Published : 23 Feb 2018 09:07 AM
Last Updated : 23 Feb 2018 09:07 AM
கோவை மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1952-ல் தொடங்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தில் தற்போது 2.36 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 61 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர்.
பத்திரிகை வாசிப்பு பிரிவு, நூல் குறிப்பு பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, நூல் இரவல் பிரிவு, குடிமைப் பணிக் கான நூல்கள் பிரிவு, ஆடியோ புத்தகப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. வீட்டில் புத்தகங்களைப் படிக்க சரியான சூழல் இல்லாதவர்களுக்காக, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவும் செயல்படுகிறது.
மொபைல் செயலி
இங்குள்ள இ-மேகசின் பிரிவில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் 212 தமிழ் இதழ்கள் உட்பட 15 மொழிகளைச் சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வார, மாத இதழ்களைப் படிக்கலாம். இந்த இதழ்களை செல்போனில் பிரத்தியேக செயலி மூலம் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளதாக மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
மின்னணு இதழ்களை மொபைல் மூலம் பதிவிறக்கம் செய்து, எங்கு வேண்டுமானாலும் சென்று படிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வார, மாத இதழ்களை பிரத்தியேக மொபைல் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து, 7 நாட்களுக்குப் படிக்கலாம்.
அதேபோல, டெல்நெட் என்ற மென்பொருள் மூலம், தேசிய அளவில் உள்ள நூலகங்களை இணைக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் லிங்க் பெற்று, பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் (இ-ஜர்னல்கள்) படிக்க முடியும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இங்குள்ள குழந்தைகள் பிரிவு குளிர்சாதன வசதி கொண்டது. குழந்தைகளுக்கான நூல்கள், கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணங்களுடன் செயல்படும் இந்தப் பிரிவில், 15 நாட்களுக்கு ஒருமுறை கதை சொல்லல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். மாதம் ஒருமுறை வாசக சாலை என்ற அமைப்புடன் இணைந்து, இலக்கிய நிகழ்வுகள், நூல் அறிமுக நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தத் தொடங்கியுள்ளோம்.
இவை அனைத்துக்கும் மேலாக, பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். வரும் ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ள உலக புத்தக தினத்தையொட்டி, மாவட்ட மைய நூலகத்தில் 1,000 மாணவ, மாணவிகளையும், மாவட்டம் முழுவதும் உள்ள நூலகங்களில் 30 ஆயிரம் மாணவ, மாணவிகளையும் புதிய உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
6, 7, 8 மற்றும் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என்னை செதுக்கும் நூலகம்’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியையும் அறிவித்துள்ளோம். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி அமைச்சரே பரிசு, சான்றிதழ் வழங்க உள்ளார். ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வு மையம் இங்கு 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சிறந்த பேராசிரியர்கள் மூலம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு 12 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 144 வகுப்புகள் நடத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
பிரெய்லி முறை
இங்குள்ள மாற்றுத் திறனாளிகள் தனிப்பிரிவு, பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. பிரெய்லி முறையிலான புத்தகங்கள், வரைபடங்கள், கம்ப்யூட்டர், நடைபயிற்சிக்கான ஸ்மார்ட் கேன், புத்தகங்களை ஒலி வடிவில் வழங்கும் ரீட் ஈசி மூவ் உபகரணம், சக்கர நாற்காலிகள், உயரம் குறைந்த புத்தக செல்புகள், பார்வையற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைந்தோருக்கான பிரெய்லி டிஸ்ப்ளே ஸ்கிரீன், பிரத்தியேக கீபோர்டுகள் கொண்ட கம்ப்யூட்டர்கள், மூளைத் திறன் குறைந்தவர்களுக்கான கம்ப்யூட்டர்கள், சாய்தள நடைபாதை, தனி கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இங்கு 650 மாற்றுத் திறனாளிகள் நூலக உறுப்பினர்களாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மென்பொருள் நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றார்.
புத்தக வாசிப்பு குறைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில், நூலகத்துக்கு மக்களையும், மாணவர்களையும் அதிக அளவில் ஈர்க்கவும், புத்தக வாசிப்பை வளர்க்கவும் மாவட்ட மைய நூலகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT