Published : 01 Feb 2018 11:09 AM
Last Updated : 01 Feb 2018 11:09 AM
ம
துரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளினார் ப.வைரமுத்து. மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில்தான் இத்தனை பதக்கத்தை வென்றார். ஆமாம் வைரமுத்து ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால் தனித்திறனாளியாக மிளிர்கிறார்.
கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் இவர் அரவக்குறிச்சி அடுத்த புஞ்சை காளகுறிச்சியைச் சேர்ந்தவர். இவரது இடது கால் சற்று வளைந்திருக்கிறது. இருப்பினும் நீச்சல் அடிப்பதில் கெட்டிக்காரர்.
வீட்டுக்கு பக்கத்தில் ஓடும் அமராவதி ஆறுதான் இவரை நீச்சல் வீரராக வளர்த்தெடுத்தது. அவர் நம்மிடம் கூறியது: சிறிய வயதிலேயே நீச்சல் கற்றுக்கொண்டேன். ஒரே பொழுதுபோக்கு நீச்சல்தான். பள்ளிப் படிப்பை முடித்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு வந்துவிட்டேன். அஞ்சல் வழியில் பி.காம் பட்டப்படிப்பு முடித்தேன்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், நீச்சல் தெரிந்த, நீச்சலில் ஆர்வம் உள்ள மாற்றுத் திறனாளிகளை சென்னையில் நடக்கும் மாநில பாரா நீச்சல் போட்டிக்கு அரசின் புதுவாழ்வு திட்டத்தினர் அழைத்துச் சென்றனர். அதில் கலந்துகொண்டு ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளி மற்றும் பேக் ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றேன்.
அதன்பின், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தேனியில் நடந்த மாநில பாரா நீச்சல் போட்டியில் மீண்டும் பங்கேற்று இன்டிவிஜுவல் மெட்லே (ஐ.எம்.), ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக் என 3 பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் மற்றொரு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன்.
இம்முறை மதுரையில் கடந்த 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடந்த மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில், ஆர்வம் காரணமாக எனது சொந்த செலவில் சென்று பங்கேற்றேன். இதில், இன்டிவிஜுவல் மெட்லே பிரிவில் தங்கம், பட்டர்ஃபிளை பிரிவில் வெள்ளி, ஃப்ரீ ஸ்டைல் மற்றும் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் வெண்கலப் பதங்கங்களை வென்றேன். 3 முறை மாநில போட்டிகளில் பதக்கம் வென்றபோதும், தேசிய அளவிலான போட்டிகளில் 2 முறை பங்கேற்றும் பதக்கம் வெல்ல முடியாதது வருத்தம்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் விரைவில் நடைபெற உள்ள தேசிய பாரா நீச்சல் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருகிறேன். இதில், 2 பிரிவுகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன் என்கிறார் உற்சாகமாக.
இவரது ஒரே குறை கரூரில் நீச்சல் குளம் இல்லாததுதான். இதனால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. பயிற்சிக்காக திண்டுக்கல், தேனி என செல்ல வேண்டி உள்ளது. வேலைக்குச் செல்லாமல் பயிற்சிக்குச் சென்றால் பொருளாதார இழப்பு போன்ற சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
வீரர்கள் சாதிப்பது அவரவரது தனிப்பட்ட திறமை என்றாலும் அதை அடையாளம் கண்டு ஊக்குவித்து சாதிக்க வைப்பதில் அரசுக்கும் பங்கிருக்கிறது. தேசிய போட்டியில் பதக்கத்துடன் திரும்ப வைரத்தை வாழ்த்து வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT