Published : 20 Apr 2018 07:43 AM
Last Updated : 20 Apr 2018 07:43 AM
சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து ‘திருடன் - போலீஸ்’ விளையாட்டில் ஈடுபட்ட அனுபவத்தில், டாக்டரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை துரத்திப் பிடித்ததாக சிறுவன் சூர்யா கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர் ‘டி’ பிளாக் 3-வது தெருவில் மகப்பேறு மருத்துவரான அமுதா (50) கிளினிக் வைத்திருந்தார். இவரிடம் கத்தி முனையில் செயின் பறித்து தப்பித்த திருடனை திருமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்ய குமார் (17) தனியாளாக விரட்டிச் சென்று பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
காவல் ஆணையர் பாராட்டு
துணிச்சலாக திருடனை துரத்திப் பிடித்த சிறுவன் சூர்யாவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்நேற்று தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நேரில் பாராட்டினார். “சமூகத்தில் நடைபெறும் இதுபோன்ற தவறுகளை தடுக்க வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை சூர்யா நிரூபித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறைய வேண்டுமானால் சூர்யாவைப் போலவே அனைத்து பொதுமக்களும் குற்றங்களைத் தடுக்க துணிச்சலுடன் முன்வர வேண்டும்” என்றார்.
இந்நிலையில், திருடனை துணிச்சலுடன் விரட்டிப் பிடித்தது பற்றி ‘தி இந்து’விடம் சூர்யா கூறியதாவது:
எனது தந்தை நாராயணன் டெய்லராக உள்ளார். தாயார் எல்லம்மாள் குடும்பத்தை கவனித்து வருகிறார். எனது 2 சகோதரிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். நாங்கள் குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறோம். போதிய வசதி இல்லாததால் நான் 9-ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8.40 மணியளவில், எங்கள் கடைக்கு எதிர் பக்கத்தில் இருந்து ‘திருடன்... திருடன்...’ என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தபோது, எங்கள் கடைக்கு எதிரே கிளினிக் நடத்தி வரும் டாக்டர் அமுதா கூச்சலிட்டவாறே ஓடி வந்தார்.
நான் அவரிடம் கேட்டபோது, “கிளினிக்குக்கு வந்த இளைஞர் ஒருவர், ‘நிறைமாத கர்ப்பிணியான எனது மனைவியை எப்போது சிகிச்சைக்கு அழைத்து வரலாம்’ என்று கேட்டார். இரவு 9 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்றேன். கிளினிக்கில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த இளைஞர் அடுத்த 10 நிமிடங்களில் திரும்பி வந்து கத்தி முனையில் மிரட்டி, 10 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுகிறார்” என்று கூறி கதறி அழுதார்.
அரை கிலோமீட்டர் தூரம்
அதே நேரத்தில் திருடன் சற்று தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தார். அவரை விரட்டிப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. உடனே அவரை துரத்திக்கொண்டு ஓடினேன். நான் துரத்துவதைப் பார்த்து அவர் மேலும் வேகமாக ஓடினார். குறுகலான சின்னச் சின்ன சந்துகள் வழியாக ஓடிக்கொண்டிருந்தார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் துரத்திய பிறகு திருடனை நெருங்கிவிட்டேன். அருகில் சென்றதும் நான் பாய்ந்து திருடனின் சட்டைக் காலரை பிடித்தேன்.
அதே நேரத்தில் எனது ஒரு காலை அவரது கால்களுக்கு இடையே விட்டேன். இதனால் அவர் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து என் தலையில் தாக்க முயன்றார். நான் அதைத் தடுத்து, அவரது மூக்குப் பகுதியில் 2 முறை பலமாகக் குத்தினேன். திருடனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சரிந்து விழுந்து விட்டார். உடனே அவரது சட்டைப்பையில் இருந்த டாக்டரின் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டேன்.
மயங்கி விழுந்த திருடன் சிறிது நேரம் மயக்கத்தில் கிடந்தார். அவரைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. அருகேயிருந்த கடையில் தண்ணீர் வாங்கி அவர் முகத்தில் தெளித்தேன். அவர் மயக்கம் தெளிந்து எழுந்ததும், அருகில் இருந்தவரின் செல்போனை வாங்கி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். சற்று நேரத்தில் அங்கு வந்த போலீஸார் திருடனைப் பிடித்துச் சென்றனர்.
இவ்வாறு சூர்யா கூறினார்.
‘திருடன் போலீஸ்’ விளையாட்டு
சம்பவ இடத்தில் விசாரித்தபோது, சிறுவன் சூர்யாவை தவிர வேறு யாரும் திருடனை துரத்திப் பிடிக்க முயலவில்லை என்பது தெரிய வந்தது. டாக்டர் எழுப்பிய கூச்சலால் அந்த வழியாக சென்ற பலர் அங்கு கூட்டமாக கூடி விட்டனர். தனது தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடும் திருடனை கைகாட்டிய படி டாக்டர் கதறி அழுதுள்ளார். ஆனால் யாரும் திருடனை துரத்தாத நிலையில், சிறுவன் சூர்யா தனி ஆளாக துரத்திச் சென்று திருடனைப் பிடித்திருக்கிறார்.
இந்த துணிச்சல் எப்படி வந்தது என்று சூர்யாவிடம் கேட்டபோது, “சின்ன வயதில் நண்பர்களுடன் சேர்ந்து ‘திருடன், போலீஸ்’ விளையாட்டு விளையாடுவேன். அப்போது வளைந்து வளைந்து செல்லும் குறுகலான சந்துகளுக்குள் ஓடும் நண்பர்களை வேகமாக விரட்டிச் சென்று பிடிப்பேன். திருடனை கைகாட்டியவாறு டாக்டர் கதறி அழுதவுடனேயே, என்னையும் அறியாமல் திருடன் போலீஸ் விளையாட்டில் துரத்திச் செல்வதைப் போலவே திருடனை துரத்தத் தொடங்கி விட்டேன்” என்று கண்களை அகல விரித்தபடி சம்பவத்தை விவரித்தார்.
சம்பவம் பற்றி கூறிய டாக்டர் அமுதா, “கத்தி முனையில் பறித்துச் செல்லப்பட்ட எனது தங்கச் சங்கிலி திரும்ப கிடைக்கும் என்று நம்பவில்லை. சிறுவன் சூர்யா இவ்வளவு துணிச்சலுடன் திருடனை விரட்டிச் சென்று சங்கிலியை மீட்டது எனக்கு இப்போதும் வியப்பாகவே உள்ளது” என்றார்.
இதற்கிடையே சிறுவனால் துரத்திப் பிடிக்கப்பட்டவர் திருவள்ளூரைச் சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT