Published : 23 Feb 2018 08:57 AM
Last Updated : 23 Feb 2018 08:57 AM
வண்ணங்கள் வெளிறிப் போன அதர பழைய கட்டிடம்; கழிப்பறை வசதிகள் கிடையாது; ஓட்டை உடைசலான இருக்கைகள்.
மேலே சொன்னதெல்லாம் அரசுப் பள்ளிக் கூடங்களைப் பற்றிய பொது வான பிம்பங்கள். அந்த நினைப்பை அடித்து நொறுக்கி இருக்கிறது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கட்டளை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஆமாம், அப்படி யொரு அழகுப் பெட்டகமாக உருவாகி இருக்கிறது கட்டிடம்.
பள்ளியின் ஆசிரியர் சம்பத்திடம் கேட்டோம், “திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் ராஜசேகர் மற்றும் குழுவினரால் இப்போது எங்கள் பள்ளியின் சூழலே மாறியிருக்கிறது’’ என்ற கூறி, பள்ளியைச் சுற்றிக்காண்பித்தார். வண்ண ஓவியங்களாக சுவர்கள் மாறியிருந்தன.
மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர் ராஜசேகர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழராசியராக பணியாற்றுவது, திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில். விடுமுறை நாட்களில் பள்ளிகளுக்கு ஏதேனும் செய்ய வேண் டும் என்ற அவரது எண்ணங்கள்தான் இப்போது வண்ணங்களாக மாறியிருக்கின்றன. அதற்காக அவர் உருவாக்கியதுதான் ‘அரசு பள்ளிகளை காப் போம்’ இயக்கம்.
இந்தத் திட்டத்தின்படி வகுப்பறை சுவர்களுக்கு வண்ணமேற்றுவது, நல்ல ஓவியங்களை சுவர்களில் வரைவது, பாதுகாப்பான விளையாட்டு மைதானம், பசுமை பூங்கா உள்ளிட்ட குழந்தைகளின் உளவியலை உணர்ந்து பள்ளியை திட்டமிட்டு கட்டமைப்பது. இதை நடைமுறைப்படுத்த களமிறங்கினார் ராஜசேகர்.
மாணவர் எண்ணிக்கையில், உட்கட்டமைப்பில் நலிவடைந்த பள்ளிகளை யே இதற்காக தேர்ந்தெடுக்கிறார். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் இணைகின்றனர். இதுவரை சீரமைத்த அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், குழந்தைகள் விரும் பும் சுவர் ஓவியம், வண்ண பெஞ்ச் என அனைத்து வசதிகளும் இருக்கும்.
மாற்றத்தை ஏற்படுத்திய ராஜசேகரை சந்தித்தோம். அவர் கூறும்போது, “பள்ளியின் நிதிநிலை, உள்ளாட்சி நிர்வாகங்களின் உதவி கிடைத்தால் உடல் உழைப்பு மட்டும் எங்களுடையது. நிதி கிடைக்காதபட்சத்தில் முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள் மூலமாக நன்கொடை பெற்று இதை செய்கிறோம். வெறும் சுவர்களுக்கு ஓவியங்க ளால் உயிர் கொடுப்பவர்கள் பாண்டி, முருகன், சித்தேந்திரன், சந்துரு, சசி மற்றும் ஆசிரிய நண்பர்கள் ராஜிவ், சீனிவாசன், மதன், சுரேஷ்கண்ணன், முத்துக்கண்ணன், அழகேசன், அரவிந் ராஜா, வடிவேல்,லோகேஷ், அஸ்வத்” என உழைப்பவர்களின் பட்டியலை தருகிறார் ராஜசேகரன்.
இந்தக் குழுவின் முயற்சி முதலில் தொடங்கியது தேனி மாவட்டம், கூடலூர் அருகே கே.கே.பட்டி அரசு பள்ளி. பின்னர் கூடலூர் புதூர் பூங்காப் பள்ளி, கள்ளர் துவக்கப் பள்ளி, திருப்பூர் அருகே ஈட்டி வீரம்பாளையம் அரசு பள்ளி, திண்டிவனம் அருகே கோனேரிகுப்பம் அரசு பள்ளி ஆகியவை அடுத்தடுத்து மெருகேறின.
தொடர்ந்து கோவை, திருப்பூர், ராமநாதபுரம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளைத் தேர்வு செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்கள். எண்ணமெல்லாம் வண்ணமயமாக இருக்கிறது ஆசிரியர் ராஜசேகருக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT