Published : 30 May 2018 03:51 PM
Last Updated : 30 May 2018 03:51 PM
சென்னை வால்டாக்ஸ் சாலையின் தெருவோரங்களில் வசிக்கும் குடும்பங்களில் சங்கீதாவின் குடும்பமும் ஒன்று. அங்கு மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் சங்கீதாவுக்கு தாய் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.
குடும்பம் வறுமையிலும் வேலைக்கு சென்றுகொண்டே பள்ளிப் படிப்பை முடித்த சங்கீதாவின் கல்லூரிப் படிப்பு அவரது வறுமை காரணமாக தடைபட்டுள்ளது. கல்வியைத் தொடர முடியாத நிலையிலும் அவருக்கான அடையாளத்தை கால் பந்தாட்டத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆம், சர்வதேச அளவில் தெருவோரக் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சங்கீதா. கடந்த மே 8-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற்ற தெருவோரக் கால்பந்து சர்வதேசப் போட்டியிலும் சங்கீதா பங்கேற்றார்.
இதோ சங்கீதாவே நம்மிடம் பேசுகிறார்.
''மூன்று தலைமுறைகளாக நாங்கள் தெருவில்தான் வசித்து வருகிறோம். குடும்ப வறுமை காரணமாக 8 ஆம் வகுப்பிலேயே எனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வால்டாக்ஸ் சாலையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு கருணாலயா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள். இருந்தாலும் படிக்கச் சென்று விட்டால் குடும்பத்தை யார் பார்ப்பது என்ற உறுத்தல் இருந்தது. எனினும் அவர்களின் அறிவுறுத்தலில் படிக்கச் சென்றேன். அப்போது எனக்கு கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
எனக்குள் இருக்கும் ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து நானும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன்பிறகு என்னைப் போன்று சிறுமிகள் சிலரும் கால்பந்தாட்டப் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த ’ஸ்லம் சார்கர்’ போட்டிகளில் கலந்துகொண்டேன். இதில் சிறந்த பிளேயருக்கான விருதையும் நான் வென்றேன். தொடர்ந்து கால் பந்தாட்டத்தில் ஆர்வம் அதிகரித்தது. கூடவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணினேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் வந்தது.
நாங்கள் தெருவோரத்தில் தங்கி இருப்பதால் இரவு நேரங்களில் போதுமான வெளிச்ச வசதி இருக்காது. வண்டிகள் சென்று வருவதுமாய் சத்தமாய் இருக்கும். அமர்ந்து படிக்கவும் முடியாது. மழை, வெயில் இரண்டும் எங்களுக்கு கஷ்டம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன். எங்களது சூழ்நிலை மாறவேண்டும் என்றால் நான் படித்தே தீர வேண்டும் என்று படித்தேன். பத்தாம் வகுப்பில் 351 மதிப்பெண்கள் எடுத்தேன். விருப்பம் இல்லை என்றாலும் எனக்கு கிடைத்த குரூப்பை படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து கால் பந்தாட்டத்தில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.
பிறகு இந்தியாவில் நடந்த பல்வேறு கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றேன். வீடில்லாதவர்களுக்கான உலகக் கோப்பைக்கு இந்தியா சார்பாக பங்கேற்கும் மகளிர் அணியைத் தேர்வு செய்ய நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில் இறுதி 8 பேரில் நானும் தேர்வு செய்யப்பட்டேன்.
நான் தெருவில் தங்கி இருந்ததால் யாரும் என்னை மதிக்கவில்லை. கால் பந்தாட்டம் மட்டுமே எனது அடையாளமாகவும் மதிப்பாகவும் இருந்தது. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையும், எனது இருப்பிடமும் பல தடைகளை ஏற்படுத்தின.
அரசாங்கம் நினைத்திருந்தால் எனது பாட்டி காலத்திலேயே தெருக்களில் மக்கள் வசிப்பதைத் தடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் தவறிவிட்டனர். விளைவு என் தலைமுறையும் ரோட்டில் வசிக்கிறது.
இனி அடுத்த தலைமுறை தெருக்களில் வசிக்கக் கூடாது என்று கூறும் சங்கீதாவின் கனவு ஐஏஎஸ் ஆவது.
பல லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு அவரது கல்வி மற்றும் கால்பந்து விளையாட்டில் அடுத்த கட்டத்தை அடைய வறுமை பெரும் தடையாக இருந்து உள்ளது. போக்குவரத்து செலவு மற்றும் கால்பந்து உபகரணங்கள் வாங்க போதிய பண இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.
வாசகர்களே சங்கீதாவின் அடுத்த கட்டத்திற்கு உதவ விரும்புகிறீர்களா ....
Name: s. sangeetha
Account no: 6173587177
Ifsc code: IDIB000S034
indian bank
sowcarpet chennai
மேலும் விவரங்களுக்கு:
தொடர்பு கொள்ள: 9444138348 ( Dr.Paul Sunder Singh
Founder and secretary of Karunalaya )
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT