Published : 07 Apr 2018 12:51 PM
Last Updated : 07 Apr 2018 12:51 PM
நடுநிசியில் அரை நிலா வெளிச்சத்தில் மினுக்கமாய் அந்த யானையின் நீண்ட கொம்புகள் தெரிந்தன. அந்தக் காட்சியை நாங்கள் தரிசிப்பதற்குள்ளாக என் மகனின் ‘அப்பா, அப்பா வருதுப்பா!’ என்ற பேச்சு சப்தம் யானை உணர்ந்துவிட்டது போலும். எங்கள் வீட்டின் காம்பவுண்டை ஒட்டி வந்து கொண்டிருந்த கொம்பன் அப்படியே அரை வட்டமடித்து அடுத்திருந்த பொட்டல் வெளியில் நடக்க ஆரம்பித்தது. அதே மாதிரியான விந்தி, விந்தி நடக்கும் நடை. அதற்கு பின்புறம் வீசப்படும் வானவெடி. மனிதத்தலைகளின் கூச்சல் கலாட்டா. 2 பர்லாங் நடந்து அங்குள்ள பள்ளத்தில் நிழலுருவாய் இறங்கியது தெரிந்தது. இந்தச் சமயங்களில் எல்லாம் வனத்துறைக்கு மக்கள் போன் செய்து அழைப்பதும், யானை வந்து ஒரு ஆட்டம் ஆடி விட்டுச் சென்ற பின்பு அவர்கள் வருவதுமே வாடிக்கையாக இருந்தது.
இந்த ஒற்றை யானையின் பின்னணியில் ஒரு சோகக் கதை உள்ளது. 2008-ல் நிறைமாத கர்ப்பமாக இருந்த ஒரு யானை உள்பட மூன்று யானைகள் இங்கே எட்டிமடை அருகே ரயிலில் சிக்கி ஒரே நேரத்தில் இறந்ததல்லவா? அதில் இருந்த வழிகாட்டி யானைதான் இந்த ஆண் யானை. ரயில் வரும் வேளையில் இதுதான் மக்கள் வெடிச்சத்தத்தில் பயந்து தண்டவாளத்தில் தெரியாத்தனமாக இறங்கி அகப்பட்டுக் கொண்டது.
அதைத் தொடர்ந்தே இதன் கூட்ட யானைகள் வந்தது. அந்த யானைகள் ரயிலில் அடிபட்டு பிளிறலுடன் இறக்க, இந்த ஆண் யானை மட்டும் சற்றே தண்டவாளத்தில் அடிபட்டு தப்பி விட்டது. அந்த யானைதான் சில நாட்கள் யானைகள் இறந்த பகுதியையே சுற்றிச் சுற்றி வந்தது. தன் கூட்டத்து யானைகள் இல்லாததால் தன் இருப்பிடத்திற்கு போகாமல் இங்கேயே வருடக்கணக்கில் சுற்றித் திரிகிறது. ஒரு காலை குறுக்கி, விந்தி விந்தி நடப்பதாலே இதை சுற்றுப்புற கிராம மக்கள் இதை கட்டையன் என்றே பெயரிட்டு அழைத்தனர்.
இது திடீரென்று வாழைத்தோப்புகள், சோளக்காடுகள், கரும்புக்காடுகள், தென்னந்தோப்புகள் என புகும். வேண்டியதை தின்னும். பிறகு ஏற்கெனவே தன் கூட்டம் அடிபட்ட ரயில்வே தண்டவாளம் அருகே செல்லும். மணிக்கணக்கில் அங்கேயே நிற்கும். ரயில் வரும் இரைச்சல் கேட்டால் ஓட்டம் பிடிக்கும் என இதைப் பற்றிய தகவல்களை வனத்துறையினரும், விவசாயப் பெருமக்களும் பரிமாறிக் கொண்டுமிருந்தனர். ஒரு முறை எட்டிமடையில் உள்ள ஒரு தோட்டத்து தண்ணீர் தொட்டியில் சாணத்தைக் கலந்து வைத்தாரே ஒரு பெண்மணி. அன்றாடம் அதில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை அதைக் குடிக்க முடியாமல் தவித்து, அடுத்தநாள் பட்டப்பகலில் வந்து அந்தப் பெண்மணியை மற்றவர் கண்ணெதிரே தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்றதே. அதே கொம்பன் யானைதான் இது என்றும் விவசாயிகளிடம் பேச்சு இருந்தது.
இதே சமயம் எங்கள் வீட்டிற்கு ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள தோட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிடப்பட்டிருந்தது. அந்த வாழை பூத்து காய்த்து பழுக்கிற சமயம் ஒருநாள் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அதனுள்ளே புகுந்து நாசம் செய்துவிட்டு சென்றுவிட்டது. இத்தனைக்கும் அந்தத் தோட்டம் முழுக்க மின்வேலி போடப்பட்டிருந்தது. மாலை 6 மணி தொடங்கி காலை 7 மணி வரை அந்த வேலிக்குச் செல்லும் மின்சாரத்திற்கு சுவிட்சை ஆன், ஆஃப் செய்து விட்டு செல்வார் தோட்டக்காரர். இந்தத் தோட்டத்திலிருந்து 50 மீட்டர் தள்ளி இந்த தோட்டக்காரருக்கு பண்ணை வீடு உள்ளது. அதில் அவர் தங்க மாட்டார். அதிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கோவைபுதூர் நகர்புற பகுதி வீட்டில் அவர் குடும்பம் இருந்தது. அங்கே சென்று விடுவார்.
குறிப்பிட்ட நாளில் மழைபெய்து மின்சாரம் தடைபட்டிருக்க, மின்வேலியை அனாயசயமாக உடைத்து உள்ளே புகுந்து வாழைகளை துவம்சம் செய்துவிட்டன யானைகள். அடுத்தநாள் காலை வந்த தோட்டக்காரர் ஆங்காங்கே சேதப்பட்டிருந்த வாழை மரங்களை ஒதுக்கிப் போட்டபடி, அரைகுறையாய் யானைகள் தின்றும், தின்னாமலும் இருந்த வாழைக்குலைகளை எடுத்து ஓரமாக சேகரித்துக் கொண்டிருந்தார்.
நானும், என் மனைவியும் சென்று பார்த்தோம். யானை புக்க வாழைத் தோப்பு எப்படியிருக்கும் என்பது அங்கு இரவில் தாம்பு கட்டியிருந்த யானைகளினால் நிரூபிக்கப்பட்டிருந்தன. வருடம் முழுக்க, பயிரிட்டு இன்னும் சில நாட்களில் அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டு போகவேண்டிய பல்லாயிரக்கணக்கான வாழைகள் இப்படி சேதப்பட்டிருந்தால் பொங்காத மனிதனும் பொங்கி விடுவான்.
அதைப் பற்றி வருத்தம்தோய நான் அவரிடம் பேசிக் கொள்ள அவரோ, ‘அது என்னங்க செய்யும். நமக்கு சின்ன வயிறு. அதுக்கே நமக்கு இத்தனை ஆசை. அதுக்கு எவ்வளவு பெரிய வயிறு. எங்கோ கிடைச்ச எடத்துல சாப்பிடத்தானே செய்யும். கரண்ட் இல்லாத நேரம் பார்த்து உள்ளே நுழைஞ்சிடுச்சு. அதுக்கு யார்தான் என்ன செய்ய முடியும்?’ என்றவர் யானை பிடுங்கிப்போட்ட ஒரு முழு வாழைத்தாரை எடுத்து, ‘இந்தாங்க. இதை கொண்டு போங்க. பழுக்க வச்சு சாப்பிடுங்க!’ என்றார். அதற்கு முன் அவரை எங்களுக்கு பழக்கமும் இல்லை. வேண்டாம், வேண்டாம் என்று மறுத்தபோதும், அவர் கேட்கவில்லை. ‘இத்தனைய வேற ஒண்ணும் செய்ய முடியாதுங்க. நீங்க எடுத்துட்டுப் போங்க. பொறியல் செஞ்சும் கூட சாப்பிடலாம்!’ என்று அன்போடு அனுப்பி வைத்தார். நாங்களும், அந்த வாழைத்தாரை தூக்க முடியாது தூக்கி வந்தோம். அதை பழுக்கப் போட்டும் இருந்தோம்.
அப்போதைக்கு மின்வேலி சரிப்படுத்தப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தாலும் காட்டு யானைகள் தொடர்ந்து வருவது தொடர்ந்தது. அடுத்தநாள், அதற்கடுத்தநாள் அந்தத் தோட்டத்திற்கு யானைகள் வருகைதான். ஒரே துவம்சம்தான். இப்படி சில வாரங்கள் கழித்து ஒருநாள் இரவு நீண்டநேரம் தூங்காமல் இருந்ததால் விடியற்காலையில் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன். நான் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அப்பால் காட்டிலிருந்து திடீர் பிளிறல் சத்தம். விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது. கடிகாரம் 6.45 மணியை காட்டியது. மனைவி சமையலறையில். ‘என்ன யானை பிளிறின சத்தம்?’ என்று கேட்டபடியே வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு மாடிக்கு ஓடினேன். ஒன்றும் தெரியவில்லை. என்னைத் தொடர்ந்து என் மனைவியும் ஓடி வந்தார்.
‘யானை பிளிர்ற மாதிரி சத்தம் கேட்டதே!’ என நான் திரும்பக் கேட்டதும், ‘எனக்கும்தான் கேட்டது. அப்படி ஒண்ணும் காணோமே!’என்று அவளும் பரிதவித்தாள். சற்றுநேரம் தொலைவில் உள்ள தோப்பு, அதற்கு முன்னால் அணிவகுத்திருக்கும் வாழைத்தோப்பு என கண்களை ஊடுருவ விட்டு ஒன்றும் காணாமல் சில நிமிடங்களில் திரும்பி வீட்டிற்குள் வந்து விட்டோம்.
சிறிது நேரம்தான். வெளியே ஒரே களேபகாரம். வெளியே வந்து பார்த்தால் எங்கள் வீட்டிற்கு தெற்குப் பகுதியிலிருந்து அங்குள்ள பள்ளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ‘யாரையோ யானை அடிச்சிருச்சு!’ என கூவிக் கொண்டே சென்றனர். நாங்களும் அவர்கள் பின்னால் ஓடினோம்.
ஏற்கெனவே யானைகள் துவம்சம் செய்துவிட்டு சென்ற வாழைத்தோப்பை தாண்டி சில மீட்டர் தூரத்தில் வெள்ளை வேட்டி சட்டை சகிதம் ஒருவர் கிடந்தார். அவரை சிலர் தூக்கிக் கொண்டிருந்தனர். சிலர் தண்ணீர் கொடுத்தனர். அந்த மனிதர் வேறு யாருமில்லை. அந்த வாழைத்தோப்பின் சொந்தக்காரர்தான். ‘சின்ன வயிறு உள்ள நமக்கே இவ்வளவு ஆசை. அவ்வளவு பெரிய வயிறுடைய யானை என்ன செய்யும்?’ என்று சொன்னபடி பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் யானை சேதப்படுத்திய வாழைகளை சரிப்படுத்தியபடி எங்களுக்கும் ஒரு வாழைத்தாரை எடுத்து தந்தாரே! அதே தோட்டக்காரர்தான்.
சற்று முன் பிளிறல் சத்தம் கேட்டதே. அப்போதுதான் இவரை ஒற்றை யானை ஒன்று அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பள்ளத்திற்குள் சென்று மறைந்திருக்கிறது. குற்றுயிராய் கிடந்த அவருக்கு கை, கால், முதுகு எலும்புகள் பல நொறுங்கி விட்டன. எங்கும் தொட முடியவில்லை. ஆளாளுக்கு கார் ஒன்றை வரவழைத்து தூக்கி வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். அவர் எப்படி யானையிடம் மாட்டினார். பிறகு அங்கிருந்த பண்ணையாள் ஒருவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது.
யானையிடம் அடிபட்ட தோட்டக்காரர் பெயர் ராசு. இவர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன் வீட்டிலிருந்து தோட்டத்திற்கான பண்ணை வீட்டிற்கு அன்றாடம் காலையில் வருவது வழக்கம். வருபவர் தனது இரு சக்கர வாகனத்திலேயே தான் பயிரிட்டுள்ள வாழைத்தோட்டத்தை சுற்றிலும் யானைகள் ஏதாவது புகுந்துள்ளதா? பயிர்கள் சேதப்பட்டுள்ளதா என்று கவனிப்பது வழக்கம்.
பிறகு சென்று மின்வேலியில் பாயும் மின்சாரத்தை சுவிட்ச் ஆஃப் செய்து துண்டிப்பது வழக்கம். அப்படித்தான் அன்றும் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். தோட்டத்தைச் சுற்றி கண்ணோட்டம் விட்டிருக்கிறார். இரவும் யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியிருப்பதை கண்ணுற்றுள்ளார். பிறகு யானைகள் அங்கே இல்லை என்பதை உணர்ந்து தோட்டத்துக்கு அப்பால் உள்ள மின்சார சுவிட்ச்சை ஆஃப் செய்து விட்டு திரும்ப வாழைத்தோட்டத்தை சுற்றி வந்திருக்கிறார்.
திடீரென்று பார்த்தால் தனக்கு நேர் எதிரே கருமையான பெரிய உருவம். மினுக்கும் கொம்புடன் அது ஒரு காட்டு யானை என்று இவர் உணர்வதற்குள் அது விளையாடி விட்டது. திரும்பி ஓட எத்தனித்தவரை ஒரே தட்டு கீழே விழுந்திருக்கிறார். ஓங்காரமாய் பிளிறிக் கொண்டே கால்களை தூக்கியிருக்கிறது. ‘அப்பனே ஒன்றும் செஞ்சுடாதே!’ என்று கெஞ்சாத குறையாக மனிதர் கையெடுத்திருக்கிறார். ஓங்கின காலை அப்படியே கீழே வைத்த யானை குனிந்து அவரை துதிக்கையால் சுழற்றியபடி உருட்டி வீசியிருக்கிறது.
அதன் பின் நேரே பள்ளத்தாக்கை நோக்கி ஓடி மறைந்திருக்கிறது. தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிய யானை பிளிறல் அதுதான். கீழே விழுந்து எலும்புகள் நொறுங்கிய தோட்டக்காரர் ராசு. படுத்தபடியே நகர்ந்து வந்திருக்கிறார். தூரத்தில் விழுந்து கிடந்த செல்போனை தட்டுத்தடுமாறி எடுத்து தன் தோட்டத்தில் பணியாற்றும் பண்ணைக்காரரை அழைத்திருக்கிறார். ‘யானை அடிச்சுடுச்சு. ஓடிவாடா!’ என அவர் அழைக்க அவர் ஓடி வந்த பின்புதான் இவர் இப்படி அலங்கோலமாக கிடந்த நிலை தெரிய வந்திருக்கிறது.
- இன்னும் பேசலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT