம்பூரின் வளர்ச்சி இருந்தது.

ஆனால் இன்றோ சினிமா காட்சிகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இரையாகி விட்டது என்ற கனத்த குரலில் கூறும் சுரேஷுக்கு சற்று இடைவேளைவிட்டு…

வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், அந்த மக்களின் உணர்வுகளில் கலந்துள்ள பின்னி மில்லின் தற்போதைய நிலை பற்றி கூறி ஆகவேண்டும். நான் வளர்ந்தது பெரம்பூரின் பகுதியில் என்பதால் இங்கிருப்பவர்கள் தங்களுக்கான பெருமைக்குரிய இடமாகவே பின்னி மில்லைப் பார்ப்பதை பலமுறை உணர்திருக்கிறேன்.

இன்னும் எனக்கு நினைவிக்கிறது. பள்ளி நாட்களில் எனது தோழி மதுவின் பாட்டி ஒருமுறை, அவரது கணவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, பின்னி மில் பற்றி அடிக்கடி கூறுவார். அந்தத் தொழிற்சாலையில் ஒலிக்கும் சங்கு எப்படி கேட்கும் தெரியுமா… உங்களுக்கெல்லாம் அது தெரியாது? என்பார்… அந்தப் பாட்டிக்கு அவரது கணவர் வேலை செய்த பின்னி மில்லைக் கோயிலாகத்தான் பார்த்தார். ஆனால் எனக்கோ  அங்கு   எடுத்த பாடல்கள் பலவும் நினைவக்கு வந்தன.

 

 

எங்களுக்குள் இருந்த தலைமுறை இடைவெளியால் அப்போது என்னால் அவரின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவரது பேச்சில் இருந்த தவிப்பை ஆழமாக உணர்கிறேன்.

உண்மைதான். இன்றும் கூட, “எப்படி இருந்த இடம் தெரியுமா? எங்களுக்கு சோறு போட்ட இடம்... இப்ப ரியஸ் எஸ்டேட் காரங்க கையில போயிடுச்சுனு” ஏமாற்றப்பட்ட   குரல்கள் பின்னி மில்லைச் சுற்றிலும்  வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை காது கொடுத்து கேட்கத்தான் ஆளில்லை. அது பழைய கதையாகிவிட்டது. அங்கிருப்பவர்களுக்கும் அது பழகிவிட்டது.

ஆனால் பின்னி மில்லை அடுத்த தலைமுறை நிச்சயம் உணர வேண்டும். ஏனெனில் பின்னி மில்  வரலாறு வடசென்னையின் வரலாறோடு பிணைந்துள்ளது. அதனை வரும் தலைமுறைகளுக்கு கொண்டுசென்றே தீர வேண்டும்.

அதற்கு பல முக்கிய காரணங்களும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று. பின்னி மில்லில் 1918-ம் ஆண்டு செல்வபதி செட்டியார் என்பவரால்  ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் தான் இந்தியாவின் முதல் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம். பெரம்பூரின் பட்டாளம் பகுதியில் உள்ள  ஸ்ட்ராகன்ஸ் சாலையில்  பராமரிப்பின்றி பாதிப்படைந்து காணப்படும் அதன் அலுவலகத்தை நீங்கள் இன்றைக்கும் பார்க்கலாம்.

 

மேலும் பின்னி மில் பல்வேறு முற்போக்கான போராட்டங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அதுகுறித்து  கூறுகிறார் சுரேஷ். 

”பின்னி மில்லில் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வுகள் பல நடந்துள்ளன. அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த திரு.வி.கல்யாண சுந்தரனார் தலைமையில்  பின்னி மில்லில் 1921-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி முதல் பின்னி மில் தொழிலாளர்கள்   வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பின்னர் இந்தப் போராட்டம் இரு சாதிப் பிரிவு தொழிலாளர்களுகிடையே ஏற்பட்ட போராட்டமாக மாறியது.

இந்தப் போரட்டம் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் கலவரமும் ஏற்பட்டது. இந்தக் கலவரம் குறித்து  மகாத்மா காந்தி செப்டம்பர் 16, 1921 அன்று சென்னை கடற்கரையில் உரையாற்றியிருக்கிறார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும்  முக்கியமானதொரு போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.  இவ்வாறு பல புரட்சிகள் தோன்றிய பின்னி மில் 1996 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

மூடியது பின்னி மில் மட்டுமல்ல... அந்த நிறுவனத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் பொருளாதார தேவைகளும், கனவுகளும் கேள்விக்குறியாயின.

புரட்சிகள் மட்டுமல்ல, பின்னி மில் அப்போதிருந்தே திரைப்படத் துறையுடன் தொடர்பில் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பின்னி மில்லில்தான் அவர்களுக்கு தேவையான லெதர் ஆடைகளை வாங்குவார்களாம். இதன் காரணமாக அப்பகுதியில் சினிமா ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள் அப்பகுதியில்  அதிகம்.  எம்ஜிஆருக்கு அங்கு கோயில் எல்லாம் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

தற்போது பின்னி மில்லை விட பரப்பளவில் பெரிய  சிம்சன் தொழில் நகரம், பெரம்பூரில் இயங்கி வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது பின்னி மில்லுடனான தொடர்பிலிருந்து அந்த மக்கள் மீண்டு வருகிறார்கள். எனினும் அந்த நிறுவனம் இயங்கிய காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எழுப்பப்பட்ட நினைவுகளும், நினைவுச் சின்னங்களும் அங்குதான் உள்ளன” என்றார்.

இவ்வாறான பல முற்போக்கு, திரைப்படத்துறை  என்றெல்லாம் அறியப்பட்ட பின்னி மில்,  தற்போது அதற்கான சுவடுகளே இல்லாமல்  ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தாங்கத் தயாராகி வருகிறது.

 

 

அதில் வேலை செய்த தொழிலாளர்களோ  மின்னி மில் பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட 14 ஏக்கர் நிலத்தை கேட்டு ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அருந்ததியர் காலனி

பின்னி மில்லுக்குப் பின்னால்,  நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது அருந்ததியர் காலனி. பின்னி மில்லுடன் தொடர்புடைய பல மக்கள் இங்குதான் வாழ்கிறார்கள்.

அருந்தியர் காலனியில் மொத்தம் 6 தெருக்கள்.  கோவிந்தபுரம், செங்கன்தெரு, கந்தன்தெரு, வீரராகவன்தெரு, போலேரியம்மன் கோயில் தெரு, தாசரிதெரு, பங்காருதெரு, ரங்கப்பன்தெரு என்ற பெயர்களை தாங்கி முற்றிலும் குறுகலான சாலைகளாக நிறைந்திருக்கிறது அருந்ததியர் காலனி.

தெருவின் இறுதியில் அமைந்திருக்கும் அந்த அரசுப் பள்ளியை நோக்கி வண்ணத்து பூச்சிகளாக வாண்டுகள் ஓடிக் கொண்டிருக்க…எந்த தெருவுக்குள் நுழைவது என்ற குழப்பத்தில் நின்று கொண்டிருந்தேன்…

ஒரு பெண் அருகில் வந்தார்.. யார் விலாசமாவது தெரியணுமா? இந்த ஏரியாவா நீங்க? என அடுத்தடுத்த அவரது கேள்விகளுக்கு பதில் கூறாமல் நான் வந்த விஷயத்தைச் சொன்னேன். கொஞ்ச  நேரம் பேச முடியுமா என்றேன்… சிரித்துக் கொண்டே அங்கிருந்து  பச்சை வண்ணம் அடித்த வீட்டின் சந்தில் ஓடி மறைந்தார்.

யார் இது என்ற தொனியில் அந்த தெருவிலிருந்த அனைவரும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். மரப்பலகை அடித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எனக்கு எதிர் திசையில் இருக்கும் அந்தக் கடையின் பக்கம் திரும்பினேன். கடும் வெயில் என்பதால் கடையின் முன்னர் பெரிய பேனர் ஒன்றை ஸ்கிரீன் போல தொங்கவிட்டிருந்தார் கடைக்காரர்.  அந்த பேனரை நகர்த்தினேன்.

என்னைக் கண்டதும்  செய்த வேலையை நிறுத்தினார். என்னம்மா வேண்டும் என்றார். சில தகவல்களுக்காக இங்கு வந்தேன் என்றேன். ஏதாவது உதவி பண்ணப் போறீங்களா பேப்பரா?….டிவியா? என்று கேட்டார் சிரித்துக் கொண்டே..

அங்கிருந்த மர நாற்காலியின் தூசைத் தட்டிவிட்டு அமரச் சொன்னார்.  முதலில் சற்று நெருடலுடன் தான் அந்த நாற்காலியின் முனையில் மட்டும் அமர்ந்தேன்..... சாப்பிட்டியா என்றார் அவரது கனிந்த குரல் நாற்காலியில் அமரச் செய்தது.

அவரது பெயர் குப்புசாமி. லெதர் குப்புசாமி! அப்படி அழைத்தால்தான் இங்கிருப்பவர்களுக்கு அவரைத் தெரியும். 

எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதிய ’பேட்டை’ என்ற நாவலில் வடசென்னையின் வாழ்வியலையும் அந்த மக்களின் மொழியையும் வாசகர்களிடம் மெல்ல..மெல்ல கடத்தியிருப்பார்.  அந்த நாவல் தொடங்குவதற்கு முன்னர் சென்னையில் பேட்டைகள் எப்படி பிறந்தன என்று முன்னுரை கொடுத்திருப்பார்.

 அதில் குறிப்பாக சிறு தொழில் செய்யும் மக்கள், எவ்வாறு கூட்டமாக பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு  அழைத்து வரப்படுகிறார்கள், பின்னர் அங்கிருந்து அவர்களது வாழ்வியல் பயணம் எப்படித் தொடங்கிறது என்று கூறியிருப்பார்.. குப்புசாமியின் பேச்சும் அவரது அருந்ததியர் காலனியும் எனக்கு அதைத்தான் நினைவுபடுத்தின…

அந்தப்பகுதி முழுவதும் காலனிகள் சார்ந்த கடைகள்தான் ஏராளம்..அப்பகுதியில் உள்ள மக்களும் அந்த தொழில் சார்ந்து இயங்கும் மக்கள்தான்.

தனது சிறிய கடையில் அனைத்து மதக் கடவுள் படங்களுக்கு இடம் கொடுத்திருக்கும் குப்புசாமி கதை இதோ  “ பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த அருந்ததியர் காலனிதான்…என் தாத்தா… என் அப்பா… எல்லோரும் இந்தத் தொழில்தான். ஆனா இப்போ என்  பசங்க இந்த வேலையப் பாக்குறது இல்ல… முதல்ல இந்தத் தொழில இங்க இருக்குற 90% பேர் செஞ்சாங்க…இப்போ 25% பேர் செய்றது கூட இல்ல. குறைஞ்சுபோச்சு. என்று உற்சாகமாக ஆரம்பித்தவரின் குரல்  சற்று நடுங்கியது.

தொடர்ந்து பேசினார் குப்புசாமி..

’’இப்பலாம் இங்க நிறைய பிராண்டட் கம்பெனிங்க வந்திடுச்சு…சுமார் பத்து பேர் வேலை செஞ்ச கடைமா இது.  பொருளாதார சூழல்... இப்போ இரண்டு பேர்தான் இருக்கோம். சரி கடையை எப்படியாவது பெரிசுபடுத்த பேங்க்ல லோன் கேட்டா, தர முடியாதுன்னு சொன்னாக் கூட பரவாயில்ல. ஆனா லோனும் தராம  அலையவிடுறாங்க. இதன் காரணமா இங்கிருக்கும் பலர் இந்தத் தொழிலையே கைவிட்டுட்டாங்க.

 

நமது பிரதமர் மோடி சொல்லிக்கிட்டுதான் இருக்காரு. ஆனா ஒண்ணும் செஞ்சபாட்டைக் காணோம்.  சொல்லப் போனால் இங்க இருக்கிற கம்பெனிகளைத் தூக்கி அம்பத்தூர்ல கொண்டு போயிட்டாங்க. இதுல பாதி பேர் வேலையவே இழந்துட்டாங்க.

இருந்தாலும் எங்களத் தேடி வரவங்க வந்துட்டுத்தான் இருங்காங்க என்று அவர் கூறி முடிப்பதற்கு முன்னதாக, பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில்,” என்ன அண்ணா ரெடியா என்றார்.  குப்புசாமியோ, ’பாய் தங்கச்சி ஒரு மணி நேரம் டைம் கொடு’ என்று கூற, அவரும் அங்கிருந்து தலையை ஆட்டியபடி சென்றுவிட்டார்.

பாத்தீங்களா...இந்த மாதிரி தேடி வந்து ஆர்டர் கொடுக்குற ஜனங்க இன்னும் இருக்காங்க. அவங்கள நம்பித்தான் ஓட்டிட்டு இருக்கோம். 12 , 13 சைஸ்ல பெரிய பெரிய ஷூக்கள் ஆர்டர் கொடுப்பாங்க. விபத்துல கால்  இழந்தவங்களுக்குத் தேவையான ஷூக்களையும் செஞ்சு  தருகிறேன்… என்னிடம் இந்த பிராண்டட் கம்பெனிகளைவிட  தரமாத் தர முடியும். ஆனால் அதை நம்பறதுக்கு  ஜனங்க தயாரா இல்ல. அவங்களா கண்ணாடிப் பெட்டிக்குள்ள வைச்சு வித்தக் காட்டுறதுல பழகிட்டாங்க. அதனால எங்கள நம்பமாட்டாங்க.  இருந்தாலும் நான் இருக்கிற வரை இந்தத் தொழில விடமாட்டேன் இது எங்களோட அடையாளம்” என்று மீண்டு அந்த நீண்ட ஊசியை எடுத்து தைக்க ஆரம்பித்தார். நான் அங்கிருந்து விடைபெற்றேன்…

’ஆடுகளம்’ திரைப்படத்தில் மதுரையில் ஆங்கிலோ இந்தியர்கள் மட்டும்  வசிக்கும் பகுதியை காட்டியிருப்பார்கள் அதேபோன்று  பெரம்பூரில் ஆங்கிலோ இந்தியர்கள் வசிக்கும் திருவள்ளுர் சாலை உள்ளது.

பட்டாளம், புளியந்தோப்பு என்று பெரம்பூர் பகுதிகளை குட்டி குட்டி தொழில் நிறுவனங்களை நாம் பார்க்கலாம். இம்மக்கள் நிறுவனங்களில் வேலை செய்வதைக் காட்டிலும் சுயமாகத்  தொழில் செய்ய வேண்டும் என்றே அதிகம் விரும்புகிறார்கள்.

குறைந்த ஊதியம் பெற்றாலும் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்று விரும்பும் கூட்டம் அங்கு இன்று காணப்படுகிறது.. அந்தக் கூட்டம் கம்ப்யூட்டருக்கு முன்னும், இணையத்துக்கும் முன்பு அடிமையாகாத கூட்டம்.

எனினும் அவர்களுள் சிலர் யதார்த்தங்களை சந்தித்து தானே ஆக வேண்டும். அருந்ததியர் நகரில் அறிமுமான குப்புசாமியின் மூன்று குழந்தைகளுக்கும் அவரது தொழிலைச் செய்வதற்கு விருப்பமும் இல்லை. குப்புசாமியும் அதனை விரும்பவும் இல்லை. இவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த தலைமுறைகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்!

வடசென்னையிலிருந்து சற்று வெளியேறி பிற பகுதி மக்களுக்கு அறிமுகமாகும்போது ஏதோவித சிறு வேறுபாட்டை  உணர்ந்திருக்கிறேன்  என்கிறார் சுரேஷ் ,

’’சென்னை... என்னுடைய சிறுவயதில்  எல்லோரும் பொது என்ற எண்ணம் நான் வளர்ந்த சூழ் நிலையாலோ  அல்லது என்னைச் சுற்றியிருந்த மக்களாலோ எனக்குள்ளே புகுந்திருந்தது. ஆனால் நான் எனது பள்ளிப்படிப்பை முடித்து , கல்லூரிக்காக வடசென்னையிலிருந்து வெளியே செல்லும்போதும்  ஒவ்வொரு மனிதரைச்  சந்திக்கும்போதும்   ஒரு சிறிய  வேறுபாட்டை உணர்ந்தேன். எனது கல்லூரியின் இறுதி ஆண்டில்தான் வகுப்பு நண்பர்கள் சிலர் என்னிடம் பழகுவதற்கும், அவர்களே பிறரிடம் பழகுவதற்கும் உள்ள வேறுபாட்டை என்னால் அறிய முடிந்தது.

எனது பொருளாதாரத்தைத் தாண்டி எனது உடை, மொழி அனைத்திலும் என்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தார்கள். நிஜம் வேறு என்பதை உணர்ந்தேன். நம்மைப் பற்றி இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொய் பிம்பத்தை உணர்ந்தேன்.. இங்கு அனைவரும் பொது அல்ல. இங்கு வேறுபாடுகள் உள்ளன. எனது மொழிசார்ந்து அவர்களிடமிருந்து வேறுபடுவதாக அவர்கள் கூறினார்கள். நானும் பல தருணங்களில் எனது மொழி நடையை மாற்ற முயற்சிப்பேன். .ஆனால் அதை மீறி என் மொழி வந்துவிடும்.  அது இயல்பு தானே. ஒருமுறை ரேடியோவில் நாடகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அதன் இயக்குனர் என்னை சாதாரணமான தமிழில் பேசும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்கள் எனது மொழி நடையை ஏற்க விரும்பவில்லை. அவர் என்னுடய மொழி நடை நேயர்களிடம் தொடர்புப்படுத்திக் கொள்ளாமல் போய்விடும் என்று திரும்பத் திரும்பக்  கூறினார். அவரது பேச்சு எனக்கு சிறிய நெருடலை ஏற்படுத்தியது.

 

 

இதில் என்ன வேடிக்கை என்றால் வடசென்னையிலுள்ள குட்டி குட்டி பெட்டிக்கடைகளில்தான் இவர்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஒருவழியாக நான் எனது மொழி நடையை மாற்றி அந்த நாடகத்துக்கான டப்பிங்கை முடித்தேன். ஆனால் தற்போது  நான் பக்குவப்பட்டிருக்கிறேன். இடத்திற்கேற்றப்படி பேச கற்றுக் கொண்டேன்.  என் தலைமுறை சற்றே மாறி இருக்கிறது . நாங்கள் இடத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள கற்றுக் கொண்டுவிட்டோம். எங்கள் நகரத்தின் மீதான பொய் பிம்பத்தை உடைத்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஆனால் தற்போது பல இடங்களில் வட்டார மொழிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பதை நான் மறுக்கவில்லை.  நமது அடிப்படைக் கல்வி உள்ள குறையினால் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாமல் உள்ளது.

பண்பாட்டு ரீதியிலான கல்விதான் தேவையானது என்று என் துறைத் தலைவர்  கூறுவார். நாம் என்ன பண்பாடோ அதைச் சார்ந்துதான் இயங்க வேண்டும். ஆனால்  நாம் அதை அடைவதற்கான காலம் இன்னும் தூரம் இருக்கிறது.

என்னைச் சார்ந்த மக்கள் கடும் உழைப்பாளர்கள். ஆனால் என்னை வேறுபடுத்தி பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட் வொர்க்  தொழிலாளர்களாக இருக்கிறார்கள். கடின உழைப்பு மட்டுமல்லாது அதில் ஸ்மார்ட் வொர்க்கும்  வேண்டும் என்று அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். என் மக்களும் வெளியேவரும்போது கற்றுக் கொள்வார்கள். என் நகரம் மேலும் வண்ணமாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று விடை பெற்றார் சுரேஷ்.

வடசென்னையின் அழகியலைத் தேடிக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் பெரம்பூர் பல வண்ணங்களை உங்களிடம் தீட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

பயணங்கள் தொடரும்..

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x