Published : 04 Jan 2018 10:31 AM
Last Updated : 04 Jan 2018 10:31 AM
குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, அதிக சம்பளத்துக்காக தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள்’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டு மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவர்கள் மீது பொதுவாக கூறப்படுவது உண்டு.
இதற்கு நேர் உல்டா.. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவராகப் பணியாற்றிவரும் டாக்டர் பா.மாரியப்பன்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி (Beating Heart Surgery) எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். ஆண்டுக்கு சுமார் 150 ஏழை நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை இவரால் கிடைத்திருக்கிறது. இதில் 97 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் மருத்துவம் படித்தேன். மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2001 முதல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தேன். உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் என உயர்ந்து தற்போது துறைத் தலைவராக பணியாற்றுகிறேன்.
நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.
ஆரம்ப காலத்தில், நவீன பைபாஸ் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கக்கூட சொந்தப் பணத்தை செலவிடவேண்டி இருந்தது. தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாய் உதவியாக இருக்கிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.
மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன். மருத்துவமனையில் டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்டோர் தனக்கு உறு துணையாக இருப்பதாகவும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT