Published : 12 May 2018 09:56 AM
Last Updated : 12 May 2018 09:56 AM
ம
து அருந்தி வாகனம் ஓட்டு; எமன் கையில் உனது ஓட்டு. மது அருந்தாமல் வாகனத்தை ஓட்டு; இல்லையேல் பூமியில் இல்லை உனது தலைக்கு ஓட்டு' - கோவையில் வாகனங்களில் செல்வோர் இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய சுவர் சிற்பங்களைப் பார்க்கலாம்.
இவ்வாறு சிமென்ட்டால் உருவாக்கப்படும் சாலை யோர சுவர் சிற்பங்கள் மூலம் (mural cement art) சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் பூவா ஜெகநாதன். கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த இவர் 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.
தந்தை சிமென்ட்டால் ஸ்லாப் செய்யும் தொழிலாளி. தந்தையிடம் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டவர், பல்வேறு சிற்பங்களை வடிவமைக்கத் தொடங்கினார். சமூகத்தின் மீது உள்ள அக்கறையில், சிமென்ட் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினார். பொது இடங்களில் சாலையோர சுவர்களில் சிற்பங்களை வடிவமைக்க நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அனுமதி பெற்றார்.
செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால், எமன் பாசக் கயிறு வீசுவதுபோன்ற சிற்பத்தை முதலில் உருவாக்கினார். இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மேலும் பல விழிப்புணர்வு சிற்பங்கள் உருவாகத் தொடங்கின.
“சிற்பங்களை உருவாக்க யாரிடமும் கையேந்தவில்லை. எனது மனைவியின் நகைகளை விற்று, 10-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு சிமென்ட் சிற்பங்களை உருவாக்கினேன். மின் சிக்கனம், மதுவின் கொடுமை, வேளாண்மையின் முக்கியத்துவம், ஆதரவற்றோரை அரவணைத்தல், தூய்மையான கிராமம் ஆகியவற்றை வலியுறுத்தும் சிற்பங்களையும் வடிவமைத்தேன்” என்கிறார் பூவா ஜெகநாதன்.
அப்துல்கலாம் இறந்தபோது கோவை டாடாபாத் பகுதியில் அவரது சிலையை உருவாக்கியுள்ளார். சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிலைக்கு பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நெகிழ்ந்து போன ஜெகநாதன் மகாத்மா காந்தி, ஜல்லிக்கட்டு சிற்பங்களையும் வடித்தார். அதற்கும் மக்கள் வரவேற்பை கொடுத்தனர்.
பூவா ஜெகநாதனை சந்தித்தோம். “முதலில் சுவரை கொத்திவிட்டு, அதில் சிமென்ட் கலவையைப் பூசி, கையாலேயே சிலையை வடிவமைப்பேன். தொடர்ந்து, பிரைமர், மெட்டாலிக், காப்பர் பூச்சுகளுக்குப் பின்னர், தங்கமுலாம் பெயின்ட் பூசுவேன். ஒரு சுவர் சிற்பத்தை உருவாக்க 4 முதல் 10 நாட்களாகும். ஒரு சிற்பத்துக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். இதுவரை எனது சொந்த செலவில்தான் சிலைகளை உருவாக்கியுள்ளேன். யாராவது இடமும் நிதியுதவியும் அளித்தால் சிலையை உருவாக்கத் தயாராக இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் இந்த சுவர் சிற்பி.
எந்த வடிவம் என்றாலும் விழிப்புணர்வு கருத்து மக்களைப் போய் சேர்கிறதா என்பதே முக்கியம். அந்த வகையில், இந்த சிமெண்ட் சிற்பம் வலிமைமிக்க தாகவேப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT