Published : 10 Apr 2018 07:11 AM
Last Updated : 10 Apr 2018 07:11 AM
புதுடெல்லி / பெங்களூரு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல் திட்டத்தின் வரைவு அறிக்கையை தயாரித்து வருகிற மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக் கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப். 16-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு எவ்வித செயல் திட்டத்தையும் உருவாக்காமல் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவான மார்ச் 29-ம் தேதி முடியும் வரை மவுனம் காத்தது. இதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன, அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை அமைக்க கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் வேண்டும். கர்நாடகாவில் தேர் தல் நடைபெறுவதால் வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என குறிப்பிட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு வேண்டுமென்றே நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியுள்ளது. உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியது. இதேபோல புதுச்சேரி, கேரள அரசும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.
அமைதி காக்கவும்
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் நீரின்றி தவிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் தினமும் போராட்டங் கள் நடந்து வருகின்றன. ஆங்கில வழி தொடக்கக் கல்வி பயின்ற மாணவருக்கு கூட ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) என்பதன் பொருள் தெரியும். ஆனால் மத்திய அரசுக்கு தெரியவில்லை என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் முழுமையாக படித்தாலே ‘ஸ்கீம்’ என்பதன் முழு விளக்கமும் தெரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற் றுக் குழு ஆகிய இரண்டையுமே காவிரி நடுவர் மன்றம் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டுள்ளது. அதனை மத் திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அமைக்காமல் இருக்கிறது” என வாதிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உச்ச நீதிமன்றம் பெற்றுத் தரும். நதிநீர் பங்கீட்டு செயல்திட்டத்தை உருவாக்குவதில் உச்ச நீதிமன்றம் உறுதி யாக உள்ளது. ஆனால் இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இருக்கும்போது, நீதிமன்றத்துக்கு வெளியே பேசுவது சரியல்ல. தமிழகமும் கர்நாடக மும் இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கான நீரை கர்நாடகா திறக்க வேண்டும். நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் நிச்சயம் தீர்வு காணும்” என்றார்.
மத்திய அரசுக்கு கண்டனம்
இதையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் நீதி பதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவை மத் திய அரசு ஏன் அமல்படுத்தவில்லை. மார்ச் 29-ம் தேதி வரை எதுவும் செய்யாதது ஏன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இத்தகைய கால தாம தம் ஏற்புடையது அல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்க முடியாது. தீர்ப்பில் உள்ளவாறு காவிரி நதி நீர் பங்கீட்டு செயல் திட்டதை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதில் இருந்து மத்திய அரசு காரணம் கூறி தப்பிக்க முடியாது. காலக்கெடு முடியும் நேரத்தில் விளக்கம் கோரும் மத்திய அரசின் செயல்பாடு கண்டனத் துக்குரியது.
‘ஸ்கீம்’ என்பதனை தற்போது துல்லியமாக வரையறுக்க முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் இணைத்தே உச்ச நீதிமன் றம் தீர்ப்பு வழங்கியது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பையோ அல் லது குழுவையோ அமைப்பதாக இருக்கும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். எனவே வருகிற மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஒரு செயல் திட்டத்தின் வரைவை தயாரித்து தாக்கல் செய்ய வேண் டும்” என உத்தவிட்டார்.
இதற்கு பதிலளித்த வேணுகோபால், “செயல் திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரிப்ப தில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. உரிய காலத்துக்குள் செயல் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற மே மாதம் 3-ம் தேதிக்கு தள்ளி வைக் கப்பட்டது.
தமிழக அரசு நம்பிக்கை
உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்த தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறியபோது, “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என நம்புகிறோம். இதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக தெரியவில்லை” என்றார்.
இதனிடையே தமிழக விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளோ, “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிட்டவாறு மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ‘ஸ்கீம்’ என்பதன் அதிகாரம் என்ன, அது எத்தகைய அமைப்பு என்பதை உச்ச நீதிமன்றம் துல்லியமாக தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசோ ஏற்கும் ‘ஸ்கீம்’ காவிரி மேலாண்மை வாரியத்தை போன்ற பலம் வாய்ந்த அமைப்பாக இருக்க வேண்டும். வருகிற மே 12-ம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் அத்தகைய பலமான அமைப்பை மத்திய அரசு உருவாக்குவது சந்தேகமாக உள்ளது” என்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி நடைபெறவிருந்த முழுஅடைப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT