Published : 20 Jan 2018 10:37 AM
Last Updated : 20 Jan 2018 10:37 AM

பச்சக் குதிரை.. பரமபதம் ஆடுங்க.. விரல் நுனியில் இல்லை விளையாட்டு!

கிராமங்களில் சிறுவர்களிடம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு விளையாட்டு தலைதூக்கும். ஆனி, ஆடி, ஆவணியில் பனை ஓலையில் காற்றாடி செய்து விளையாடுவார்கள். கோடையில் நுங்கு வண்டி செய்து உருட்டுவார்கள். இருள் சூழ்ந்த நேரத்தில் திருடன் - போலீஸ் விளையாட்டு களைகட்டும். இதில் சிறுவர்கள், சிறுமிகளுக்கு தனித்தனியான விளையாட்டுகள், இருவரும் சேர்ந்து விளையாடுதல் என்றும் பல வகைகள் உள்ளன.

கோலிக் குண்டு, கிட்டிப்புள், பச்சக்குதிர, ஒத்தையா ரெட்டையா, குலைகுலையா முந்திரிக்கா, பம்பரம், நொண்டியடித்தல், புதையல் தேடுதல், திருடன் - போலீஸ், சாக்கு ஓட்டம், நுங்குக் கூடு வண்டி ஓட்டம், கண் கட்டி விளையாடுதல், கிச்சு கிச்சு தாம்பூலம், பூப்பறிக்க வருகிறோம், கொக்கு பற பற, கோழி பற பற, ஒருகுடம் தண்ணீ எடுத்து ஒரு பூ பூத்தது, தட்டாங்கல், பல்லாங்குழி, விடுகதை, கண்ணாமூச்சி, தாயம்.. என இந்தப் பட்டியல் நீளும்.

இந்தப் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவர்களது உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தி, கணிதம், அறிவியல், இலக்கை எட்டுவதற்கான விடாமுயற்சி ஆகியவற்றையும் கற்றுத் தந்தன. தற்போது கிராமங்களில்கூட வழக்கொழிந்துவிட்ட இந்த விளையாட்டுகளை மீட்டெடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தரும் பணியை மேற்கொண்டுள்ளது திருச்சி ராமலிங்க நகரில் உள்ள ஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளி. 5-ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில், மற்ற மாணவர்கள் 400 பேருடன் சிறப்புக் குழந்தைகள் 100 பேரும் இணைந்து படிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர்களின் 26 பாரம்பரிய விளையாட்டுகளைத் தேர்வு செய்து, மாணவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து, அவர்களை நன்கு விளையாட வைத்துள்ளனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாபு, இப்பள்ளியின் தாளாளராக உள்ளார். இந்தப் புதிய முயற்சி குறித்து அவர் கூறியதாவது:

தற்போதுள்ள மாணவ சமுதாயத்துக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும், அதை எப்படி விளையாடுவது என்பது குறித்தும் தெரியவில்லை. எனவே, மாணவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சியளித்து, தனித்தனியாக அணிகளை உருவாக்கினோம். அவர்கள் அனைவரும் விழாவில் சிறப்பாக விளையாடினர்.

வெறும் விரல் நுனியில் விளையாடும் செல்போன் விளையாட்டுகள் போன்றதல்ல நம் பாரம்பரிய விளையாட்டுகள். அவற்றை விளையாட உடலோடு, மனமும் சேர்ந்து இயங்க வேண்டும். இதுபோன்ற விளையாட்டுகள்தான் உடலையும், உள்ளத்தையும் உறுதிப்படுத்தி, சகோதர மனப்பான்மையை வளர்க்கும். பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டுகளும் உள்ளன. அவற்றால் குழந்தைகளின் நினைவுத்திறன், குரல் வளம் ஆகியவையும் மேம்படும்.

பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்றனர். பெற்றோரும் பெரிதும் ரசித்தனர். கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லட் போன்றவற்றில் சிக்கியிருக்கும் நம் குழந்தைகளை மீட்டு பாரம்பரிய விளையாட்டுகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது’’ என்கிறார் பாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x