Published : 08 Apr 2018 08:19 PM
Last Updated : 08 Apr 2018 08:19 PM

யானைகளின் வருகை 159: மிஷன் மதுக்கரை மகராஜ்

அன்று யானை தாக்கியதால் பலத்த காயமுற்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விவசாயி ராசு முதலில் பிழைப்பதே கடினம் என்றார்கள். கால், கை, முதுகு, பாதம் என ஆறு இடங்களுக்கு மேல் எலும்புகள் முறிந்திருந்தன.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொன்றாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். எப்படியும் படுக்கையிலிருந்து மீள ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றார்கள். அப்படியே உயிர் மீண்டாலும் பழையபடி நடக்கவே முடியாது என்று பேசிக் கொண்டார்கள். எது எப்படியோ சில மாதங்களில் அவர் மீண்டு வந்து விட்டார். வழக்கம்போல் தோட்டத்துக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்து போவதை இப்போதும் பார்க்கிறேன். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த நேரத்தில் அதே காலை விந்தி விந்தி நடக்கும் கொம்பன் (கட்டையன்) சிலரை அடித்துக் கொன்று விட்டதாக விவசாயிகளிடம் புகார்கள் கிளம்பின.

எனவே இந்த கட்டையனை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர் வனவர்கள். அப்படி அதை விரட்டும்போது ஒரு வனத்துறை ஊழியர் யானை தாக்கி படுகாயமுற்றார். இன்னொரு வன ஊழியர் இறந்தார். எனவே இந்த யானையைப் பிடித்து முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லது சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் வலுத்தது.

அதையடுத்து வனத்துறையினர் மேலிடத்திற்கு எழுதி, ‘ஆப்ரேஷன் மகராஜ்’ என்ற பெயரில் இயன்ற வரை மயக்க ஊசி போட்டு உயிருடன் பிடிப்பது. இயலாதபட்சத்தில் சுட்டுக் கொல்வது என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்கினர். 2016 ஜூன் மாதம் 17-ம் தேதி பூஜை போடப்பட்டு நடந்த இந்த ஆப்ரேஷனில் வனத் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், காவல்துறையினர், வருவாய் துறையினர் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் களமிறங்கினர்.

இந்தப் பணிக்காக முதுமலையில் இருந்து விஜய், சாடிவயலில் இருந்து பாரி, சுஜய், டாப் ஸ்லிப்பில் இருந்து கலீம் ஆகிய 4 கும்கி யானைகள் மதுக்கரை அருகே உள்ள நவக்கரைக்கு கொண்டு வந்து முகாம் அமைத்து தயார் நிலையில் வைத்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இரண்டு ஆண் யானைகள் 6 யானைகள் கொண்ட குழு ஒன்றுடன் நெருக்கமாகச் சுற்றி வருவதைக் கண்டுள்ளனர் வனத்துறையினர். அதில் தென்பட்ட இரண்டு ஆண் யானைகளில் ஒன்றே மகராஜ், நேற்று வரை தனியே ஒற்றையாகத் திரிந்து கொண்டிருந்த இந்தக் கொம்பன், இப்போதுதான் கூட்டத்து யானையுடன் இருந்த இன்னொரு ஆண் யானையுடன் நட்பு பூண்டுள்ளது என்றும், அதில் குறிப்பிட்ட அந்த ஒற்றை ஆண் யானையை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மீடியாக்களிடம் தெரிவித்தனர் வனத்துறையினர்.

அந்த நேரத்தில் மதுக்கரை சுற்றுவட்டாரத்தில் (பத்திரிகையாளர் குடியிருப்பிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு) சாரல் மழை பெய்தது. அதனால் மகராஜ் யானையும் மற்ற 6 யானைகளும் காட்டிற்குள்ளிருந்து வெளியே வருவதும் தாமதமாகிறது. அதனால் ஒற்றை யானையைப் பிடிப்பதில் தாமதம் ஆகிறது எனவும் தகவல்கள் கொடுத்து வந்தனர். என்றாலும் கூட்டத்தில் உள்ள 6 யானைகளுடன் இந்த ஒற்றை சுற்றுவதால் நீண்டநேரம் அவற்றுடன் இருக்க முடியாது. பிரிந்து வந்தே ஆகவேண்டும் என்றே உறுதியாக தெரிவித்து வந்தனர் வனத்துறையினர்.

இதே நேரம் இவர்கள் ஆப்ரேஷனுக்கு குறி வைக்கும் ஆண் யானை உண்மையில் போக்கிரி யானையே கிடையாது. அது ஒரு சாதுவான பிராணி, மனிதர்களை அடித்துக் கொன்றும், விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதும் வேறு ஓர் ஆண் யானை. அதை விட்டுவிட்டு சாதுவான அப்பிராணி யானையை பிடித்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள் என்ற சர்ச்சைகளும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் குதி போட ஆரம்பித்தன.

இந்த சூழ்நிலையில் 17.06.2016 இரவு எட்டிமடை பகுதியில் உள்ள வாழைத்தோப்புகளில் 2 யானைகளுடன் சுற்றித்திரிந்த ஆண் யானை அடுத்தநாள் 18.06.2016 அதிகாலை 4.15 மணிக்கு மதுக்கரை ராணுவ முகாம் அருகே வந்தது. அங்கே தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் அதைச் சுற்றி வளைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் மயக்க ஊசியும் போக்கு காட்டிய யானையை பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர். நவக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கிகளைக் கொண்டு வந்து அவற்றின் உதவியுடன் லாரியில் ஏற்றி டாப் ஸ்லிப் வரகளியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு இதற்கென அமைக்கப்பட்டிருந்த கராலில் அடைத்தனர்.

அதையடுத்து அடுத்தடுத்து இந்த மதுக்கரை மகராஜை ஒட்டி பல்வேறு விநோதமான சம்பவங்கள் நடைபெற ஆரம்பித்தன. எந்த யானை பிடிக்கப்படவேண்டும், போக்கிரி யானை (கட்டையன்) என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்களோ, அந்த யானை அன்றைய தினம் இரவே மதுக்கரை குவாரி ஆபீஸ் பக்கம் சுற்றித்திரிய அங்குள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அது அங்குள்ள வாழைத்தோப்பு ஒன்றை சேதப்படுத்த பட்டாசுகள் வெடித்து அதை துரத்தியடித்த சம்பவமும் நடந்தது.

இதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் இரவே மகராஜ் யானை பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தள்ளியுள்ள ரயில் பாதையில் ஒரு 35 வயதுள்ள பெண் யானை ரயிலில் அடிபட்டு இறந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 3.5 டன் எடை கொண்ட இந்த யானை தன் குழுவைச் சேர்ந்த மற்ற 5 யானைகளுடன் ரயில்பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது வந்த பெங்களூர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இறந்துள்ளது.

விவரம் அறிந்து சம்பவ இடத்தை வனத்துறையினர் வந்து மருத்துவர் குழுவுடன் பார்வையிட்டு, ‘யானையின் தலையில் ரயில் இன்ஜின் மோதியதால், நிலைகுலைந்த யானை ரயில்பாதையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக இதனுடன் வந்த மற்ற யானைகள் தப்பியுள்ளன!’ என்று வியாக்கியானப்படுத்தினர்.

ஆனால் பொதுமக்களோ, ‘இந்த யானையுடன் ஆண் யானையும் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. அதனுடன்தான் கட்டையனும் அடிக்கடி சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். உண்மையை சொன்னால் வனத்துறையினர் மதுக்கரை மகராஜ் என்ற பெயரில் பிடித்த ஆண் யானைதான் இந்தக் கூட்டத்திற்கு வழிகாட்டி யானை. அதை அவர்கள் பிடித்துச் சென்றதால் இவற்றுக்கு அசலான வழிகாட்டி இல்லாமல் தடம் மாறி, இப்படி ரயிலில் சிக்கி இறந்துள்ளது. வனத்துறை பிடிக்க வேண்டிய கட்டையன் என்கிற மதுக்கரை மகராஜ் நேற்று கூட எட்டிமடை வாழைத்தோப்புக்குள் புகுந்து அழிச்சாட்டியம் செய்து விட்டு போயிருக்கிறது!’ என்று தெளிவுபடுத்தினர்.

தன்னார்வலர்கள் சிலரோ, ‘வனத்துறையினர் தெரிந்தேதான் கூட்டத்தில் உள்ள ஆண் யானையைப் பிடித்துள்ளனர். இப்போது அவர்களிடம் உள்ள கலீம், சுஜய், விஜய் போன்ற பல்வேறு கும்கி யானைகளுக்கு வயதாகி ஓய்வு பெறும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இனியும் விட்டால் வனத்துறை முகாமிற்கு கும்கி யானைகள் இல்லாமலே போய்விடும். அதற்கு பழக்கப்படுத்த தோதான இளமையான ஓர் ஆண் யானை வேண்டும். அதற்குத்தான் ஒரு பாவமும் அறியாது கூட்டத்துடன் கூட்டமாக, அவற்றுக்கு வழிகாட்டியாக இருந்த யானையை மதுக்கரை மகராஜ் என்ற பெயரில் பிடித்து சென்றுள்ளனர்!’ என்றும் குற்றம் சாட்டினர்.

ஆனால் இதையெல்லாம் வனத்துறையினரும், மருத்துவர் குழுவினரும் அறவே மறுத்தனர். தாங்கள் பிடித்து கராலில் அடைத்துள்ள யானைதான் மதுக்கரை மகராஜ் என்றே சாதித்தனர். அவர்கள் இப்படி சொன்ன வரிகளின் ஈரம் கூட உலரவில்லை.

அடுத்த நாள் மறுபடி ஓர் அதிர்ச்சி. இவர்கள் பிடித்து சென்ற மகராஜ் வரகளியாறு முகாமில் கராலில் அடைத்திருந்தார்களே மதுக்கரை மகராஜ். அது கராலில் அடைபட்ட நிலையிலேயே இறந்தது.

இதற்கு முந்தினநாள்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், ‘பிடிக்கப்பட்ட மகராஜ் யானையை காட்டில் விடவேண்டும். அதன் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்!’என்றெல்லாம் கோரி மனு செய்திருந்தார். அதற்குப் பதிலாக ‘மகராஜ் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறது. அதை காட்டில் விடவேண்டிய அவசியம் இல்லை!’என்பன போன்ற விளக்கங்களை வனத்துறையினர் கொடுத்திருந்தனர். அதனால் அந்த வழக்கு வனத்துறைக்கு சாதகமான தீர்ப்புடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில்தான் பிடித்து அடைக்கப்பட்ட மூன்றாம் இறந்தது. அந்த விஷயம் வன ஊழியர்கள் மூலம் மீடியாக்களுக்கு கசிய, அதை மூடி மறைப்பதிலேயே குறியாக இருந்தனர் வனத்துறை அதிகாரிகள். இறுதியில் இரவு 8.30 மணி வாக்கிலேயே அந்தத் தகவலை உறுதி செய்தனர். அதுவும் தங்களுக்கு சாதகமாக உள்ள தன்னார்வலர்கள் மூலமே இதை மீடியாக்களுக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

‘பொதுவாக கூண்டில் அடைக்கப்பட்ட காட்டு யானைகள் மிரண்டு அலைபாயும். கடுமையாகப் பிளிறும். ஆக்ரோஷமாகத் தும்பிக்கையை வீசிக் கூண்டை உடைக்க முயற்சிக்கும். வேகமாக ஓடி வந்து நெற்றியாலும் தந்தத்தாலும் கரால் மரங்களை முட்டும். அந்த சமயம், அதன் அருகில் அனுபவம் மிக்க மாவுத்தர்களே கிட்டப் போக பயப்படுவார்கள். இப்படித்தான் மகராஜ் யானையும் நெற்றியில் பலமுறை மோதியிருக்கிறது. அதில் மரணமும் நேர்ந்திருக்கிறது. யானை கரால் கூண்டில் மோதியதில் அதன் நெற்றியும் தந்தமும் உடைந்திருக்கின்றன. கூண்டின் உறுதியான மரம் கூட உடைந்திருக்கிறது!’ என்பதுதான் அப்போது மகராஜ் மரணத்திற்கு அவர்கள் சொன்ன வியாக்கியானம்.

- மீண்டும் பேசலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x