Published : 03 Jan 2018 10:09 AM
Last Updated : 03 Jan 2018 10:09 AM
உ
லகில் இயற்கை சமன்பாட்டைக் காப்பதில் மனிதன், விலங்கு, தாவரங்கள், பூச்சிகள் என்ற வேறுபாடு இன்றி அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. இதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு முதன்மையானது. பட்டாம்பூச்சிகள் அதிகம் உள்ள இடத்தில் இயற்கை குறியீடு சிறப்பாக உள்ளது என்று அர்த்தம்.
தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் ஒரு மலரில் உள்ள தேனை உண்ட பிறகு, அடுத்த மலருக்குச் செல்லும்போது தன் கால்களில் மகரந்தத்தையும் எடுத்துச் சென்று மகரந்தச் சேர்க்கைக்கு உதவி செய்கின்றன. இதனால், வளமிக்க ஒரு வனம் உருவாகத் தேவையான விதைகளை உருவாக்குகின்றன. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் இல்லாவிட்டால், பூ காய் ஆகாது, காய் இன்றி கனி இல்லை, கனியின்றி விதையில்லை, கடைசியில் வனவளமே இல்லை. இவ்வாறு, நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வலசை சென்று, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனவளத்தையே காப்பாற்றுகின்றன.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1,497 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் அரிய வகை விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகளின் வாழிடமாகும்.
உலகின் சிறந்த உயிரின ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் கிருஷ்ண மேக்ஹ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்து, பட்டாம்பூச்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதிய ‘தி பட்டர்பிளைஸ் ஆஃப் பெனின்சுலார் இந்தியா’ என்ற புத்தகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பட்டாம்பூச்சிகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
நிறம், உடல் அமைப்பு, அளவு ஆகியவற்றின் அடிப்படையில், வால் வண்ணத்திகள் (Swallowtails), வெண் மஞ்சள் வண்ணத்திகள் (Whites and Yellows), தூரிகை கால் வண்ணத்திகள் (Brush footed Butterflies), நீலன் வண்ணத்திகள் (Blues), துள்ளி வண்ணத்திகள் (Skippers) என பட்டாம்பூச்சிகள் 5 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அசாம், மணிப்பூர், மேற்குவங்கம் ஆகிய வடகிழக்கு பகுதிகளில் அதிக பட்டாம்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.
தமிழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டுகளில் டாக்டர் கிருஷ்ண மேக்ஹ் 164 வகைகளை ஆவணப்படுத்தினார். அதன் பின்பு கடந்த சில ஆண்டுகளில் ‘ஆக்ட் ஃபார் பட்டர்பிளைஸ்’ குழுவால் 132 வகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறை தனியாக கணக்கெடுத்தால் இன்னும் 200-க்கும் அதிகமான வகை பட்டாம்பூச்சிகளை ஆவணம் செய்ய முடியும் என்கின்றனர் பட்டாம்பூச்சி பாதுகாவலர்கள்.
வலசை செல்லும் ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்வு பெரும்பாலும் ஒருவழிப்பாதையாக முடிந்துவிட, அவற்றின் வாரிசுகள் அதே பாதையில் திரும்பி தங்கள் முன்னோர் புறப்பட்ட இடத்துக்கு வருகின்றன. இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக தன் உணவு, இனப்பெருக்கம், சீதோஷ்ண நிலை மாற்றத்துக்காக வலசை செல்லும் பயணப்பாதையை தக்கவைத்துக் கொண்டுள்ள பட்டாம்பூச்சிகளின் செயல், இயற்கையின் அற்புத நிகழ்வாக உயிரியலாளர்களால் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 14.6 கோடி பட்டாம்பூச்சிகள் வலசை சென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் பல இடங்களில் பட்டாம்பூச்சிகளின் வலசை பயணம் மிக சிறப்பாக உள்ளது. ஆனால் அதுகுறித்து ஆய்வு செய்யும் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது என்கின்றனர் உயிரியல் ஆர்வலர்கள்.
பட்டாம்பூச்சிகள் மீது கொண்ட தீவிர காதலால் கடந்த 6 ஆண்டுகளாக பட்டாம்பூச்சி நோக்கலில் (Butterfly Watching) கவனம் செலுத்தி வரும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளரும், ‘ஆக்ட் ஃபார் பட்டர்பிளைஸ் குழு’ நிறுவனருமான மோகன் பிரசாத் இதுபற்றி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அவசர வாழ்க்கை சூழல், வேலைப் பளு என்று பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு, இயற்கையை ரசிக்கத் தவறிவிட்டோம். ஓர் இடத்தில் நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள், பறந்து செல்லும் அற்புத நிகழ்வை அனுபவிக்கும்போது மனதில் தோன்றும் பரவசத்தைப் பகிர வார்த்தைகள் இல்லை. இந்த அதிசய நிகழ்வு, வலசை செல்லும் காலத்தில் மட்டுமே காணக் கிடைக்கும்.
பருவமழை காலங்களில் தமிழகத்தில் கோவை, ஆனைமலை, நீலகிரி, ராமேசுவரம், சென்னை, கன்னியாகுமரி, கல்லார் போன்ற பகுதிகளில் பட்டாம்பூச்சிகள் வலசை போகும் நிகழ்வு அதிகம் நடக்கும். இப்பகுதிகளில் வலசை நிகழ்வுகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளையன் இன பட்டாம்பூச்சிகளான அவரை வெள்ளையன், கொன்னை வெள்ளையன், எலுமிச்சை மற்றும் நீலபுலி, இந்தியன் குரோ போன்ற வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை அதிகம் இடம்பெற்றுள்ளன.
அதற்கு காரணம், அதன் உணவு தாவரங்களான பலா, கொன்றை, மந்தாரை, சீமை அகத்தி, நீள்திருவத்தி, கருவேப்பிலை, எலுமிச்சை, மா, தும்பை, ஈஸ்வரமூலி, குந்துமணி, வெட்சி, இலந்தை உள்ளிட்ட நாட்டு தாவரங்கள் வலசை போகும் பாதையில் அதிகம் கிடைப்பதுதான்.
வலசை பாதையில் ஈரப்பாங்கான பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் சோடியம், தாது உப்புகளை வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளும், சாணம் மற்றும் ஆற்று படுகைகளில் கிடைக்கும் தாது உப்புகளை ஆண் வெள்ளையன் பட்டாம்பூச்சிகளும் எடுத்துக்கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றன.
பட்டாம்பூச்சிகளைப் பார்க்கவும், அவற்றை நோக்கவும் குழந்தைகளைப் பழக்கப்படுத்தினால், மிகவும் குதூகலிப்பார்கள்.
எனவே, பட்டாம்பூச்சி நோக்கலில் (Butterfly Watching) குழந்தைகளை பங்கேற்கச் செய்து, அவற்றின் பெயர்கள் மற்றும் விவரங்களை தெரிந்துகொள்ளவும், அதுபற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். அந்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மோகன் பிரசாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT