Published : 22 May 2018 09:28 AM
Last Updated : 22 May 2018 09:28 AM
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கனிம வளங்கள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு பயன்படும் லிக்னைட், சுண்ணாம்புக் கல், சிலிக்கா மணல், மாக்னசைட், டியூனைட், இரும்புத்தாது ஆகியவற்றுடன் கிரானைட்டும் கிடைக்கிறது. இதுதவிர பொது உபயோக கனிமங்களான ஜல்லி, கிராவல், செங்கல் களிமண், மணல் போன்றவை யும் கிடைக்கின்றன.
தமிழகம் முழுவதும் அகழ்ந்து எடுக்கப்படும் கனிமங்களுக்கான உரிமத்தை தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கி வருகிறது. கடந்தாண்டு நிலவரப்படி பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், மேக்னசைட், இலுமனைட், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பெருங்கனிம வளங்களை 84,438.87 ஹெக்டேரில் எடுத்துக் கொள்ள 554 உரிமங்கள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் கிரானைட், கல், மண், கிராவல், சவுடு உள்ளிட்ட சிறு கனிமங்கள் சமீபத்தில் கனிமங்களாக வகைப்படுத்தப்பட்ட குவார்ட்ஸ், ஜிப்சம், தீ களிமண், சிலிகா மணல் ஆகியவற்றை 8,186.87 ஹெக்டேரில் எடுக்க 3,366 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற் றில் கல், மணல் உள்ளிட்ட சிறு கனிமங்களுக்கு மட்டும் 2,156 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் அழகப்பாபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் கடற்கரையோரம் கிடைக்கும் கனிம மணலை அகழ்ந்தெடுக்க 2004 முதல் 2024 வரை 20 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், விளவங்கோடு வட்டத்தில் கீழ் மிடாலம், மிடாலம் ஆகிய இடங்களிலும் தாது மணல் எடுத்துக் கொள்ள 2008 முதல் 2038 வரை 30 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் புகார்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாதுமணல் கொள்ளை தொடர்பான புகார்களை அடுத்து கடந்த 2013-ல் அப்போதைய மாநில வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2011 வரை அனுமதி அளிக்கப்பட்ட 52 குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
கடற்கரை பகுதியில் 0.2 முதல் 0.3 மீ ஆழத்துக்குள்ளும் ஊர்ப்பகுதியில் 1 மீட்டர் ஆழத்துக்குள்ளும் மணலை வெட்டி, அதை கூடை உதவியுடன் அள்ளி எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை மீறி முழுக்க இயந்திரங்களால் மணல் அள்ளி எடுக்கப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவித்தது. கடற்கரையோரம் இருந்த தேரிகள் எனும் மணற்குன்றுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. அரசு குத்தகை வழங்கிய நிலத்தை பெயரளவுக்கு மட்டும் வைத்துக்கொண்டு அதைவிட பல மடங்கு அனுமதி பெறாத நிலத்தில் தாது மணல் அள்ளப்பட்டதாகவும் ககன்தீப் சிங் பேடி அறிக்கை தெரிவித்தது.
இதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையின்படி (நிலை எண் 173 தொழில் துறை நாள்: 17.09.2013) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார்னட், இலுமனைட், ரூட்டைல், சிர்கான் மற்றும் சில தாது மணல் கனிமங்களை எடுப்பதற்கான சுரங்க பணிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. இதுபோல் தாது மணல் கனிமங்களை வெளியில் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக சுரங்க பணி செய்து, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் சுரங்க குத்தகைதாரர்கள் தாது மணலை எடுத்து செல்வது குறித்த புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்தன. இதையடுத்து தாது மணல் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் அதிகளவில் சேமித்து வைத்திருந்த 30 கிடங்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சட்ட விரோதமாக தாது மணல் கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘தாது மணல் கனிமங்களை சட்ட விரோதமாக எடுப்பதை தடுப்பதற்காக கடலோர ரோந்து பணி மேற்கொள்வதுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தாது மணல் ஆலைகள், தாது மணல் இருப்பு கிடங்குகள் மற்றும் பிற இடங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகை தாது மணல் கனிமங்களை யும் அளவீடு செய்வதற்கு அரசு செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சிறப்பு குழு வின் தலைவராக அப்போதைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்தியபிரதா சாகுவை நியமித்து அரசு உத்தரவிட்டது. அவ ரது தலைமையிலான குழுவினர் தாது மணல் ஆலைகள், கிடங்குகள் மற்றும் பிற இடங்க ளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகை தாது மணல் கனிமங்களையும் 2017 மே 13-ம் தேதி முதல் ஆய்வு செய்தது. இக் குழுவில் மத்திய அரசின் அணு கனிமங்கள் இயக்ககத்தின் நிபுணர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆய்வு 19 நாட்கள் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் ஆய்வு அறிக்கை சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
ஆய்வு அறிக்கை மூலம் தாதுமணல் கொள்ளை தொடர்பாக பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கிடங்குகளில் ஏற்றுமதிக்காக பிரித்து வைக்கப்பட்டுள்ள மண லில் இருக்கும் மோனசைட் கனிமத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தாதுமணல் ஏற்றுமதியாளர்கள் அரசையும் அணுசக்தி துறையையும் ஏமாற்றி தாது மணல் ஏற்றுமதி செய்தது தெரியவந்துள்ளது. இக்குழுவின் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, தாது மணல் மோசடியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அச்சுறுத்தும் கனிமங்கள்
மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணுசக்தி மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் தோரியம் ஆக்சைடு மற்றும் யுரேனியம் 233 இவற்றை உள்ளடக்கிய மோனசைட் அதிகளவில், அதாவது இந்திய அணு சக்தித்துறை குறிப்பிட்டுள்ள அளவைவிட அதிகமாக இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கனிமங்கள் பிரிக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக திருவெம்பாலபுரம் கிடங்கில், சம்பந்தப்பட்ட கனிம அகழ்வு நிறுவனம், தங்களது கிடங்கில் 80,725 மெட்ரிக் டன் கனிம மணல் மற்றும் அதில், 23,461 மெட்ரிக் டன் மோனசைட் கலந்திருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், 1 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் கனிம மணலுடன் 23,608 மெட்ரிக் டன் மோனசைட் வைத்திருப்பதை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த மோனசைட் கனிமத்தில் கிடைக்கும் தோரியம் அணு எரிபொருளாகவும் யுரேனியம் 233 என்பது அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கும் பயன்படுவதால், இந்த கனிம மணல் ஏற்றுமதியானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதையும் அந்த குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குழுவின் அறிக்கை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ள இந்த தகவல்கள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அணுக்கரு கொள்கையையே மாற்றியமைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஜூலை 17 வரை அவகாசம்
இந்த விவகாரம் தொடர் பாக தாதுமணல் ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் எஸ்.வைகுண்டராஜன் கூறியதாவது:
ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரதா சாகு கமிட்டி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதி, எல்லா பிரதிவாதிகளுக்கும் நகல் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் எங்கள் வழக்கறிஞரிடம் இருந்து நகல் வழங்கப்படவில்லை. நகல் கிடைத்த பிறகு மட்டுமே அதனை பார்வையிட்டு அது பற்றி கருத்துக் கூற முடியும்.
மேலும் இது சம்பந்தமான கருத்து கூறுவதற்கு ஜூலை 17 வரை நீதிமன்றம் கால அவகாசமும் வழங்கி உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே நகல் பார்த்த பிறகுதான் அது பற்றி கருத்துக் கூற முடியும்” என்று தெரிவித்தார்.
தனியாருக்கு தாரை வார்ப்பு
இந்தியாவில் நிலக்கரி உள்ளிட்ட முக்கிய மான கனிம மற்றும் தாதுவளங்கள் அதிக அளவில் இருப்பது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதில் நிலக்கரி போன்றவை பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவை என்பதால் அவை ஆங்கிலேயர் ஆட்சியில் வெட்டி எடுக் கத் தொடங்கினர். நிலப்பரப்பில் உள்ள இதுபோன்ற கனிம மற்றும் தாதுவளங்களை இந்திய நிலவியல் ஆய்வகம் ஆய்வு செய்து கண்டுபிடித்து வந்தது.
அதன்பிறகு கூடுதலான பல வளங்களை கண்டுபிடிக்க வேண்டி 1948-ல் டெல்லியை தலைமையகமாகக் கொண்டு ‘அரியவகை வளங்கள் ஆய்வகம்’ தொடங்கப்பட்டது. பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட அந்த நிறுவனம், ‘அணுசக்தி வளங்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வக இயக்குநரகம்’ எனும் பெயரில் ஹைராபாத்தில் இயங்கி வருகிறது.
தமிழக கடற்கரை மணலில் அணுசக்தி வளம் இருப்பது சாகு குழு அறிக்கை மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத் திய அரசு அறிந்திருந்தும் தமிழகத்தில் உள்ள அணுசக்தி வளத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கான உயரிய தொழில்நுட்பம் மத்திய அரசிடம் இல்லை என்பதால் அதில் அக்கறை காட்டாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ’தி இந்து’விடம் மத்திய அணுசக்தித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா கடற்கரை மணல்களில் உள்ள பல முக்கிய வளங்கள் குறித்து மத்திய அரசின் ‘இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ்’ நிறுவனத்திடம் தகவல்கள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வரும் அரசுகள் தம் சுயலாபங்களுக்காக அதில் அதிக கவனம் செலுத்தாமல் தனியாருக்கு தாரை வார்த்து விடுகின்றன. அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளில் உள்ளது போல வளங்களை பிரித்து எடுக்கும் உயரிய தொழில் நுட்பங்கள் இந்தியாவில் இல்லை’ எனத் தெரிவித்தனர்.
1910-ல் கேரளாவில் இருந்து ஜெர்மனுக்கு கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதில் ஒட்டியிருந்த மணலை ஜெர்மன் நாட்டின் ஒரு விஞ்ஞானி அப்போது எடுத்து ஆராய்ச்சி செய்துள்ளார். அதில், கடற்கரை மணலில் டைட்டானியம் உள்ளிட்ட பல தாதுவளங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதை எடுக்க வேண்டி அவர் தமிழகத்தில் மணவாளக்குறிச்சி மற்றும் கேரளாவின் சாவ்ரா எனும் இரு இடங்களில் தொழிற்சாலை அமைத்தார். பிறகு அவை மூடப்பட்டு அப்பணிகளை மத்திய அரசே தொடர அரியவகை வளங்கள் ஆய்வ கம் அமைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அளவு மணல் ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது தவ றான கொள்கை என புகார் உள்ளது‘ என்றனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அணுசக்தி துறையில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இதை கண்காணிக்கும் சம்மந்தப்பட்ட சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கைளால் ஊழல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அணுசக்தி வளம் கொண்ட எந்த பொருளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்குஅனுமதி இல்லை. எனினும், அவற்றை தனியாக பிரித்து எடுக்காமல் அவை உள்ளடக்கிய கச்சா பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்கின்றனர். உதாரணமாக, அணுசக்தி பொருட்களை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட கார்னட் எனும் தாதுப் பொருளுடன் சேர்த்து அனுப்பி விடுகின்றனர். இது வெளிநாடுகளுக்குச் சென்றபின் அணுசக்தி பொருட்களை பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதேசமயம் கார்னட்டுடன் சேர்த்து அணுசக்தி பொருட்களின் விலையையும் ஏற்றுமதி செய்வர்கள் தவறாமல் பெற்றுக் கொள்கின்றனர். இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மோனசைட் என்பது...
மோனசைட் கனிமம் குறித்தும் அதன் அணுக்கதிர் வீச்சு குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சவுந்திரராஜன். மோனசைட் கனிமம் குறித்து அவர் கூறும்போது, “மோனசைட் என்பது கதிர்வீச்சை உமிழக் கூடிய ஒரு கனிமம். இதில் மோனசைட் - சிஇ, மோனசைட் - எல்ஏ, மோனசைட் - என்டி, மோனசைட் - எஸ்எம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலக்கூறு மோனசைட். தோரியம் கதிர்வீச்சு அபாயம் கொண்டது. தோரியத்தை பகுப்பதன் மூலம் ராடான் - 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. அணுமின் நிலையங்களில் தோரிய பயன்பாடு மிகவும் அதிகம்.
சென்னை அண்ணா நகர் பரப்பளவு கொண்ட ஓர் இடத்தில் கொட்டியிருக்கும் தாதுமணலில் 2 கிலோ வரை யுரேனியம் கிடைக்கலாம். இவ்வாறு நமது கடற்கரை பரப்புகளில் கார்னெட், இலுமனைட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ், மோனசைட் உள்ளிட்ட கனிமங்களுடன் மோனசைட் கலந்திருக்கும்போது கதிர்வீச்சு இருக்காது.
இந்த மணலை அள்ளவும் தாதுக்களை பிரிக்கவும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள் தாது மணலில் இருந்து மோனசைட்டை மட்டும் பிரித்து, விதிமுறைகளை மீறி ஒரு இடத்தில் குவித்து வைக்கும்போது, அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு அபாயகரமான அளவில் இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT