Published : 04 Apr 2018 12:32 PM
Last Updated : 04 Apr 2018 12:32 PM
இப்போது இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திற்குள் செல்லலாம். பச்சாபள்ளி என்றொரு கிராமம். கோவை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்று. கோவை மாநகரின் தென்மேற்கு எல்லையில் அமைந்திருக்கிறது. அதை ஒட்டியே பிரஸ் என்கிளேவ் எனப்படும் பத்திரிகையாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அதற்கு அப்பால் சில கிலோமீட்டர் தூரத்தில் பாலக்காட்டு கணவாயும் அய்யாசாமி, தர்மலிங்கேஷ்வரர், சின்னாம்பதி, புதுப்பதி, அய்யம்பதி உள்ளிட்ட மலைகளும், ராஜகேசரிப் பெருவழிப் பாதைக்குரிய பள்ளத்தாக்கு பகுதியும் உள்ளது என்பதை அந்த அத்தியாயத்தில் கூறியதோடு, இங்கே ஒரு நாள் நள்ளிரவில் வந்த நான்கு யானைகள் கொண்ட கூட்டம் எந்தமாதிரியான அழிச்சாட்டியம் செய்தது என்பதையும் த்ரில் அனுபவமாக அதில் விவரித்திருந்தேன்.
இந்த பச்சாபள்ளி என்ற கிராமத்தில் அன்று மட்டுமல்ல, வருடத்தில் பாதிநாட்கள் காட்டு யானைகள் உள்ளே நுழைவதும், வாழை, தென்னை மரங்கள், சப்போட்டா, கொய்யா, முருங்கை என மரங்களை சாய்த்துவிட்டுச் செல்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காட்டு யானைகளின் குறியில் எங்கள் பகுதியும் சிக்காமல் தப்பியதில்லை. இந்த பகுதியில்தான் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறை குறிப்பிட்ட மகராஜ் யானையும் சுற்றி வந்தது. அதை பலமுறை நானே என் வீட்டில் இருந்தபடியே பார்த்திருக்கிறேன்.
இது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவு பெரிய யானைகள் விழிப்புணர்வுத் தொடரை அனுபவப்பூர்வமாக எழுதிய செய்தியாளரின் வீடு யானைகள் உலாவும் காட்டுக்குள்தான் அமைந்திருக்கிறது. அதுவும் பத்திரிகையாளர்கள் காலனி (பிரஸ் என்கிளேவ்) என்ற பெயரைத் தாங்கியுள்ளது என்பதும் பெரிய அதிர்ச்சியாகவும் கூட இருக்கும். இங்கே நாங்கள் வீடுகட்டி வந்ததே பெரிய கதை. அதை இந்த இடத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
கோவை மாநகரின் நடுமையப்பகுதி என்றால் உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ் பகுதிகளைச் சொல்லலாம். இங்கிருந்து சுமார் 8 முதல் 10 மைல் தொலைவில்தான் நான் பிறந்து வளர்ந்த ஒண்டிப்புதூர் பகுதி அமைந்திருந்தது. எங்களுக்கான சிறுவீடு உடன்பிறந்த சகோதரர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில்தான் குடியிருந்தேன்.
பத்திரிகைப் பணியில் சேர்ந்த சமயம் கோவையில் பத்திரிகையாளர்களுக்காக அரசு சலுகை விலையில் இடம் கொடுப்பதாக பேச்சு இருந்தது. மதுரையில், சென்னையில், திருச்சியில் என சகல மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தின் மூலம் பத்திரிகையாளர்கள் பயன்பெற்றிருக்க கோவையில் மட்டும் இது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
அந்த அளவுக்கு இங்கே நிலத்தின் விலைமதிப்பு கூடுதலாக இருந்தது. அல்லது அரசுக்கு சுட்டிக் காட்டப்படும் இடம் ஏதாவது ஒரு வில்லங்கத்தில் இருந்தது. இரண்டும் இல்லாவிட்டால் குறிப்பிட்ட இடத்தை ஏதாவது ஒரு அரசியல்வாதி குறிவைத்து ஆக்கிரமிக்க தட்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். அதுவும் இல்லையென்றால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு பிரிவாய் பத்திரிகையாளர்கள் பிரிந்து ஒற்றுமையற்ற நிலை நீடிக்கும்.
1990 ஆம் முதல் 2000 ஆம் ஆண்டு வரை இந்தப் பிரச்சினை இப்படியே இழுத்துக் கொண்டிருக்க, பத்திரிகையாளர்களில் சிலர் குழுவாக சேர்ந்து பணம் போட்டு சுமார் 10 ஏக்கர் நிலம் வாங்கி, வீட்டு மனைகளாக பிரிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்படி கிடைக்கப் பெற்றதுதான் கோவைபுதூர் பச்சாபள்ளி அருகே உள்ள இந்த காலனி நிலம். இது கோவை நகருக்கு தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, நிலச் சொந்தக்காரர்களிடம் டோக்கன் அட்வான்ஸ், அக்ரிமெண்ட், கிரையம் முடித்து, அதிகாரிகளை அணுகி, ‘அப்ரூவல் சாலை, தண்ணீர் வசதியாவது செய்து கொடுங்கள்!’ என தொடர் கோரிக்கைகள் வைத்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு செய்ததெல்லாம் பெரிய கதை. இந்த இடத்தை நேரில் சென்றே பார்க்காமல் பலர் கிரையம் செய்து விட்டனர்.
அந்த நேரத்தில்தான் இந்தப் பகுதி முழுக்க சோளக்காடு, கருநாகம், தேள் போன்றவை எல்லாம் பெரிய சைஸில் இருக்கும். வீடுகட்டவே தகுதியில்லாத இடம் என்றெல்லாம் ஒரு தரப்பு பிரச்சினை கிளப்பியது. அதில் இடத்திற்கு பணம் கொடுத்த பலர் அதை திருப்பி வாங்கிக் கொண்டும் சென்று விட்டனர். அதில் கிடைத்த இடைவெளியில் - இக்கட்டான சூழ்நிலையில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைகளை வாங்கவும் செய்தனர். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு வீட்டு மனை கிரையம் செய்துவிட்டு வெகுநாட்கள் பின்பே சென்று பார்த்தேன். வெறும் பொட்டல் காடு. இப்போதைக்கு வீடுகள் கட்ட வாய்ப்பில்லை.
இந்த நிலையில்தான் மற்ற பத்திரிகையாளர்கள் சிலர் இங்கே முதல்கட்டமாக வங்கிக்கடன் போட்டு வீடுகள் கட்ட ஆரம்பித்தனர். மொத்தம் 25 வீடுகள் ஆன நிலையில் இனி நாமும் கட்டலாம் என்று வங்கிக்கடன் பெற்று என் குடும்பமும் இறங்கியது. அப்போதுதான் அங்கே பல கதைகள் வெளிவந்தன. அதில் யானைகளின் கதைகளும் கட்டவிழ்த்துக் கொண்டன.
இந்தப் பகுதியை ஒட்டி இருக்கும் பரிபூர்ண எஸ்டேட்டில் பெரிய, பெரிய நவீன பங்களாக்கள் உள்ளன. இவற்றுக்கு பெரிய காம்பவுண்டும் உள்ளது. அங்கே அடிக்கடி காட்டுயானைகள் வந்து ஒரே ரகளை என்றார்கள். எங்கள் காலனிக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கூட்டுறவு சொசைட்டி மூலம் கட்டப்பட்ட வீடுகளில் ஆட்களே குடியிருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு யானைகளின் வருகை. ஒரு முறை கதவை உடைத்துக் கொண்டு ஒரு யானை உள்ளே நுழைய வேறொரு வழியே கணவன் மனைவி தப்பித்து வந்த கதையைச் சொன்னார்கள். அதனால் அங்குள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகவே இருந்தன. ‘இதற்கும் அப்பால் தென்மேற்கே ஒரு தண்ணீர் குட்டை இருப்பதால் அங்கே நீர் அருந்த எப்போதும் யானைகள் வரும். இப்போது கூட போனால் பார்க்கலாம் வர்றீங்களா?’ என்று கேட்டார் எங்கள் வீட்டிற்கு பாறைக்கால் போட்ட மேஸ்திரி ஒருவர்.
அதை விடக் கொடுமை. இந்தக் காலனி புதிதாக உருவாக்கப்பட்ட போது ஒரு வாட்ச்மேன் இருந்ததாகவும், அவர் இங்கு கட்டப்பட்டிருந்த சிறிய அறையில் தங்கியிருந்ததாகவும், அவர் ஒரு நாள் இரவு காட்டு யானையைப் பார்த்து மூர்ச்சையாகியே இறந்ததாகவும் பச்சாபள்ளிக்காரர்கள் அதிர்ச்சியூட்டினார்கள். பச்சாபள்ளி என்பது பத்திரிகையாளர் காலனியிலிருந்து கிழக்குப் பகுதியில் ஒரு பர்லாங் தொலைவிலேயே இருக்கிறது. அது நீண்ட பள்ளமான பகுதி. புறம்போக்கு நிலம். இந்த நிலத்தில் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் கூரை வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்தப் பள்ளத்திலேயே யானைகள் வருவதும், போவதுமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. இந்தப் பள்ளத்தைச் சுற்றிலும் சோளக்காடு, வாழைத்தோப்பு, தென்னந்தோப்புகள். இவை விளைச்சல் கண்டால் போதும் யானைகள் படையெடுத்துவிடுவதும், தங்கள் விளைச்சலை மின்வேலி போட்டு பாதுகாப்பதுமாக விவசாயிகள் இருந்து வந்திருக்கின்றனர்.
அவர்களும், ‘இங்கே யானைகள் வருவது இந்த 10 வருஷத்திற்குள்தான் நடக்குது. அதுக்கு முன்னால மலங்காட்டை விட்டு அதுக கீழே இறங்காது. இப்ப அய்யாசாமி மலை, அய்யம்பதி, சின்னாம்பதி, மதுக்கரை மலைகள், தர்மலிங்கேஸ்வரர் மலைகள் எல்லாத்திலும் குடியிருப்புகள் மட்டுமல்ல, கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வந்துவிட்டன.
போதாக்குறைக்கு நவீன நகரம் ஒன்றும் 1300 ஏக்கரில் உருவாகியிருக்கு. சின்னதும் பெரிசுமா காலனிகளும் நிறைய ஆயிடுச்சு. அது மட்டுமல்லாம மதுக்கரை சிமெண்ட் ஃபேக்டரி, மலபார் சிமெண்ட் ஃபேக்டரி எல்லாம் பாறைகளை உடைக்க முன்பு இல்லாத அளவு பெரிய அளவு வெடிகளைப் பயன்படுத்தறாங்க. அதுதான் யானைகள் இங்கே வந்துடுது!’ என்பதை மாறாமல் சொன்னார்கள்.
இப்படியான சூழலில் சில வீடுகள் கிரஹப்பிரவேசத்தின் போதும் கூட சில வீடுகளில் கட்டியிருந்த வாழைமரங்களை சேதப்படுத்திய சம்பவங்களையும் சொன்னார்கள். நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தபோதுதான் எட்டிமடை அருகே (இங்கிருந்து 5 கிலோமீட்டர்) ரயிலில் மூன்று யானைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பர்வமும் நடந்தது. இதையெல்லாம் கேட்கக் கேட்க யானை குறித்த அச்சம் எனக்கு ஏற்பட்டதோ இல்லையோ, என் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. எந்த இடத்தில் திரும்பினாலும் யானை நிற்பதுபோலவே மனம் கற்பனை கொண்டு விடும்.
அப்படியான இடத்தில் குடிபெயர்ந்த பிறகு சுற்றிலும் உள்ள குடியிருப்புகளிலும் யானைகள் கதையே விஸ்வரூபமெடுத்தது. அந்த கதைகளை கேள்விப்பட்டு அதை மினி ஜூராஸிக் பார்க் என்றே கிண்டல் கூட செய்தார்கள்.
- மீண்டும் பேசலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT