Published : 29 May 2018 08:07 PM
Last Updated : 29 May 2018 08:07 PM

நம்பகத்துக்குரியதா ஸ்டெர்லைட் தடை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 52 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு உயிர் இழப்புகளை தாண்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அது நிரந்தர தடை எனவும் தமிழக அரசு சொல்கிறது.

இதுதொடர்பான தமிழக அரசின் அரசாணையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48-ஏ பிரிவின்படி காடுகள், வன உயிரினங்களைக் காக்க சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். 1974-ம் ஆண்டு தண்ணீர் சட்டத்தின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு சீல் வைத்து நிரந்தரமாக மூட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “1974 ஆம் ஆண்டின் நீர் பாதுகாப்புச் சட்டத்தின் 18 1-பி பிரிவின்படி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும் அதனை மூடி சீல்வைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடுவதாகவும்”, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளைத் தாண்டிய போராட்ட வரலாற்றைக் கொண்டது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட உடல் நல சீர்கேடு ஆகியவற்றை குறிப்பிடாமல் அரசாணை பிறப்பித்திருப்பது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் தமிழக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை ஒரு பள்ளி மாணவர் எழுதிக் கொடுத்தது போல் வலுவற்று, தகுந்த காரணங்களின்றி உள்ளது என்கிறார், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

”இந்த அரசாணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை நாடினால், தமிழக அரசின் வாதம் நிலைக்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. நீர் மாசுபாடு தடுப்புச் சட்டம், 1974-ன் படி ஆலை மூடப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்படியும் அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும். தவிர, ஸ்டெர்லைட் ஆலை மீறியுள்ள விதிமுறைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் ஆகியவை அரசாணையில் இல்லை.

1999 முதல் 2003 வரை உரிமத்தை புதுப்பிக்காமலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்திருக்கிறது. 2013-ல் உச்ச நீதிமன்றம் இந்த விதிமுறை மீறல்களை எல்லாம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தியிருப்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும், ஆலையை மூடுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக்கூறி ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017-ம் ஆண்டில் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த போது, சில விதிமுறைகளுடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தை புதுப்பித்தது. ஆனால், அதன் பின்பும் விதிமுறைகளை நிவர்த்தி செய்யாமல் இருந்ததால் தான் கடந்த ஏப்ரல் மாதம், உரிமத்தை புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, வேதிக் கழிவுகள் மேலாண்மை, உப்பாற்றில் கழிவுகள் கலக்காமல் தடுக்க சுவர் எழுப்பாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறித் தான் ஆலையின் உரிமம் நிராகரிக்கப்பட்டது.

இதை மீறி கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிர்வாகம் முயற்சித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அப்போதாவது தமிழக அரசு அரசாணையை பிறப்பித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது.

ஆலையிலிருந்து வெளிவரும் ஃபுளூரைடு, சல்ஃபைடு ஆகிய வேதிக்கழிவுகள் மேலாண்மை விதிப்படியும் இந்த ஆலைக்கு உரிமம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, உரிய உரிமம் இல்லாமலேயே உற்பத்தி திறன் ஒவ்வொரு முறையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த உற்பத்தித் திறனுக்கு ஏற்ப புகை போக்கியின் உயரமும் அமைக்கப்படவில்லை என நிரூபணமாகியிருக்கிறது.

இவற்றையெல்லாம் குறிப்பிட்டு வலுவான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகள் மாநிலப் பட்டியலில் இருப்பதால், தமிழகம் எங்கும் தாமிர உருக்காலைகளை அனுமதிக்க மாட்டோம் என மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும்” என வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.

Red Catagory பிரிவில் உள்ள இந்த ஸ்டெர்லைட் ஆலை, உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படக்கூடாது என்பது முக்கிய நிபந்தனை. ஆனால் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து 15 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்பட்டிருப்பது இந்த ஆலையின் மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டு. இரண்டாவதாக தொழிற்சாலையைச் சுற்றிலும் 250 மீ அளவுக்கு மரம் வளர்த்து மசுமை அரணை (க்ரீன் பெல்ட்) அமைக்க வேண்டும். அதனையும், ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படி பல முக்கிய விதிமுறை மீறல்களை குறிப்பிடாமல் தமிழக அரசு மூடல் அரசாணையை பிறப்பித்துள்ளது, போராட்டங்களை தணிக்கை செய்யும் நடவடிக்கையாகவே தமிழக உள்ளது என்று வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் குற்றம்சாட்டுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சூழல் பிரச்சினைகள், விதிமுறை மீறல்கள் குறிப்பிடப்படாமலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறுகிறார்.

”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் எண்ணம் என்றால், அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என கொள்கை அளவிலான தீர்மானத்தை இயற்ற வேண்டும். ஆலையை நிரந்தமாக மூடுவது தான் அரசின் எண்ணமா என்ற சந்தேகத்தை அரசாணை எழுப்புகிறது. 2013-ல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயுக்கசிவை அடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு பிறப்பித்த ஆணையும் அர்த்தமே இல்லாததாக இருந்தது. அந்த ஆணையின் வடிவமைப்பே அது தோல்வியில் நிற்க வேண்டியதற்கு காரணமாக இருந்தது. மூடுவதற்கான ஆணையை பலமின்றி உருவாக்குவது தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தியே. அதனைப் பயன்படுத்தி, ஆலையை மீண்டும் திறந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்தோஷம் அடையும். இதுதான் வழக்கமாக உள்ளது.

இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் வேதாந்தாவிற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கு எந்தவித அரசியல் கட்சிகளும் பேதம் இல்லை. எல்லா ஆட்சியிலும் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாகவே அரசுகள் இருந்துள்ளன.

உதாரணமாக, 2007-ல் ஸ்டெர்லைட் ஆலை 900 டன்னிலிருந்து 1,200 டன் வரை உற்பத்தியை அதிகரிக்க விரிவாக்கம் செய்தனர். அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் தன்னிடம் உள்ளது என ஆலை நிர்வாகம் காண்பிக்க வேண்டும். அப்போது தன்னிடமும், சிப்காட் நிர்வாகம் அளிக்கும் நிலத்தையும் சேர்த்து 172 ஹெக்டேர் நிலம் உள்ளது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அதில், திடக்கழிவு மேலாண்மை, க்ரீன்பெல்ட் அமைப்பது என எல்லாவற்றையும் செய்வோம் எனக்கூறி விரிவாக்கம் செய்தது.ஆனால், இந்நாள் வரை ஸ்டெர்லைட் ஆலையிடம் 102 ஹெக்டேர் நிலம் தான் உள்ளது.

இவை எதனையும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு முறையும் தங்கள் ஆய்வின்போது சுட்டிக் காட்டவில்லை" என குற்றம் சாட்டுகிறார் நித்யானந்த் ஜெயராமன்.

1998-ல் சென்னை உயர் நீதிமன்றம் நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது, ஆலையில் க்ரீன் பெல்ட் அமைக்கவில்லை, ஆர்செனிக், லெட், அலுமினியம் போன்ற வேதிக் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது என்பன போன்ற கடும் குற்றச்சாட்டுகளை நீரி அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. ஆனால், அனைத்தையும் சரிசெய்து விட்டோம் எனக்கூறி மனுவை தாக்கல் செய்தது ஸ்டெர்லைட். அப்போது மீண்டும் நீரி அமைப்பை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியது சென்னை உயர் நீதிமன்றம். முதல்முறை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீரி அமைப்பு, இரண்டாவது முறை நீர்த்துப்போன காரணங்களைக் கூறியது. அதனால் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது. அதையடுத்து 2010, 2013 ஆண்டுகளிலும் ஆலையை மூடுவதும், திறப்பதும் வழக்கமானது.

இப்போது ஒன்றல்ல, இரண்டல்ல 13 உயிர்களை இழந்தும் மீண்டும் தமிழக அரசு ‘நிரந்தரமாக’ ஆலையை முடுவதாக சொல்லியிருக்கும் இந்த அரசாணையை தூத்துக்குடி மக்கள் எப்படி பார்க்கின்றனர்?

தனக்குள்ள பண பலம், அதிகாரத்தை பயன்படுத்தி ஆலை நிர்வாகம் இந்த அரசாணைக்கு தடை வாங்கி விடுமோ என்ற அச்சம் இருப்பதாக, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்து அதில் வெற்றி பெற்ற பேராசிரியை பாத்திமா பாபு.

“ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்றாலும், இத்தனை உயிர்களை பலி எடுத்து தான் இது நடந்திருக்க வேண்டுமா என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அரசாணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை நாடும்போது தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். 40,000 டன் உற்பத்தி என சொல்லி, 4 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளனர். விரிவாக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓரிடத்தில் ஆலையைக் கட்டுவதாகக் கூறிவிட்டு வேறிடத்தில் கட்டிக் கொண்டிருந்தனர் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இப்படி பல பொய்களை அடுக்கி கட்டப்பட்ட ஆலை தான் இந்த ஸ்டெர்லைட். தூத்துக்குடி முழுக்க புற்றுநோய். இப்படி வலுவான காரணங்கள் பல இருந்தும் வலுவற்ற ஆணையைப் பிறப்பித்திருப்பது எங்களுக்கு கவலை தருவதாக உள்ளது” என்கிறார் பாத்திமா பாபு.

”தூத்துக்குடி மக்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை, நம்மை ஏமாற்றத்தான் இந்த ஆலை மூடல் முடிவோ என மக்கள் நினைக்கின்றனர். இந்த முடிவு கண் துடைப்பாக இருக்கக்கூடும்” என பாத்திமா பாபு சொல்வதை அப்படியே புறக்கணித்து விட முடியாது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x