Last Updated : 17 Jan, 2018 03:17 PM

 

Published : 17 Jan 2018 03:17 PM
Last Updated : 17 Jan 2018 03:17 PM

பறவைகளைக் கொஞ்சம் வாழவிடுங்கள்: கானுயிர் புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் பேட்டி

சென்னை புத்தகக் காட்சி 2018 வளாகத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று எதிர் வெளியீடு அரங்கில் 12 ஜனவரி  அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் 'உயிர்' என்ற சூழலியல் இதழ் வெளியிடப்பட்டது. பேரா.த.முருகவேள் இதழை வெளியிட்டுப் பேசினார்.

முன்னதாக சண்முகானந்தமும் சா.செயக்குமாரும் இணைந்து எழுதிய தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் நூல் வெளியிடப்பட்டது. இரண்டிலுமே உள்ளடக்க செய்திகளுக்கு ஏற்ப வண்ணத்திலான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தன.

சிறந்த புகைப்படக்கலைர் என சிறப்பிக்கப்பட்டு சென்னை இன்டர்நேஷனல் போட்டோகிராபி 2017ல் பேர் விருதும் இவர் பெற்றுள்ளார் சண்முகானந்தம்.

 நிகழ்வுக்குப் பிறகு அவரிடம் பேசினோம்..... பல ஆண்டுகளாக வைல்டுலைஃப் போட்டோகிராபியில் இயங்கிவரும் அவரது பேச்சில் சாதனைகள் மட்டுமல்ல தமிழக நிலப்பரப்புக்கும் நீர்நிலைக்கும் வந்த சோதனைகளைப் பற்றியும் அவர் பேசத் தவறவில்லை....

வைல்டுலைஃப் போட்டோகிராபியில் ஆர்வம் வந்தது எப்படி?

திருவொற்றியூரில் நல்ல சுற்றுச்சூழல் இயற்கை எழில்மிக்க இடங்கள் இருந்தன. அங்குள்ள குளம் பால்குளம் என்பார்கள். அக்குளத்தை நோக்கி மஞ்சள் மூக்கு நாரை, சின்ன கொக்கு, பெரிய கொக்கு போன்ற நிறைய பறவைகள் வரும். அந்த சூழலே எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. நான் சொன்ன பறவைகளை தயவுசெய்து இப்போது போய் தேடிப் பார்க்காதீர்கள். நான் சொன்னது 90களில். இன்று அந்தப் பகுதிகளே நிறைய மாறிவிட்டன. வைல்டுலைப் போட்டோகிராபி என்பது எலைட் பீப்பிளுக்கான களம்... அதற்குள் நம்மைப் போன்ற சாதாரண ஆட்கள் போக முடியாது.

அதற்கென்று தேவைப்படும் கேமரா உபகரணங்களை வாங்க லட்சக்கணக்கில் செலவாகும். அவற்றில் எடுக்கப்படும் படங்களே உலக அளவில் கவனத்தைப் பெறமுடியும். 90களில் விஜயமூர்த்தி எனும் நண்பர் 70-300 எம்எம் லென்ஸ் கொண்ட கேமராவை சிபாரிசு செய்தார். அந்தக் கேமராவை வாங்கினேன். அதைக்கொண்டு நிறையப் படங்கள் எடுத்தேன்.

வீட்டில் தங்களுக்கு நல்ல ஊக்கம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறதே....

அப்படி முழுமையாகச் சொல்ல முடியாது. அடிக்காம வளத்தாங்க. அதுதான் முக்கியம். அப்பாவுக்கு துறைமுகத்தில் பணி. வீட்டில் 4 பேர் உடன்பிறந்தவர்கள்.

கல்வி குறித்த பெரிய எதிர்பார்ப்பு பார்வைகள் எல்லாம் இல்லை. நான் நன்றாகப் படித்தேன் என்று சொல்லமுடியாது. அதற்காக யாரும் என்னை கடிந்துகொண்டதில்லை. அதுதான் எனக்கு சுதந்திர உணர்வைத் தந்தது. ஊக்கம், உற்சாகப்படுத்துதல் என்று சொன்னால் அது நண்பர்கள்தான். இவ்வளவு தூரம் சில வேலைகளை செய்யமுடிகிறது என்றால் அது நண்பர்களால் மட்டும்தான். அவர்கள் எனக்கு செய்த, செய்துவரும் உதவிகளை மறக்கமுடியாது.

நண்பர்களிடமிருந்து எந்த வகையான உதவிகள் கிடைத்தன?

அண்ணன் திருமணத்தின்போது போட்டோ எடுக்கவந்தவரே எனக்கு நண்பராகி என்னை புகைப்படத்துறையில் இழுத்துவிட்டதிலிருந்தே நண்பர்களின் உதவி ஆரம்பித்தது. அவர்மூலமாக நான் திருமண போட்டோகிராபராக இருந்தபோதே எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். தியாகராஜன் என்பவர் எழுதிய புகைப்படக் கலை புத்தகமும் என்னை யோசிக்கவைத்தது.

டிஎஸ்கே கரண் மெடிகல் போட்டோகிராபியில் எக்ஸ்பெர்ட். அவர் பிஎஸ்எம் அதாவது போட்டோகிராபி சொஸைட்டி ஆப் மெட்ராஸ் பொறுப்பில் இருந்ததால் அவர் என்னை சொஸைட்டியில் இணைத்தார். அவரிடம் நல்ல அனுபவங்கள் கிடைத்தன.

வடசென்னையில் பொருளாதாரத்தால் பின்தங்கிய பகுதிகளே அதிகம். அங்குள்ள நண்பர்கள் வார இறுதியில் என்னசெய்வதென்று தெரியாமல் எங்காவது சுற்றுவோம். ஆனால் அது உபயோகமானதாக இருந்தது. அனைவரும சேர்த்து மீஞ்சூர் அருகில் தோட்டக்காடு கிராமத்திற்குச் செல்வோம்.

விடியற்காலை நேரங்கள் அவை. அதிகாலை பனிக்காலத்தில் தும்பிகள் மீது இருக்கும் வயல்வெளிகள் தட்டான், வண்ணத்துப்பூச்சி, விதவிதமான பறவைகள் அங்கு வரும். அவற்றை படம் பிடிப்பதோடு என்னென்ன பறவைகள், என்னென்ன பூச்சிகள் என ஆய்வு செய்யத் தொடங்கினோம்.

இதைப்போல மேடவாக்கம் அருகே நன்மங்கலம் போன்ற இடங்களுக்கும் எங்கள் தேடல் நகர்ந்து சென்றது. இந்தமாதிரி நேரங்களில் வனங்களில் படம்எடுக்க நண்பர்கள் வந்து கேமரா கிட்ஸ் வாங்கித்தந்ததை மறக்கமுடியாது.

போட்டோகிராபி சொஸைட்டி ஆப் மெட்ராஸ் உங்கள் பங்களிப்பு?

சொஸைட்டியில் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டபோது நானே ஒரு கிளப் தொடங்குவதென முடிவு செய்தேன்.

அதில்தான் எனது பங்களிப்புகள் இருந்தன. பெலிகான் நேச்சர் போட்டோ கிளப் நடத்தி வந்தேன். பெலிகான் என்றால் கூழைக்கடா என்ற நீர்நிலப் பறவை. இயற்கையியல் புகைப்படங்கள், வைல்டுலைப் புகைப்படங்கள், ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்கள் எனற இயங்குபவர்களுக்கு உரிய தளமாக அது அமைந்தது.

ஆகஸ்ட் 19 ஆகஸ்ட் 19 வேர்ட் போட்டோகிராபி உலகப் புகைப்படங்கள் தினம். கேமரா கண்டுபிடித்தவரின் பெயரில் உலகம் முழுக்க கொண்டாடுவார்கள். இதே நாளில் நாங்கள் நடத்தும் விழாவில் சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு பெலிகான் சின்னம் பொறித்த விருது வழங்கி சிறப்பிப்போம்.

உங்கள் 'வலசைப் பறவைகள் வாழ்விடச் சிக்கல்கள்' நூலில் என்ன மாதிரியான விஷயங்களைப் பேசியுள்ளீர்கள்?

1980களில் 10,12 லட்சத்தில் தமிழகம் நோக்கி வருகை தந்த வலசைப் பறவைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இன்று 5 அல்லது 6 லட்சம் எண்ணிக்கையில் மட்டுமே வருகின்றன. வீழ்ச்சிக்கான காரணங்கள் நீர்வளங்கள் குப்பைமேடுகளாக மாறிய பாதிப்புகள், நீர்வளங்களைச் சுற்றிலும் உருவான மாசு, நீர்நிலைகளை வேறு பயன்படுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் சார்ந்து நிறைய மாற்றங்களை இயற்கை சூழல் பாதிப்படைந்துள்ளது. இதனால் நீர்நிலை சார்ந்து இருந்து

பல்லுயிர்ப்பெருக்கம் பெரும் சேதாரம் அடைந்தது. தமிழகத்தைநோக்கி வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைய இதுவே காரணம். இனியாவது பறவைகளை வாழ விடுங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும் என்று கோரியுள்ளேன். இயற்கை சூழல் பாதிக்கப்படும்போது அடித்தட்டு மக்கள் வாழ்வுச் சூழலும் இதனால் பாதிப்படைகிறது என்பதையும் நான் குறிப்பிடத் தவறவில்லை. இதில் மல்டிகலர் தரத்தில் இப்புத்தகம் வெளிவந்தபோது மக்களிடையே நல்ல வரவேற்பு.

தாங்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள உயிர் இதழ் பற்றி....

uyirjpg50 

சாங்ச்சுவரி இதழ் 90களில் இருந்து வாசித்து வருகிறேன். 15, 20 ரூபாய் இருந்தபோதே வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு ஆங்கில ஈடுபாடு குறைவு என்றாலும் வனங்களின் மீதான ஆர்வமே என்னை தேடிப் படிக்க வைத்தது.

உயிர் சூழலியல் இதழ் விலை ரூ.60 புகைப்படக்கலை சார்ந்த இதழ்கள் சர்வதேசத் தரத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை சற்று கூடுதல் கவனம் செய்து செலவானாலும் பரவாயில்லை என வெளியிட்டுள்ளோம்.

வைல்டுலைப் போட்டோகிராபியில் ஈடுபட மற்றவர்களுக்கும் உதவுவீர்களா?

தாராளமாக. அதுதான் என் வேலையே. டபிள்யூடபிள்யூஎப் என்றொரு அமைப்பு அதாவது வைல்டுலைப் ஃபண்ட் ஃபார் நேச்சர் அமைப்புக்கு தமிழகத்தின் டைரக்டராக இருந்தவர் டாக்டர் வி.தக்ஷிணாமூர்த்தி. போட்டோகிராபி போட்டிகள் பற்றி விழிப்புணர்வுகளை எனக்கு ஏற்படுத்தினார்.

வைல்டுலைஃப் போட்டோகிராபி என்றால் என்னவென்று தமிழிலேயே மாணவர்களுக்கு விளக்க வேண்டுமென்று என்னை மடைமாற்றினார். அடையாறு பூங்காவுக்கு வருபவர்கள், சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள், தமிழகமெங்கும் உள்ள பள்ளிக்கூடங்கள் என பரவலாக சென்று வைல்டுலைப் போட்டோகிராபி பற்றி பேசி வருகிறேன். இதில் முக்கியமானது... நாம் எங்கு சென்று படம்எடுக்கிறோமோ அந்தப் பகுதியின் இயற்கையியல் சூழலுக்கோ பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ பாதகம் இன்றி நாம் படம் எடுக்கவேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் இடம்பெறுகிறது. காட்டில் இருக்கும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் குறித்தான புகைப்படங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவ்வுயிர்களின் வாழ்க்கை சுழற்சி... அவற்றின் வாழ்க்கையை ஒட்டியே மனிதனின் வாழ்க்கை உள்ளது. ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியை இவையே தீர்மானிக்கின்றன. எனவே இவற்றைப் பற்றிய புரிதலையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வேன்.

அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை சண்முகானந்தம் உதிரி மனிதர்கள் செய்யும் இந்த உன்னதப் பணிகளில் நம் கையும்சேர வேண்டும் என்ற உணர்வோடு அவரிடமிருந்து விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x