Last Updated : 02 May, 2018 09:56 AM

 

Published : 02 May 2018 09:56 AM
Last Updated : 02 May 2018 09:56 AM

நாமக்கல்லில் ஒரு துரோணர்: வாள் சண்டை வீரர்களின் குரு

ரம்ப கால தமிழ் சினிமாவில் உட்சபட்ச சண்டைக் காட்சி கள் என்பது வாள் வீச்சுதான். எம்ஜிஆரோ நம்பியாரோ வாள் சாண்டையிட்டு கடைசியில் எம்ஜிஆர் வெல்வார். மன்னராட்சியின் கீழ் பல்லாயிரம் ஆண்டுகளாய் கட்டுண்டு கிடந்த தமிழ் பரப்புக்கு வாள் சண்டை என்பது பாரம்பரிய கலை. இன்று சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் நமது பாரம்பரிய கலையை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த குறையைப் போக்குவதற்காகவே, வாள் சண்டையில் தமிழகம் தலைநிமிர மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பயிற்சியாளர் எஸ்.பிரபுகுமார். அர்ப்பணிப்புமிக்க இவரது உழைப்பால், பணியில் சேர்ந்த ஓராண்டில் வாள் சண்டை போட்டியில் தேசிய அளவில் 40 விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளார். இப்போது, சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கச் செய்திருக்கிறார் இந்த நாமக்கல் துரோணாச்சாரியார்.

வாள் சண்டை போட்டி பிற போட்டிகளைக் காட்டிலும் கூடுதல் கவனமாக விளையாட வேண்டிய ஒன்று. இப்போட்டியில் இப்பி, சேபர், ஃபாயில் என 3 பிரிவுகள் உள்ளன. உடலில் ஏதாவது ஒரு பகுதியை வாளால் தொட்டால் புள்ளி வழங்கப்படும். சேபர் பிரிவில் இடுப்புக்கு மேல் பகுதியில் தொட்டாலும், ஃபாயில் பிரிவில் உடம்பின் கைக்கு உள்பகுதியில் முன், பின் எங்கு தொட்டாலும் புள்ளி வழங்கப்படும். இதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையாகும்.

இதை சரியான வகையில் சொல்லிக் கொடுத்தால், பெரும் வெற்றியை பெறமுடியும் என கணித்தார் பிரபுகுமார். இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் விளையாட்டு விடுதியில் உள்ள 41 பள்ளி மாணவ, மாணவியர், 25 கல்லூரி மாணவர்கள் மற்றும் விளையாட்டு விடுதியைச் சாராத 10 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 76 பேருக்கு வாள் சண்டை பயிற்சி அளித்தார். தேசிய அளவிலான போட்டியில் 1 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

கடந்த மாதம் துபாயில் ஆசிய அளவிலான வாள் சண்டை போட்டி நடைபெற்றது. இதில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நாமக்கலில் இருந்து 2 மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி கிட்டவில்லை என்றாலும் சர்வதேச அளவில் பங்கேற்றதும், பிறநாட்டு வீரர்களுக்கு இணையாக மாணவர்கள் புள்ளிகளை அள்ளியதும் சாதனையாக பார்க்கப்படுகிறது. பிரபுகுமாரை சந்தித்தோம். “சர்வதேச அளவிலான வாள் சண்டைப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவை யான நவீன உபகரணங்கள் வழங்கினால் பயனாக இருக்கும்” என்கிறார்.

பிற விளையாட்டுகளில் தேசிய அளவில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கிடைப்பதுபோல, வாள் சண்டையிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவரது கோரிக்கை. அவ்வாறு செய்தால் பதக்கங்கள் மூலம் இந்தியாவுக்கும் பெருமை கிடைக்கும். நமக்கு பெருமைதான் முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x