Published : 04 Dec 2017 09:03 AM
Last Updated : 04 Dec 2017 09:03 AM
பக்தியில் முக்கியமான விஷயம் அன்னதானம். பக்தியில் மட்டுமின்றி வாழ்விலும் கூட முக்கியமானது அன்னதானம்தான். ஒருவருக்கு உணவை வழங்குவதில், பக்தி இருந்தென்ன... இல்லாமல் இருப்பதென்ன. உணவு வழங்குவது மகா புண்ணியம். புண்ணியம் என்று நினைக்கிற ஆன்மிகவாதிகளுக்கும் புண்ணியம்தான். புண்ணியமாவது பாவமாவது என்று எடுத்துக் கொள்கிற நாத்திகவாதிகளுக்கும், புண்ணியம்தான். உணவிடுவதில், பேதமில்லை. அது பெற்றுக் கொள்பவராக இருந்தாலும் சரி... வழங்குபவராக இருந்தாலும் சரி. இங்கே உணவே முக்கியம். தானமே சிறந்தது. அன்னதானமே மகத்துவமானது!
அதனால்தான் ஐயப்ப பூஜையிலும் பஜனையிலும் விரதத்திலும் வழிபாட்டிலும் அன்னதானம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அப்படி முக்கியத்துவம் பெறுவதாலேயே, ஐயப்ப பக்தர்களுக்கு திரும்பத் திரும்ப அதுகுறித்து வலியுறுத்தவும் புரியவைக்கவும் ஆசைப்படுகிறது மனது!
அன்னதானம் குறித்து சொல்லும்போது, சாமி அண்ணாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைச் சொல்லத் தோன்றுகிறது.
‘‘சாமி அண்ணா, அதாவது என் கொள்ளுத் தாத்தா, பக்தனாக மட்டுமல்லாமல் - உன்னத நிலையை அடைந்த ஆன்மாவாகவும் விளங்கினார். அவருடைய சிஷ்யர்கள் பலரும் அவர் வாழ்வில் நடந்த அநேக அதிசயங்களை கூறக் கேட்டிருக்கிறேன். அவர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வாக்கும் சத்தியவாக்காவே இருந்தது. எது நிகழுமோ அதையே சொன்னார். எதைச் சொன்னாரோ... அதை ஐயப்ப சுவாமி நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் நினைத்தவற்றை ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் செய்து வந்தார்’’ என்கிறார் உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்
ஒருமுறை சபரிமலையில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்னதானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாமி அண்ணா, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் செய்து முடித்தார். அன்றைக்கு வழக்கத்தை விட அதிக பக்தர்கள்; அதிகக் கூட்டம்.
உத்ஸவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. நடை அடைக்கும் நேரம் நெருங்கியது. பக்தர்களும் பம்பைக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.
சபரிமலையே கிட்டத்தட்ட காலியாகி விட்டது. சாமி அண்ணாவின் சிஷ்யர்கள் தான் மலையிலிருந்து கிளம்ப வேண்டிய கடைசி குழு. அவர்களை தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
திடீரென பத்து நிமிஷம் கண்மூடி நின்ற சாமி அண்ணா, தன் சிஷ்யன் ஒருவரை அழைத்தார். “நீ மட்டும் இங்கேயே இரு. ஒரு நாற்பது பேருக்கு ஆகாரம் தயார் செய்து வைத்துக் கொள்’’ என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல், விறுவிறுவென பம்பையை நோக்கி இறங்கினார்.
சிஷ்யருக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்னதானத்துக்கு கொண்டு வந்த பொருட்கள் எல்லாமே காலி. என்ன சமைப்பது. எப்படிச் சமைக்க முடியும்.
சரி... இங்கே இப்போது பக்தர்கள் யாரேனும் இருந்தால்தானே அவர்களுக்குச் சமைக்கமுடியும். சமைத்துப் பரிமாற முடியும்.
சமைப்பதற்குப் பொருட்களும் இல்லை. அப்படியே எப்படியோ சமைத்தாலும் சாப்பிடுவதற்கு ஆட்களே இல்லை. என்னடா இது குழப்பம். ஆனால் இதையெல்லாம் சாமி அண்ணாவிடம் எப்படிக் கேட்கமுடியும். நாலுதிட்டு வாங்கவேண்டும். இரண்டு முறை கண்களால் முறைத்துப் பார்ப்பார்.
அந்த சிஷ்யரும் இங்கேயும் அங்கேயுமாக மலையைச் சுற்றிச் சுற்றி வந்தார். அதென்ன நம்மூரா... தெருவா? யாரிடமேனும் ஏதேனும் கேட்டு வாங்கி, எதையேனும் எடுத்து நறுக்கி, சமைத்து இறக்கி வைப்பதற்கு?
ஆனால் சாமி அண்ணா சொல்லிவிட்டார். அல்லாடிப் போனார். கைபிசைந்து தவித்தார். ஒருகட்டத்தில், உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார்.
அப்போது... அங்கே... அவரிடம் பக்தர் ஒருவர் வந்தார்.
“ஐயா... நாங்கள் அன்னதானத்துக்காகக் கொண்டு வந்த பொருட்கள் மீதமாகிவிட்டன. எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். நீங்கள் இதை தக்க முறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, தன் வசம் இருந்த பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.
சாமி அண்ணாவின் சிஷ்யருக்குப் பேச்சே வரவில்லை. அண்ணம் ஒட்டிக்கொண்டது. நாக்கில் அசைவே இல்லை. நடப்பதெல்லாம் நிஜம்தானா... கனவா... பிரமையா... என்று யோசிப்பதற்குள் யோசித்து முடிப்பதற்குள் உணவுக்குத் தேவையான பொருட்கள் எல்லாமே வந்து இறக்கியிருந்தார்கள்.
சிஷ்யருக்கு கேள்விகள் சட்டென்று பறந்தே போய்விட்டது. சற்றும் தாமதிக்காமல் சமையலை முடித்து - சாமி அண்ணா சொன்னது போலவே காத்திருந்தார்.
சமையலெல்லாம் முடித்து ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது ஆந்திராவிலிருந்து சில ஐயப்பன்மார்கள் தபதபவென வந்தார்கள்.
சபரிமலை நடை அடைத்து விட்டதும் தெரியாமல் எங்கெங்கோ சுற்றி வழி தப்பி இப்போதுதான் வந்து சேர்ந்தார்கள். யாருமே சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்கு ஏது வழி? தவிர, இவ்வளவு நேரம் கழித்து வாழைப்பழம் கூட கிடைக்காதே! வாங்குவதற்கு கடையே இருக்காது.
எல்லோரும் கொலைப் பட்டினி. முகமே வாடிப்போயிருந்தது. படுத்தால் போதும் என்று எல்லோர் உடம்பும் கெஞ்சிக் கொண்டிருந்தது. பசியும் நடந்த களைப்பும் குழப்பியடித்தது.
இப்படியொரு விருந்து தங்களுக்காகவே காத்துக் கொண்டிருப்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
அந்த சிஷ்யருக்கு எதுவும் புரியவில்லை. யாருமே மலையில் இல்லை. ஆனால் சமைக்கச் சொல்லிவிட்டார் சாமி அண்ணா. சமைக்கப் பொருட்கள் ஏதுமில்லை. ஆனால் யாரோ ஒருவர் கொண்டுவந்து, பொருட்கள் மிஞ்சிவிட்டன என்று சொல்லி, கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அதையெல்லாம் வைத்து சமைத்து இறக்கியாகி விட்டது.
அடுத்த ஐந்தாவது நிமிடம்... ஐயப்பசாமிக் கூட்டம் வந்து நின்று, எதுவுமே சாப்பிடவில்லை என்று பசியோடு வந்திருக்கிறது.
சாமி அண்ணா எனும் குருநாதரையும் அவரின் தீர்க்கதரிசனத்தையும் நினைத்து நினைத்து பூரித்துப் போனார் அந்த சிஷ்யர். வந்தவர்களை வரவேற்றார். உபசரித்தார். இலை போட்டு உட்கார வைத்தார். உணவு பரிமாறினார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அகஸ்மாத்தாக தலைகளை எண்ணினார். அதிர்ந்து போனார்.
“நீ மட்டும் இங்கேயே இரு. ஒரு நாற்பது பேருக்கு ஆகாரம் தயார் செய்து வைத்துக்கொள்’’
சாமி அண்ணாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
அங்கே... நாற்பது பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா.
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT