Published : 05 Apr 2018 10:13 AM
Last Updated : 05 Apr 2018 10:13 AM
நா
கை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ளது தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி. பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியது. தமிழ்த் தொண்டாற்றிய சீகன் பால்கு வாழ்ந்த வீட்டின் அருகில்தான் இந்த பள்ளியும் உள்ளது. இதன் வயது 310. ஆமாம். 1708-ல் திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 1714-ல் பள்ளியாக பரணமித்தது.
இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி இதுதான். ஆங்கிலம், தமிழ், ஜெர்மனி மொழிகளில் கல்வி கற்றுத் தந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய இந்தப் பள்ளி 1952-ல் உயர்நிலைப் பள்ளியாகவும் பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு தற்போது 300 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கின்றனர்.
இத்தனை பெருமைமிகு பள்ளி போதுமான பராமரிப்பு இல்லாமல், உட்கட்டமப்பு வசதியும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் 6 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரயராக வந்து சேர்ந்தார் எஸ்.ஜான் சைமன் மகிபாலன். பள்ளியிலும் மாணவர்களிடத்திலும் அவர் ஏற்படுத்திய மாற்றங்களால், உள்ளூர் மக்கள் மனதார பாராட்டுகின்றனர். நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரும் பாராட்டி கவுரவித்துள்ளார்.
அப்படி அவர் செய்த மாற்றங்கள் தான் என்ன என்பதை அறிய பள்ளிக் குச் சென்றோம். பாழடைந்த கட்டிடமா இது என வியக்கும்படி மாறியிருந்தது. சுவர்களுக்கு சுண்ணாம்பும் அனைத்து ஜன்னல்கள், கதவுகளுக்கு வண்ணமும் தீட்டப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளி கழிவறை உட்பட 14 கழிவறைகளைக் கொண்ட வளாகம் நவீனமயமாகி இருந்தது. புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் இருந்த குடிநீர்த் தொட்டியும் செம்மைபடுத்தப்பட்டுள்ளன. மண்டிக்கிடந்த புதர்கள் அழிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மின்சார வசதி சீராகியுள்ளது. மதிய உணவு சாப்பிடும் 120 மாணவர்களுக்கு புதிய தட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவியல் ஆய்வுக்கூடம், ஆய்வுக்கூடமாக மாறியிருக்கிறது. பாடத்துடன் தொடர்புடைய வண்ண ஓவியங்களுடன் வகுப்பறைகள் மாறியுள்ளன.
பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்திய பள்ளியின் இத்தனை மாற்றமும் வெறும் 6 மாதங்களில் நடந்திருக்கிறது. தலைமையாசிரியரின் முயற்சியும் அதற்கு ஒத்துழைத்த ஆசிரியர்களும் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதெற்கெல்லாம் ஏது பணம் என்ற கேள்வியுடன் நாம் விசாரித்தபோது தான் தெரிந்தது. சுமார் ரூ.2 லட்சத்தை தனது பாக்கெட்டில் இருந்து பள்ளிக்காகச் செலவழித்திருக்கிறார் ஜான் சைமன் மகிபாலன்.
நெகிழ்ந்து போன நம்மிடம் அவர் கூறும்போது, “பள்ளிக்கு நான் வந்த போது மாணவர்களின் சேர்க்கை மிகக் குறைவாக இருந்தது. உரிய பராமரிப்பின்றி ஒரு பள்ளிக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது. கழிவறை வசதி சரியாக இல்லாததால் கடற்கரை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியிருந்தது. சுகாதாரம் சொல்லித் தரும் பள்ளியே சுகாதாரத்தை பேணவில்லை என்றால் எப்படி. அதனால் முதலில் கழிவறையை சீரமைக்கத் தொடங்கினேன். பின்னர் குடிநீர் வசதி என ஒவ்வொரு பணியாக மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களுக்கும் மகிழ்ச்சி” என்றார் ஜான் சைமன் மகிபாலன்.
பள்ளியின் புறத்தோற்றத்தை சீரமைத்தாகிவிட்டது. மாணவர்களின் திறனை மேம்படுத்த என்ன வழி என்று யோசித்தவருக்கு, தமிழரின் பாரம்ப ரிய கலைகளை கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
இதன்படி தப்பாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. விரும்பும் கலையை மாணவர்களே தேர்வு செய்யலாம். இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறத் தொடங்கினர். இளையதலைமுறையை விட்டு விலகும் நிலையில் இருந்த பாரம்பரிய கலைகளை அவர்களை வைத்தே மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஜான் சைமன் மகிபாலன் வெற்றி பெற்றார்.
இதெல்லாம் போதாது. இன்னும்பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, மாணவர்கள் அனைவருக்கும் பெஞ்ச் வசதி என அடுத்த கட்ட இலக்கை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளார் இந்த தன்னலமற்ற தலைமையாசிரியர் ஜான் சைமன் மகிபாலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT