Published : 20 Jan 2018 10:54 AM
Last Updated : 20 Jan 2018 10:54 AM
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியின மக்களில் கோத்தரின மக்கள் குயவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் மண் பாண்டங்களை உற்பத்தி செய்வதுடன், கத்தி, கோடாரி உள்ளிட்ட கருவிகளையும் தயாரிப்பதில் வல்லவர்கள்.
இவர்களின் குலதெய்வம் ‘அய்னோர் அம்னோர்’. இந்த தெய்வங்களுக்கு தனித்தனி கோயில்கள் அமைத்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. கோயில் உள்ள பகுதியைச் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி பெண்கள் உள்ளே வரக்கூடாது. இவர்களது குலதெய்வங்கள் ‘அய்னோர் அம்னோருக்கு’ ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் விமரிசையாக விழா எடுக்கின்றனர். இதை கம்பட்ராயர் திருவிழா என்கின்றனர்.
இதுபற்றி கோத்தரின கிராமமான குந்தா கோத்தகிரியின் பூசாரி ஆனந்தகுருவன் கூறியதாவது:
‘‘திருவிழாவின்போது ஆண்கள் ஊரைவிட்டு வெளியேறி, கோயில் வளாகத்தில் குடில் அமைத்து அங்கேயே தங்கி தங்கள் குலதெய்வத்தை வழிபடுகின்றனர். திருவிழாவை முன்னிட்டு கிராமப் பெண்கள், அவர்களது குலதெய்வ நிலத்தில் இருந்து களிமண் எடுத்துவந்து, பானைகளைச் செய்வார்கள். ஆண்கள் மட்டும் அங்குள்ள ஆற்றில் குளித்து, குலதெய்வ கோயிலில் பூஜை செய்வார்கள். பின்னர் சாமையைக் கொண்டு பொங்கல் செய்து, புதிய மண் பானையில், குலதெய்வத்துக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இந்த குலதெய்வக் கோயில்கள், திருவிழாவின்போது மட்டுமே திறக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தரின மக்கள் வசிக்கும் 7 கிராமங்களில் இந்த திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கோயில் வளாகத்தில் ஆண்கள் சாமை அரிசி பொங்கலிட்டு, அவரைக் குழம்பு வைத்து தெய்வத்தை வழிபடுகின்றனர். உப்பு, நெய் மட்டுமே போட்டு இந்தப் பொங்கல் சமைக்கப்படுகிறது. கோத்தரின மக்கள் தங்கள் தெய்வங்களான அய்னோர் அம்னோருக்கு உப்பு, நெய் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர்.
சிறப்புப் பூஜைகள் முடிந்த பிறகு ஆண்களும், பெண்களும் தங்கள் பாரம்பரிய இசைக்கு ஏற்ப ஆனந்த நடனம் ஆடுகின்றனர். ஆண்கள் பாவாடை போல உள்ள ‘ஆட்குபஸ்’ என்ற உடையை அணிந்து நடனமாடுவது இதன் முக்கிய அம்சம். இதனுடன் தலைப்பாகையும் அணிந்து கொள்வார்கள்’’ என்றார்.
இந்தத் திருவிழாவில் பங்கேற்க வருமாறு தங்கள் கிராமத்தின் அருகில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றனர் கோத்தரின மக்கள். திருவிழாவில் தங்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நிறைவடைந்ததும், மரியாதை நிமித்தமாக படுகரின மக்களை அவர்களது பாரம்பரிய நடனமாடக் கூறுகின்றனர். அதை தங்கள் உற்றார் உறவினர்களோடு சேர்ந்து கண்டுகளிக்கின்றனர். சமீபத்தில் நடந்துமுடிந்த கோத்தரின மக்களின் கம்பட்ராயர் திருவிழாவை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT