Published : 15 Jan 2018 02:47 PM
Last Updated : 15 Jan 2018 02:47 PM
அஜயன்பாலா என்றால் 'பைசைக்கிள் தீவ்ஸ்' படத்தோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் காலம் ஒன்றிருந்தது. அப்போது 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைக்கதையை நூலாக அவர் எழுதி அதற்கு மிகப்பெரிய கவனம் கிடைத்த காலம் அது. அதைத் தொடர்ந்து இன்று மிக நீண்ட தூரம் கடந்துவந்துவிட்டார் அஜயன்பாலா, பலவிதமான சாதனைத் தடங்களோடு....
விகடனில் 'நாயகன்' தொடர் தமிழ் சமூகம் திரும்பிப் பார்த்தது யார் இந்த அஜயன்பாலா என்று. உலக மறுமலர்ச்சிக்கு காரணமான புரட்சித் தலைவர்களைப் பற்றிய அந்தத் தொடர் 10 புத்தகங்களாகவும் வெளிவந்து அந்த புத்தகங்களுக்கான ராயல்டி இன்று வரை அவரை தேடி வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய ராயல்டி தொகைகள் ஒரு சாதாரண எழுத்தாளனுக்குக் கிடைத்தக பெரிய கௌரவம் என்கிறார்...
2010ல் தமிழக அரசின் செம்மொழி மாநாட்டுக்காக 'செம்மொழி சிற்பிகள்' என்ற இவரது வரலாற்றுப் புத்தகம் நல்ல ஆவணம் என சொல்லத்தக்க வகையில் தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது.
திரைக்கதை, வசனம், சினிமா நடிப்பு, இலக்கியம் என இயங்கிவரும் அஜயன்பாலா இதுவரை 30 புத்தகங்கள் எழுதியுள்ளார். சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று மாலை சந்தித்தோம். அவரிடம் குறிப்பாக சினிமா புத்தகங்கள் சார்ந்துமட்டும் சில கேள்விகள் முன்வைத்தோம். என்றும் மாறாத எளிமை, இன்றும் தொடரும் புதுமை என பல செய்திகள் இந்த நேர்காணலில்..
தங்கள் சினிமா எழுத்து உற்சாகம் தருகிறதா?
நிச்சயமாக உற்சாகம் தருகிறது. 1999ல் எனது பைசைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை வெளியான பிறகு தமிழ் சினிமாத் துறை உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரிய பார்வை உருவாகத் தொடங்கியது. அந்த பார்வை என்மீதும் விழத் தொடங்கியது. நான் எழுதிய காட்பாதர் புத்தகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது.
2007ல் நான் எழுதிய உலக சினிமா வரலாறு தமிழ்நாடு அரசின் சிறந்த சினிமா நூலுக்கான விருது கிடைத்தது. உலக சினிமா வரலாறு 2வது பாகம் திருப்பூர்
தமிழ்ச் சங்கத்தின் சிறந்த புத்தகத்துக்கான பரிசு கிடைத்தது. இந்த ஆண்டு உலக சினிமா வரலாறு 3வது பாகம் வெளிவந்துள்ளது. நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளது.
வசனகர்த்தாகவும் சினிமாவில் வலம் வருகிறீர்களே?
10 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளேன். 5 படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளேன். வசனத்திற்காக ‘மனிதன்’ திரைப்படத்தின்மூலம் பாராட்டுக்கள் கிடைத்தன. விதி படத்திற்கு பிறகு கோர்ட் சீன் ரசிகர்களை பாதித்துள்ளதாக சொன்னார்கள்.
திரைப்படங்கள் சார்ந்த நூல்கள் போதுமான வாசகர்களை எட்டியிருக்கிறது என்று நம்புகிறீர்களா?
இல்லை. நான் நம்பவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் சினிமாத்துறையில் மாற்றங்களின் சதவீதம் அதிகமாக இருந்திருக்கும். நமது தமிழ் சினிமா துறையிலேயே நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர்கள் என்று எடுத்துக்கொண்டால் மொத்த இண்டஸ்ட்ரீயிலுமே ஒரு 200 பேர்தான் படிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த 200 பேர்கூட யார் என்று கேட்டால் உதவி இயக்குநர்கள்தான். அவர்களிலேயே சிலர் இயக்குநர்களாக வந்தபிறகு படிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். சினிமா இயக்குநராகத்தான் ஆகிவிட்டோமே இனிமேல் எதற்கு படிக்கவேண்டும் என்று நினைத்துவிடுகிறார்கள்.
எந்த திரைப்பட இயக்குநர் படிப்பதை நிறுத்தாமல் புத்தகநேசிப்பு என்பது தனது வேலையின் இன்னொரு பகுதி அது என நினைக்து தொடர்ந்து வாசிக்கிறார்களோ அவர்கள் இயக்கும் படங்கள் தொடர்ந்து சிறந்த படங்களாக அமைந்துவிடுகின்றன.
அப்படி தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் கொண்ட இயக்குநர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
தமிழ் சினிமா இயக்குநர்களில் வெற்றிமாறன், மிஷ்கின், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன் ஆகிய இயக்குநர்கள் நல்ல சினிமா நூல்களை நல்ல புத்தகங்களைத தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இங்கு வெற்றியடைந்தவர்களாக இருக்கும் பல இயக்குநர்கள் புத்தகம் படிக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அது தங்கள் வேலையல்ல என்பதை பெருமையாக சொல்லிக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பல படங்கள் தோல்வியை தழுவியதற்கு புத்தகம் படிக்காமல் இருந்ததுதான் ஒரு காரணம் என்பதை ஏனோ அவர்கள் அறியாதவர்களாக இருப்பதுதான் சோகம்.
தொடர்ந்து சினிமா நூல்கள் உள்ளிட்ட சீரிய வாசிப்புப் பழக்கம் உள்ள இயக்குநர்கள் சில சமயம் தோல்வி படங்களைத் தந்தாலும் அவர்களை மக்கள் நேசிக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது அடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்புகளையும் மக்கள் வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு முக்கியமான சினிமா நூல்கள்?
இந்த ஆண்டு என்றால் உலக சினிமா வரலாறு பாகம் 3 தவிர, உலகக் குறும்படங்கள் என்றொரு புதிய நூலையும் வெளிவந்துள்ளது. இதில் உலகின் சிறந்த குறும்படங்கள் பற்றிய விரிவான அலசலை முன்வைக்கப்பட்டுள்ளது. சினிமா தொழில்நுட்பங்கள் குறித்த உலக அளவில் பரவலான கவனம்பெற்ற நூலான 'பைவ் சீஸ் ஆப் சினிமா' நூலை தமிழாக்கம் பாரதிபுத்தகாலயம் கொண்டுவந்துள்ளது. இவை வாசகர்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள்.
பதிப்பக அனுபவங்கள் குறித்து....
பதிப்புத்துறையில் நிறைய சவாலான அனுபவங்கள் உண்டு. நான் பதிப்பாசிரியர் ஆனதே ஒரு துர்ப்பாக்கியமான சூழல். ஒரு பதிப்பகம் எனது நூல்களை வெளியிடுவதற்கு தயங்கியது. ''உங்க புத்தகம் எல்லாம் நல்லா போகாது சார்'' என்றார்கள். அது எனக்கு வருத்தத்தைத் தந்த அதேவேளையில் சவாலையும் தந்தது.
அதன்பிறகுதான் நாதன் என்றொரு பதிப்பகம் தொடங்கினேன். இதில் வெளியான புத்தகங்களுக்கு, உயிர்மை சுஜாதா விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஜெயந்தன் விருது, விகடன் சிறந்த நூலுக்கான விருது, உலகத் தமிழராய்ச்சி நிறுவன விருது காட்பாதருக்கு கிடைத்தது. விக்ரமாதித்யன் தொகுத்த தற்கால
கவிதைகள் தொகுப்புநூலுக்கு வெளிமாநில விருது கிடைத்துள்ளது. கன்னடத்திலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பல நூல்கள் ஒரு வெளிமாநில விருது உள்ளிட்டு தமிழகம் முழுவதும் 7 விருதுகளைப் பெற்றுள்ளன.நாதன் வெளியீடாக இதுவரை குட்டிரேவதி, அசதா இசையறிஞர், கவிஞர் விக்ரமாதித்யன், நா.மம்மது உள்ளிட்ட என்னுடைய படைப்புகளும் இணைந்து 12 நூல்கள் என குறைவான அளவிலேயே வெளிவந்துள்ளன.
மம்மது நூல்களை வெளியிட்டுள்ளீர்களா?! என்ன புத்தகங்கள்?
என்றும் தமிழிசை, தமிழிசை வரலாறு. அதோ இருக்கே.. '' என்று தன்னடக்கத்தோடு சுட்டிக் காட்டினார்.
புகழ்மிக்க தமிழ் இசை அறிஞர் நா.மம்மதுவின் நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளதே இவரது தமிழ்சார்ந்த பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருந்தது சற்றே வியப்பைத் தந்தது.. எனினும் சினிமா சார்ந்த அஜயனின் ஆதங்கங்கள் தீர்க்கமானவை. தமிழ் சினிமாத் துறை உலகம் அதைப் புரிந்துகொள்ளுமா? என்ற எதிர்பார்ப்போடு அவரிடமிருந்து விடைபெற்றோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT