Published : 13 Jan 2018 02:47 PM
Last Updated : 13 Jan 2018 02:47 PM

யானைகளின் வருகை 118: மாயாற்று பள்ளத்தில் பிணமான எருமைகள்!

சற்றே பெருமூச்சுவிட்டு விட்டு தொடர்ந்தார் சுகுமாரன்.

வனத்துறையினரிடம் இப்போது போய் டோக்கன் கேட்டால், 'இங்கே மாடுகளே கிடையாது என்று ஆவணத்தில் இருக்கிறது. எனவே டோக்கன் தரமுடியாது!' என்று மறுத்து விடுகிறார்கள். நாட்டு மாடுகள் காடுகளில் மேய்வதால் அதன் சாணம், வனத்துக்கு நல்ல எருவாகும். மாடுகள் மேயும் இடங்களில் புற்கள் சீக்கிரமே துளிர்விடும். அவை வனவிலங்குகளுக்கும் உணவாகும். வறட்சி காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் இந்த மாடுகள் மேயும்போது, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இதை அடித்துக் கொன்று உணவாக்கிக் கொள்வதும் நடந்து வந்திருக்கிறது. ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி, ஒரு கொட்டகையில் முப்பது மாடு, நாற்பது மாடு வைத்திருக்கும் கால்நடை வளர்ப்போர் ஓரிரு மாடுகள் வனவிலங்குகள் அடித்துக் கொன்று உணவாக்கி விடுவதால் பெரிதாக வருத்தப்படுவதில்லை. அதை ஒரு நஷ்டமாகவும் கருதுவதில்லை.

காலங்காலமாக நடந்து வந்த இந்த உணவு சுழற்சி மேய்ச்சல் நிலங்களில் மாடுகள் விடாததால் தடைபட்டது. அதனால் வீடுகளில் கொட்டகைகள், பட்டிகளை தேடி புலி, சிறுத்தை போன்றவை வருகிறது. மேய்ச்சல் நிலங்களில் மாடுகள் புல்லை கடிக்காததால் மான், யானை உள்ளிட்ட தாவரப்பட்சிகள் சாப்பிடும் தாவரங்கள் வளர்வது இல்லை. அதனால் அவையும் ஊருக்குள் வந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அலைகிறது. அதனால் மனித-வனவிலங்கு மோதல் அதிகரிக்கிறது. இதையெல்லாம் வனத்துறையினர் பொருட்டாக நினைப்பதில்லை. மக்களை சுத்தமாக இங்கிருந்து வெளியேற்றுவதில்தான் குறியாக செயல்படுகிறார்கள். மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேயவிடுவதும், அதில் வனவிலங்குகளுக்கு இரையாகும் கால்நடைகளுக்கு பதிலாக முறையான நஷ்ட ஈடு கொடுத்து உதவுவதும்தான் காடுகளுக்கும், காட்டில் வாழும் விலங்குகளுக்கும், அவற்றை சார்ந்து இருக்கும் மலை மக்களுக்கும் வளர்ச்சி ஊக்கியாக இருக்கும்!'' என்றார்.

இந்த விஷயங்களை நம்மிடம் 2017 கோடை மாதத்தில்தான் பகிர்ந்து கொண்டார் டாக்டர் சுகுமாரன். அதை செய்தியாகவும் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து மறுபடி நாட்டு மாடுகள் வளர்ப்பு, பழைய பாதைக்கு திரும்புதல் என கூடலூர், மசினக்குடி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கலந்தாய்வுக்கூட்டங்கள் போட்டனர். வனத்துறையினரிடம் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் அதே நேரத்தில் அதற்கு எதிராக நடந்த சம்பவம் கூடலூர் நகரை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கியது.

அதாவது மசினக்குடியை சேர்ந்த விவசாயிகள் சிலரது 80க்கும் மேற்பட்ட எருமைகள் மேய்ச்சலுக்கு சென்று 2 வாரங்களாகியும் வீடு திரும்பவில்லை. வனப்பகுதிக்குள் அதிகாரிகள் அனுமதியுடன் தேடியதில் மாயாறு ஓட்டிய சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் 25க்கும் மேற்பட்ட எருமைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மரங்களுக்கு இடையிலும், பாறைகளின் மீதும் அழுகிய நிலையிலும் அவை கிடக்க அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வனத்துறையினர்தான் குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதிக்கு விரட்டிச் சென்று விழவைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க விவகாரம் பரபரப்பானது.

வனத்துறை அதிகாரிகள் பதிலுக்கு, 'மேய்ச்சல் நிலத்திலிருந்து எருமைகள் இறந்து கிடக்கும் பள்ளத்தாக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதை வனத்துறையினர் ஓட்டி சென்று பள்ளத்தில் விழ வைப்பதற்கு அவசியமேயில்லை!' என்றனர். விவசாயிகள் அதை நம்பவில்லை. ஆட்சியரிடமும், விலங்குகள் நல வாரியத்திடமும் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதைப்பற்றி நம்மிடம் விவரித்த கால்நடை மருத்துவர் ஒருவர், ''எருமைகள் காணாமல் போன நாளில் வனவர் ஒருவர் எருமை மேய்த்தவரிடம் பிரச்சினை செய்திருக்கிறார். அது வாக்குவாதம் ஆனது. அதை காரில் இருந்தபடி வனத்துறை உயர் அதிகாரி பார்த்து கண்டித்திருக்கிறார். பிறகுதான் அங்கு மேய்ந்தபடி இருந்த எருமைகளை விரட்டியிருக்கின்றனர் வன ஊழியர்கள். அவை வேறு இடத்தில் சென்று விடாதபடி புல்டோசர் வாகனங்களை விட்டு மறித்து பள்ளத்தில் விழுமாறு செய்திருக்கின்றனர். இதை அங்கு பார்த்தவர்களே சொல்கிறார்கள். பயத்தில் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர்!'' என குறிப்பிட்டார்.

மசினக்குடியை சேர்ந்த விவசாயிகள் பேசும்போது, ''2 காட்டாறுகள் வந்து விழும் இந்தப் பகுதியை கூட்டறப்பற (ஆறுகள் கூடும் பள்ளம்) என்று சொல்வோம். இதே பள்ளத்தில்தான் 2 வருஷம் முன்னால வர்கீஸ் என்பவருடைய 9 எருமைகள் இறந்து கிடந்தது. யாரோ துரத்தி வந்துதான் எருமைகள் பள்ளத்தில் விழுந்ததுன்னு அதைச் சொன்னபோது அதிகாரிகள் ஏத்துக்கலை. ஆற்றுல ஓடின வெள்ளத்துல சிக்கி விழுந்திருக்குன்னாங்க. இப்ப ஆத்தில தண்ணீர் இல்லை. அப்படியும் இத்தனை எருமைகள் விழுந்திருக்குன்னா என்ன அர்த்தம்? போலீஸ்காரங்க சம்பவ இடத்தை நேர்ல பார்க்க வந்தாங்க. உயர் வனத்துறை அதிகாரி அனுமதியோடதான் போக முடியும்ன்னு வனத்துறையினர் சொன்னாங்க. அதனால திரும்பிப் போயிட்டாங்க. மொத்தம் காணாம போன 80 எருமைகளில் 25 எருமைகதான் இங்கே அழுகி கண்ணுக்கு தெரியுது. அநேகமா இதுவும் மண்ணோட மண்ணா மக்கிப் போன பின்னாடிதான் பார்க்கவே விடுவாங்களோ என்னவோ?'' என்றார் வேதனையுடன்.

''கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் வந்தால் பிடித்து வைத்து அபராதம் போடுவதுதான் வழக்கம். அப்படி சமீபத்தில் கூட 40 எருமைகளைப் பிடித்து வைத்து அதற்குரியவர் மேல் ரூ.20 ஆயிரம் அபராதம் போட்டார்கள் அதிகாரிகள். அது போல போட வேண்டியதுதானே? இப்படியா பள்ளத்தில் தள்ளி வதைபடுத்துவது? என்று கேட்கும் மக்கள் இதற்கு நீதி விசாரணை தேவை. இல்லாவிட்டால் வனத்துறை நெருக்கடி அதிகமாகும். இங்கே வாழவே முடியாது!'' என்றும் வலியுறுத்தினார்கள்.

அந்த வலியுறுத்தலுக்கு நம்மிடம் வனத்துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம் வித்தியாசமானது. யாருமே எதிர்பாராதது.

''புலிகள் காப்பகப் பகுதியில் கால்நடைகள் மேயக்கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. அதையும் மீறி கால்நடைகளை விவசாயிகள் வனத்திற்குள் அவிழ்த்து விட்டுவிடுவதும், அதை வனத்துறையினர் வெளியே விரட்டுவதும் எப்போதும் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக தீவனம் இல்லாமல் மெலிந்து சாகிற நிலையில் உள்ள கால்நடைகள் பல வனப்பகுதிக்குள் நுழைகின்றன. அவை தண்ணீர், தீவனம் இல்லாமல் காட்டிற்குள்ளேயே இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சம்பவமும். ஆனால் அதற்கு நஷ்ட ஈடு வாங்குவதற்காகவே இந்த விவகாரத்தை வேறுவிதமாக திசை திருப்பி வனத்துறையினர் மீது பழி சொல்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் இறந்து கிடந்த எருமைகளை ஆய்வு செய்து எங்கள் உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். போலீஸ் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டுமானால் எங்கள் கள இயக்குநர் அனுமதிக்க வேண்டும். மற்றபடி மேய்ச்சல்காரர்களுக்கும், வனத்துறை யினருக்கும் வாக்குவாதம் ஏதும் நடக்கவில்லை. இது போன்ற விஷயங்கள் வீண் வதந்தி!'' என்பதுதான் அவர்கள் கொடுத்த விளக்கம்.

விவசாயிகளின் வலியுறுத்தல், வனத்துறையின் இந்த விளக்கத்தோடு அந்த விவகாரம் அப்படியே மற்ற விவகாரங்களை போலவே அமுங்கிப்போனது. அதன் விளைவு தற்போது இங்குள்ள விவசாயிகளிடம் விரக்தி குரல்களே ஒலிக்கிறது.

''எருமை, மாடுகள் வளர்ப்புக்கு இங்கே அர்த்தமில்லை. அப்படி வளர்த்தால் அவை புலி, சிறுத்தைகளுக்கு பலியானால் கூட தப்பில்லை. ஆனால் இந்த வனத்துறையினர் விரட்டிக் கொண்டு பள்ளத்தில் திரும்பத் திரும்ப தள்ள மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? எனவே இங்குள்ள மக்கள் மாடுகள் வளர்ப்பை தவிர்த்தே வருகிறார்கள். இருக்கிற மாடுகளையும் கிடைத்த விலைக்கு விற்று வருகிறார்கள்!'' என்கின்றனர் மசினக்குடி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்.

வனத்துறை-விவசாயிகள் மோதலில் எருமை, மாடுகள் வளர்ப்பு என்பது இங்கே இப்படி அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது என்பது இதன் மூலம் நமக்கு விளங்கினாலும், இதை விட படுகொடுமை சாண்டினல்லா பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தனியார் கம்பெனி ஏற்படுத்தியது. அதன் மூலம் மாயாற்றில் அங்கிங்கெணாதபடி கலந்த ரசாயனக்கழிவுகள் காட்டு விலங்குகளையே அழித்தது. அதில் வனத்துறை வளர்ப்பு யானைகள் முகாம் யானைகளும் பாதிக்கப்பட்டன.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x