Published : 12 Feb 2018 11:55 AM
Last Updated : 12 Feb 2018 11:55 AM
ராணுவம், காவல், கடற்படை, விமானம் ஓட்டுவது என்று சவாலான பல துறைகளில் சாதித்து வருகின்றனர் பெண்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த வி.கண்மணி, இருசக்கர வாகனம் முதல் பேருந்து, லாரி வரையிலான கனரக வாகனங்களுக்கு பஞ்சர், வெல்டிங், பேருந்து, லாரி டயர்களை கழற்றி மாட்டும் வேலைகளை சர்வசாதாரணமாக செய்கிறார்.
பஸ், லாரி டயர்களை கழற்ற ஆண் தொழிலாளர்களே பெரி தும் சிரமப்படுவார்கள். உங்களுக்கு இதில் எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டபோது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண் டது: கணவர் வெங்கடாசலம் லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணமான சமயத்தில் கணவருக்கு மதிய உணவு கொண்டுவரும்போது, கடையில் அவருக்கு சிறுசிறு உதவிகள் செய்வேன். இதனால், இத்தொழில் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சர் ஒட்டுதல், இரும்பு பொருட்களுக்கு காஸ், எலெக்ட்ரிக் வெல்டிங் செய்வது ஆகியவற்றை அவரிடம் படிப்படியாக கற்றுக்கொண்டேன்.
எனக்கு இந்த தொழில் ஓரளவு பிடிபடுகிற நேரத்தில், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. மிகுந்த நம்பிக்கையோடு கடையை என்னிடம் விட்டுவிட்டு, துபாய் சென்றுவிட்டார்.
அதன்பிறகு, 10 ஆண்டுகளுக்கு நான் தனியாகத்தான் இத்தொழிலை கவனித்து வந்தேன். லாரி சக்கரங்களை கழற்றி மாட்டுதல், டியூப்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், வல்கனைஸிங் செய்தல் என அனைத்து வேலைகளையும் தனியாளாக செய்துவிடுவேன். இரும்பு பொருட்களுக்கு காஸ், எலெக்ட்ரிக் வெல்டிங் செய்தல் போன்ற வேலைகளையும் செய்வேன்.
‘இதெல்லாம் ஆம்பிளைங்க வேலை. உனக்கு சரிப்பட்டு வராது. ஹோட்டல் வைக்கலாம்’ என்று ஆரம்பத்தில் சிலர் யோசனை சொன்னார்கள். வேலைல என்னங்க ஆம்பிளை, பொம்பள, எனக்கு தெரிஞ்ச தொழில் இதுதான் என்று தைரியமாக இத்தொழிலில் ஈடுபட்டேன். குடும்பத்து்க்கு தேவையனான வருமானத்துக் குறை இல்லை என்கிறார் கண்மணி.
இவர்களது மூத்த மகள், தனியார் பள்ளியில் ஆசிரியை. இன்னொரு மகள், மகன் ஆகிய இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கின்றனர். விடுமுறை நாட்கள் என்றால், 3 பிள்ளைகளும் அப்பா, அம்மாவுக்கு உதவியாக இருக்க கடைக்கு வந்து விடுவார்களாம்.
துபாயில் இருந்து வந்த பிறகு, தொழிலில் மனைவிக்கு உதவி யாக இருக்கிறார் வெங்கடாசலம். அவர் கூறும்போது, ‘‘பொதுவாக, லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். ஏனென்றால், சக்கரங்களின் எடை அதிகம். நல்ல உடல் வலு இருந்தால் மட்டுமே சக்கரங்களை கழற்ற முடியும். எனினும், மனைவி கண்மணி எளிதில் கழற்றி மாட்டுவார். அவருக்கு இதில் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனால்தான், பல ஆண்டுகாலம் தனி ஆளாக தொழிலை கவனிக்க முடிந்தது’’ என்கிறார்.
“வேலைல என்ன ஆம்பிளை வேலை பொம்பள வேலை“ என கண்மணி சொன்னது எத்தனை நிஜம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT