Published : 17 Jan 2018 07:05 PM
Last Updated : 17 Jan 2018 07:05 PM

யானைகளின் வருகை 119: மாயாற்றில் கலக்கும் ரசாயனக் கழிவு

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில், ஆங்கிலேயர் காலத்தில் காடுகளில் வெட்டப்படும் மரங்களை எடுத்துச் செல்லும் வேலைக்கு யானைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம். இம்முகாமில் காட்டில் தாயை பிரிந்த குட்டி யானை முதல் பொதுமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் காட்டு யானைகள் வரை கும்கி யானைகளால் பிடித்து வரப்படுகிறது. தற்போது இந்த முகாமில் 26 வளர்ப்பு யானைகளை வைத்துப் பராமரித்து வருகின்றனர் வனத்துறையினர்.

இந்த தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளில் எதற்காவது மஸ்து (மதம்) பிடித்து விட்டாலோ, உடல்நலம் குன்றி விட்டாலோ, வயதடைந்து ஓய்வு பெற்றுவிட்டாலோ அவற்றை இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பாம்பேக்ஸ் முகாமில் வைத்து தனியாக பராமரிக்கிறார்கள். மக்னா மூர்த்தி போன்ற மூர்க்கமான, பல பேரை கொன்ற யானைகளை பிடிக்கும்போது, அவற்றை முகாமில் கொடூரமாகவே துன்புறுத்தி பழக்கப்படுத்துகிறார்கள். பெரிய, பெரிய மரங்களில் கரால் அமைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி அதற்குள் விடப்படும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அரைப்பட்டினியுடனே நிறுத்தப்படும். முதல் ஐந்து நாட்களுக்கு உணவு கிடையாது. மலையாளம், தமிழ் கலந்த மொழி பேசும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாகன்களே அதை தம் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவை சங்கிலியே பிணைக்கப்படாத அளவு பாகன்களுடன் ஒன்றிப் போய் விடுகிறது. அப்படி இங்கே கொண்டு வரப்படும் எல்லா யானைகளும் காப்பாற்றப்படுகிறதா? சமீப காலங்களில் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் சில வருடங்களாகவே யானைகள் வளர்ப்பில் இம்முகாம் வனத்துறையினர் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

2013-ம் ஆண்டு திருவண்ணாமலையில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்திய 5 யானைகளை வனத்துறையினர் பிடித்தனர். இவற்றில் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண் யானைகளும், 22 வயதுடைய ஒரு பெண் யானையும் இங்கே கொண்டு வரப்பட்டது. இதற்கு கிருஷ்ணா, பாரதி மற்றும் நர்மதா என பெயர் சூட்டப்பட்டு பராமரித்து வந்த நிலையில் நர்மதா என்ற பெண் யானை வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு யானைகள் வளர்ப்பு முகாமில் செம்மொழியான் (ரங்கா) என பெயர் சூட்டி பராமரித்து வந்தனர். ஆனால், இந்தக் குட்டி யானை விளையாடும் போது தவறி விழுந்ததில் முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் போனது. 2 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செம்மொழியான் உயிரிழந்தது.

இதன்பின் பவானி ஆற்று கரையோரம் ரங்காவுடன் மீட்கப்பட்ட 2 குட்டி யானைகளும், பிறகு பவானி ஆற்றின் அருகே மீட்கப்பட்ட மற்றொரு குட்டி யானையும் கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் காயமடைந்த யானையும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த யானைகள் எல்லாமே சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.

இப்படி தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் இறப்பதற்கு பராமரிப்பாளர்கள், ''காட்டில் தாயிடமிருந்து பிரியும் குட்டி யானைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போய் விடுகிறது. தாய்ப்பாலில்தான் குட்டி யானையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நாங்கள் பால் பவுடர், முட்டையின் வெள்ளைக்கரு, விளக்கெண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய டானிக் ஆகியற்றை கலந்து கொதிக்க வைத்து நன்றாக ஆறிய பின்னரே குட்டி யானைக்கு தருகிறோம். இருந்தாலும் தாய்ப்பாலில் கிடைக்கும் சத்துகள் கிடைக்காமல் குட்டி யானை இறந்து விடுவது தவிர்க்க முடியாமல் போகிறது!'' என்று காரணம் சொல்கிறார்கள்.

அதே சமயம், ''முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கான மருத்துவமனையின் உட்கட்டமைப்பு போதிய அளவு இல்லை. இங்கு நோயால் பாதிக்கப்பட்டு கொண்டு வரும் யானைகளை கீழே படுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கென்று பிரத்யேகமாக பெல்ட் அமைப்பு உள்ளது. அந்த பெல்ட் அமைப்பு உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்ககளை அரசாங்கம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும். அதைப் போல் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தினால் வளர்ப்பு யானைகளின் இறப்பைத் தடுக்கலாம் அதையெல்லாம் செய்வதேயில்லை!'' என்பது வன உயிரின ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

அதையும் தாண்டி இங்கே மாயாற்றில் தண்ணீர் ரசாயனம் கலந்து வருகிறது. அதுவே இங்கு பிடித்து வரப்படும் யானைகளை மட்டுமல்ல, ஏற்கெனவே இங்கேயே இருக்கும் யானைகளைக் கூட கொன்றுவிடுகிறது!'' என்கிறார்கள் முதுமலையைச் சுற்றியுள்ள இயற்கை ஆர்வலர்கள்.

எப்படி?

2017 அக்டோபர் கடைசி வாரத்தில் சில பத்திரிகைகளில் மட்டும், 'ஊட்டி அருகே, அணைகளில் ரசாயனக் கழிவுநீர் கலந்ததால் தனியார் தொழிற்சாலைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது!' என்ற சின்னதாக ஒரு செய்தியை நீங்கள் கண்டிருக்கக்கூடும். இந்த செய்திக்குரிய ஃபேக்டரிதான் இந்த கொடுஞ்செயலை தொடர்ந்து செய்து வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அவர்கள்.

ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாண்டில்லா சிறு கிராமம். இங்கே மிருக எலும்புகளால் ஜெலட்டின் போன்ற சில வகைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரேட், லைம் போன்ற ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 600 பேர் பணிபுரியும் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருக்கும் இந்த கம்பெனி இவ்வழியே வரும் மாயாற்றுத் தண்ணீரையே தன் உற்பத்திக்கு பயன்படுத்திவிட்டு, கழிவு நீரை ஆற்றில் விடுகிறது.

இந்தக் கழிவு நீரை சுத்தப்படுத்த, சுத்திகரிப்பு தொழிற்சாலை இருந்தாலும், அது பெயரளவுக்கே செயல்படுகிறது. அதனால் சுற்றுப்புறத்தில் சுமார் 3 மைல் சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்தக் கழிவுநீர் கலந்த நீர்தான் மாயாற்றில் கலந்து அடுத்ததாக உள்ள பைக்காரா, கிளன்மார்க்கன், காமராஜர் அணை, சிங்காரா பவர் ஹவுஸ் தெப்பக்காடு என வந்து வழியே வந்து பவானி சாகர் வருகிறது. இந்த ஆற்றில்தான் முதுமலை முகாம் யானைகள் குளிப்பது மட்டுமல்ல, முதுமலையை சுற்றி அலையும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் நீர் அருந்துகின்றன.

அது மட்டுமல்ல, இந்த ஆறு செல்லும் வழிப்பாதையில் 69 தோடர் இன மக்களின் மந்த்துகள் (கிராமங்கள்) உள்ளன. அதில் 1800 தோடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் பிரதான கால்நடையாக விளங்குவது எருமைகள். ஒரு தோடர் குடும்பத்திற்கு நூற்றுக்கணக்கான எருமைகள் சொந்தமாகவும் இருந்தன. அவற்றை மேய்த்து அதில்தான் அவர்கள் வருமானம் ஈட்டினர். அந்த எருமைகள் தண்ணீர் அருந்துவது எல்லாம் இந்த மாயாற்றில்தான்.

இந்த ஃபேக்டரி வந்த 35 ஆண்டுகளில் அந்த எருமைகள் எல்லாம் காலவதியாகி விட்டன. அவை திடீர் திடீர் வயிற்றுப்போக்கு நோய்களால் செத்தும் போய்விட்டன. இப்போதெல்லாம் 69 மந்த்துகளுக்கும் சேர்த்துப் பார்த்தால் 200 முதல் 300 எருமைகள் இருந்தாலே அதிகம். அப்படி வளர்ப்பு எருமைகளின் உயிரைக் குடித்ததே, இந்த ஃபேக்டரி கழிவு ரசாயனம்தான் என்பது இங்குள்ள மக்களின் குற்றச்சாட்டு.

வளர்ப்பு எருமைகளே இந்த அளவுக்கு அழிந்திருக்கின்றன என்றால் இந்த நீரை உட்கொள்ளும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் எவ்வளவு இறந்திருக்கும். அதில் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகள் மட்டும் தப்பிப்பிழைக்க முடியுமா? என்பதே இங்குள்ள சூழலியாளர்களின் கேள்வி.

''இந்த ஃபேக்டரி கழிவுதான் இந்த ஏரியாவையே பாழ்படுத்துகிறது என்பது இங்குள்ள அனைவருக்குமே தெரியும். குறிப்பாக வனத்துறையினருக்கும் தெரியும். மாயாற்றில் தண்ணீர் வற்றும் போதெல்லாம் அதில் கழிவு நீர் செல்வது அப்பட்டமாகவே பார்க்கலாம். என்றாலும் அந்த ஃபேக்டரி ஒரு மத்திய அமைச்சரின் உறவுக்காரருடையது. எனவே அதைப்பற்றி யாருமே மூச்சு விடுவதில்லை. எப்போதாவது மக்களோ, சுற்றுச்சூழல் அமைப்பினரோ புகார் தெரிவித்து, மீடியாக்களிடம் போனால் உடனே பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகம் சொற்பத் தொகையை அபாரதம் விதிக்கும். கூடவே ஒரு எச்சரிக்கை நோட்டீஸூம் வழங்கும். அப்புறம் கண்டுகொள்ள மாட்டார்கள். முத்தங்கா, பந்திப்பூர், முதுமலை என மூன்று வன உயிரின உய்விடம் ததும்பும் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நீர் ஆதாரம். இப்படி ரசாயனக் கழிவுடன் வருகிறது என்றால் இங்கே எத்தனை அரசுத்துறை அதிகாரிகள்தான் செயல்பட்டு என்ன புண்ணியம்?'' என பொங்கினார் இப்பகுதி இயற்கை ஆர்வலர் ஒருவர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x