Published : 14 Feb 2018 06:47 PM
Last Updated : 14 Feb 2018 06:47 PM
காடுகளுக்குள் வனவிலங்கு வேட்டையாடுபவர்களை தடுக்கவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், வனத்துறைக்கு காடுகுளுக்குள் செல்ல வழிகாட்டவும் அனுபவம் மிக்கவர்கள் தேவை என்பதாலும், காடுகளையே உய்விடமாக கொண்டு வாழும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கும் நோக்கிலும், காடுகளுக்குள் வசிக்கும் இளைஞர்களுக்கு வேட்டைத்தடுப்புக் காவலர்கள் என்ற ஒப்பந்தப் பணி தமிழக அரசால் வழங்கப்பட்டது. அந்தப் பணியில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தமிழகம் முழுக்க சுமார் 3 ஆயிரம் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலப்போக்கில் வன அதிகாரிகள் டார்ச்சர், வன அலுவலர்களே இவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்துவது, செய்ய மறுக்கும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற காரணங்களால் பழங்குடியின இளைஞர்கள் பலர் வேலையை விட்டே சென்றனர். அதற்கு இணையாக பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இப்பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் நிமித்தம் 'மனித-வன உயிரின மீட்புக் காவலர்கள்' என்ற பணியிடம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாகவே உருவாக்கப்பட்டன. இப்படி சுமார் 2 ஆயிரம் பேர் தமிழகம் முழுக்க பணியில் உள்ளனர். இந்த இரண்டு பணியிடங்களின் பெயர்தான் வேறே ஒழிய இருதரப்புக்கும் பணி ஒன்றேதான். என்றாலும் வேட்டைத்தடுப்புக் காவலருக்கு ரூ.6,750 தமிழக அரசு தொகுப்பு ஊதியமாகவும், மனித-வன உயிரின மீட்புக் காவலர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ7,600-ம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தையும் முழுமையாக இப்பணியில் இருப்பவர்கள் காண்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இவர்களின் சம்பளம் வனவர்கள் கையில் வந்தே இவர்களுக்கு வருவதால் அதில் பல்வேறு தொகைகளை வனவர்கள் பிடித்தம் செய்த பின்பே தருகிறார்கள்.
குறிப்பாக தங்கள் சொல்படி கேட்பவர்களுக்கு ஒரு தொகையும், தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு ஒரு தொகையும் அளிப்பதே அவர்களின் வழக்கமாக உள்ளது. மனித-வன உயிரின மீட்புக் காவலர்கள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்திற்கு மேல் சம்பளமே வாங்க முடிவதில்லை. அதேநேரம் மாதாமாதம் சம்பளமும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வருவதுமில்லை. சிலசமயம் மூன்று மாதத்திற்கு முந்தைய சம்பளம் இந்த மாதம் கிடைக்கும்.
''இந்த இன்னல்களோடுதான் காடுகளுக்குள் நேரம் காலம் பாராமல் வன விலங்குகளை தேடுகிறோம். விரட்டியடிக்கிறோம். இரவு முழுக்க காடுகளில் தங்கி மரக் கடத்தலை தடுக்கிறோம். சுற்றுலா பயணிகள் விஐபிக்களை காடுகளுக்குள் அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பக் கூட்டி வருகிறோம். அப்படிப் பணியில் ஈடுபடும்போது பல்வேறு இன்னல்கள் நேரிடுகிறது. கணபதியை போல் பலர் வனவிலங்குகளால் உயிரையே இழந்துள்ளார்கள். அதற்கெல்லாம் துறை ரீதியாக எந்த ஒரு நஷ்ட ஈடும் அளிப்பதில்லை. ரொம்பவும் பிரச்சினை கிளப்பினால் மட்டும் சுற்றுலா மூலம் வரும் வருவாய் போன்ற வன அலுவலகத்தில் வேறு வகையில் சேர்க்கப்பட்டுள்ள நிதியிலிருந்து சொற்ப நிதியை எடுத்துக் கொடுத்து எங்கள் வாயை அடைக்கிறார்கள்!'' என பொங்கி தீர்த்தார்கள் இவர்கள்.
உதாரணமாக கடந்த 2007-ல் தியாகு என்ற வேட்டைத்தடுப்புக் காவலர் வால்பாறை மானாம்பள்ளி வன ரேஞ்சில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணிக்காக குழுவினருடன் காடுகளுக்குள் சென்று வரும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். எந்த நஷ்ட ஈடும் தரவில்லை. வால்பாறை ஐயர்பாடி செட்டில்மென்ட் சேர்ந்த செந்தூரபாண்டி என்ற வேட்டைத்தடுப்புக் காவலர் அதிகாரி டார்ச்சர் தாங்காமல் விஷம் அருந்தி இறந்தார். அவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி ரேஞ்சில் ஒரு வீட்டுக்குள் கொடிய விஷப்பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. அதைப் பிடித்து வனத்தில் விடச் சென்ற வேட்டைத்தடுப்புக் காவலர் பாம்பு தீண்டியதில் இறந்தார்.
இது தவிர களக்காடு, முண்டந்துறை நெல்லை ரேஞ்சில் பாண்டி என்ற வேட்டைத்தடுப்புக் காவலர் காட்டுக்குள் விரட்டப்பட்ட கரடி திரும்பி வந்து தாக்கியதில் படுகாயமுற்றார். ஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் இருந்து நிறைய செலவழித்து உயிர்பிழைத்து திரும்பி வந்தார். அவருக்கு ஆஸ்பத்திரி செலவு கூட அரசு கொடுக்கவில்லை. அப்பர் கோதையாறு பகுதியில் ரமேஷ் கண்ணன் பாம்பு கடிச்சு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் பிரச்சினை செய்ததால் ரூ.10 ஆயிரம் மட்டும் வனஅலுவலக பவுண்டேஷன் நிதியிலிருந்து அளித்தார்கள்.
களக்காடு முண்டந்துறை முகாமில் ஒரு முறை தீ விபத்து ஏற்பட்டது. அதிலும் வேட்டைத்தடுப்புக் காவலர் ஒருவர் சிக்கி பெரிய அளவு தீக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்தார். அதற்கும் பவுண்டேஷன் நிதியிலிருந்து ரூ.20 ஆயிரம் மருத்துவ சிகிச்சைக்காக கொடுத்தனர். அவ்வளவுதான். வேறு எதுவும் இல்லை.
''இப்படி தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. அவர்கள் அத்தனை பேரும் பெரும் விரக்தியில்தான் வாழ வேண்டியிருக்கிறது. வனத்துறை வனவராக ஒருவர் வேலைக்கு சேர்ந்தால், அவர்களுக்கு வேலைக்கு சேர்ந்து முதல் வருடத்திலேயே அவருக்குரிய சலுகைள் எல்லாம் வந்து விடுகின்றன. பணிக்காலத்தில் இறந்தால் சர்வீஸ் பொறுத்தவரை நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை எல்லாம் நடக்கிறது. ஆனால் எங்களை மட்டும்தான் இப்படி கொத்தடிமைகள் போல் வைத்துள்ளார்கள்'' என்று புழுங்கித் தள்ளினார் நம்மிடம் பேசிய வேட்டைத்தடுப்புக் காவலர் ஒருவர்.
அப்போது நான் எழுதிய இந்தச் செய்தி முழுமையாக அச்சில் வந்தது. அதன் எதிர்வினையாக அதைப் படித்துவிட்டு சம்பந்தப்பட்ட வேட்டைத்தடுப்புக் காவலர் சங்க நிர்வாகி ஒருவர் பேசினார்.
''சார் நீங்க இந்த செய்தியை போட்டதால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று கூடி மீட்டிங் போட்டிருக்காங்க. ஆலோசனையும் நடத்தறாங்க. அவங்க எந்த இடத்திலும் எங்க பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆலோசிக்கலை. இந்த புள்ளி விவரமான தகவல்களை யார் அந்த பத்திரிகை நிருபருக்கு கொடுத்தது. அதை கண்டுபிடிக்கணும் முதல்ல. அவங்க மேல ஆக்சன் எடுக்கணும்னுதான் அத்தனை பேரும் பேசியிருக்காங்க. அதனால எங்களுக்கு சலுகைகள் வராட்டாலும் பரவாயில்லை. எந்த இடத்திலும் எங்களை அவங்ககிட்ட காட்டிக் கொடுத்திடாதீங்க!''
அழ மாட்டாத குறையாகப் பேசின அந்த வேட்டைத்தடுப்புக் காவலரின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் செய்தியை நான் எடுத்தது 2016 ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு தற்போது அவர்களுக்கு ஊதியம் கொஞ்சம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கான நெருக்கடிகள் அப்படியேதான் இருக்கிறது.
காடுகளிலேயே வாழ்ந்து, கானுயிர்களுடன் இரண்டறக் கலந்து தன் வாழ்வையே அதற்குள் புதைத்து நிற்கும் இந்த பழங்குடிகள்தான் காடுகளையே தாங்கி நிற்கிறார்கள். அழுத்தமாக சொல்லப் போனால் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் எனப்படும் இவர்கள் மூலம்தான் வனத்துறையின் முழுமையான செயல்பாடே இருக்கிறது. அவர்களுக்கு அள்ளிக்கொடுக்க மனம் இல்லாவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கக்கூட மனசில்லாமல்தான் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் உள்ளனர்.
காடுகளில் வசிக்கும் பழங்குடியினரில் அரசிடமிருந்து மாத வருவாய் வாங்கும் பிரிவினரின் கதை இப்படி இருக்கிறதென்றால் மற்றவர்களின் வாழ்நிலை எப்படியிருக்கும்? இந்த பொருளாதார சூழ்நிலையில் அவர்களில் சிலர் எடுப்பார் கைப்பிள்ளையாக, கீழ்நாட்டிலிருந்து வரும் சமூக விரோதிகளுக்கும், சமூக விரோத செயல்கள் செய்பவர்களுக்கும் உடந்தையாக இருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமேயில்லை.
இந்த நிலையில்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறையை சுற்றுலா தலமாகவும் அரசு அறிவித்தது. அதனால் இங்கே சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. மிக அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகை உயிரினங்கள் கொண்டது ஆனைமலை புலிகள் காப்பகம். கரியன்சோலை, மஞ்சம்பட்டி, புல்மலைகள் அடங்கிய இப்பகுதிகளுக்கு வந்து செல்லும் வெளி நாட்டவர்களே இங்கு போன்ற நில அமைப்பு வேறெங்கும் கிடையாதென்று வியந்து பேசிச் செல்கிறார்கள்.
இதமான மிதமான தட்பவெப்பம், மனதை ரம்மியமாக்கும் மெல்லிய சாரல் மழை, பார்வைக்கு விருந்தாகும் சோலைக் காடுகளை தரிசித்தவர்கள் நாம் நனவுலகில்தான் இருக்கிறோமா என சந்தேகப்படுவார்கள். அந்த அளவுக்கு பூலோக சொர்க்கமாக காணப்படுவது வால்பாறை மலைகள். தமிழகத்திலேயே அதிக மழைப்பொழிவு (ஆண்டுக்கு சுமார் 750 செ.மீ. மழை) உள்ள கரியன் சோலை பசுமை மாறாக் காடுகள், மிகக் குறைந்த அளவில் மழை பெறும் மஞ்சம்பட்டி முள்புதர்க் காடுகள், எண்ணிலடங்காத அரிய உயிரினங்களைக் கொண்ட வறண்ட மற்றும் ஈரப்பதமுள்ள இலையுதிர்க் காடுகள், ஊசியிலைத் தாவரங்கள், சோலைகள், புல்வெளிகள் ஆகியவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சூழ்ந்திருக்கும் தன்னிகரற்ற சிறப்புகள்.
கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2513 மீட்டர் உயரம் வரை பல மலைகள் இப்பகுதியில் உள்ளன. அதிகபட்ச உயரமான 2513 மீட்டரில் காணப்படும் புல் மலை அக்கா மலை. மரகதக் கம்பளமாய் ஜொலிக்கும் இதன் புல்வெளிகளை, அதனூடே மினுங்கும் பள்ள மேடுகளை தரிசிக்க காணக் கண்கோடி வேண்டும்.
- மீண்டும் பேசலாம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT