Published : 22 May 2018 06:09 PM
Last Updated : 22 May 2018 06:09 PM
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது தலைப்புச் செய்தியாகியுள்ளது. ரூ. 65, ரூ, 70, என படிப்படியாக உயர்ந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 76 ரூபாயை கடந்து விட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில், ரூ. 80யை தொட்டு விட்டது. டீசல் விலையும், பெட்ரோல் விலைக்கு சளைக்காமல் ஏறிக் கொண்டே இருக்கிறது.
பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் சூடு தாங்காமல் நாடுமுழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசலையும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
கச்சா எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழலுடன் பின்னி பிணைந்துள்ள கச்சா எண்ணெய் விலை, அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று.
இப்போது கூட, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரித்து வருவது மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. அதுவும் கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலும், வெனிசூலா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததும், அதன் விலை அதிகரிப்பதற்கு காரணமாகி விட்டது.
அப்படியானால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் தான் காரணமா? அதுதான் இல்லை என்கிறது இந்த புள்ளி விவரம்.
வரி வசூல் வேட்டை
பெட்ரோல் விலை இதேபோன்று லிட்டர் 75 ரூபாய்க்கும் அதிகமாக 2013-ம் ஆண்டு விற்பனையானது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 ரூபாய் என்ற அளவில் உள்ளது. ஆனால், 2013-ம் ஆண்டு அதன் விலை 105 ரூபாய். இந்த முரண்பாடு எப்படி என்பது தான் இப்போதைய கேள்வி.
இதற்கு காரணம் 2013-ம் ஆண்டை ஒப்பிட்டால் 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசு விதிக்கும் வரி மிக அதிகம்.
2013-ம் ஆண்டில், பெட்ரோலின் அசல் விலை ரூ. 52.15, மத்திய அரசு விதிக்கும் வரி ரூ. 9.48, மாநில அரசு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரி 12.68, டீலர் கமிஷன் ரூ. 1.79 ஆக மொத்தம் ரூ. 76.1 என்ற விலையில் விற்பனையானது.
ஆனால் தற்போது, பெட்ரோலின் அசல் விலை ரூ. 37.22 ரூபாய் மட்டுமே. ஆனால் மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி ரூ.19.48 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 105 சதவீத அளவில் வரியை உயர்த்தியுள்ளது. மாநில அரசு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரி 16.29 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 28 சதவீத அளவிற்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
டீலர் கமிஷன் ரூ. 3.62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் ஏறக்குறைய 100 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து, ஒரு லிட்டர் பெட்ரோல் டெல்லியில் தற்போது ரூ. 76.61 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தாவிட்டால், பெட்ரோல் லிட்டர் ரூ. 60 என்ற விலையில் விற்பனை செய்ய முடியும்.
இதேநிலை தான் டீசலிலும் உள்ளது. 2013-ம் ஆண்டு பெட்ரோல் ரூ. 70க்கும் அதிகமான விலையில் விற்பனையான போதும், டீசல் விலை லிட்டர் ரூ. 52 என்ற விலையில் தான் விற்பனையானது.
அப்போது டீசலின் அசல் விலை 41 ரூபாயும், மத்திய மாநில அரசுகளின் வரி 11 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் டீசலின் அசல் விலை 2013-ம் ஆண்டைவிட ஒரு ரூபாய் குறைவாக தற்போது 40 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. மத்திய அரசு வரியை 330 சதவீதம் உயர்த்தியுள்ளது. மாநில அரசு 64 சதவீதம் உயர்த்தியுள்ளது. டீலர் கமிஷன் 131 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூன்றும் சேர்த்து 28 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதனால் டீசல் விலை இரண்டும் சேர்த்து 68 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
2016- 17 நிதியாண்டில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியாக வசூலித்தது தொகை மட்டும் 2.7 ஆயிரம் கோடி ரூபாய். கேட்டால் தலையே சுற்றுகிறது. அரசுகள் பணம் சம்பாதிக்க சாதாரண மனிதர்கள் அவஸ்தை பட வேண்டும் என்பது என்ன நியாயம்?
நரிக்கு நாட்டாமை கொடுத்தால்?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை முடிவு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளன. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை நிலவரத்தையொட்டி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயமுறை, நீண்ட பயணத்தைக் கொண்டது. தொடக்க காலத்தில், இதன் விலையை, அரசே நிர்ணயித்தது. அதுவும், தேவைக்கு ஏற்ப, சூழலைக் கருதி மட்டுமே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டால், அந்த காலத்தில் பத்திரிக்கைகளில் பிரதான செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும
இதற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களும் முழுக்க முழுக்க அரசு நிறுவனங்களாகவே செயல்பட்டு வந்தன. ஆனால், பங்குச்சந்தை முதலீடுகள் வந்த பின்னர் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் சகவாச தோஷம் ஏற்பட்டது. சேவை துறையாக இருந்த எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் நிறுவனங்கள் போல மாறின.
லாபம் சம்பாதிக்க முடியும் என்றால் தான், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தை வாயிலாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்யும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டாது. பங்குச்சந்தை முதலீடு ஊக்கம் அளித்ததால், லாபம் என்ற ஒரே இலக்குடன் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யாததால் ஏற்படும் இழப்பை சுட்டிக்காட்டி, அதனை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கோரின. பெட்ரோலிய அமைச்சகம் இதற்கு தொடக்கத்தில் சம்மதிக்கவில்லை. ஆனாலும், பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குனர்கள், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் விருப்பத்திற்கே ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களின் வசம் சென்றது.
சரக்கு வாகனப் போக்குவரத்தில் டீசல் முக்கியம் என்பதால், அதன் விலை நிர்ணயம் மட்டும் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்தது. பின்னர் அதுவும் எண்ணெய் நிறுவனங்கள் வசமாகின. விளைவு மற்ற பல பொருட்களை போலவே பெட்ரோல் மற்றும் டீசலும் அரசுக்கு லாபம் தரும் கற்பகத்தருவானது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்தன. மத்திய, மாநில அரசுகள் அதற்கான வரியை உயர்த்தி லாபம் அடைந்தன. ஆனால் அத்தியாவசிய தேவையான அவற்றை பயன்படுத்தும் இந்திய குடிமக்கள் மீளாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT