Published : 24 Jan 2018 09:09 PM
Last Updated : 24 Jan 2018 09:09 PM

யானைகளின் வருகை 122: வால்பாறைக்கு சாலையான வலசை

சிறிது நேரம் வனத்துறையினர் அந்த காட்டு யானைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் கும்கி யானைகளை கொண்டு விரட்ட ஆரம்பித்தனர் வனத்துறையினர். இதனைத் தொடர்ந்து அந்த காட்டு யானை அங்கிருந்து சிறிது தூரம் நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17-எண் தேயிலைத் தோட்டத்திற்குள் நடந்து சென்றது. அதன் பிறகு என்ன நடந்ததோ, அந்த காட்டு யானை திடீரென்று கால்கள் தள்ளாடியபடி தேயிலைத் தோட்டத்திற்குள்ளேயே மயங்கி விழுந்தது. உடனே கால்நடை மருத்துவர் மனோகரன் யானையின் உடலை பரிசோதித்து காட்டு யானை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் வனத்துறையினர் மட்டுமல்ல, இந்த விரட்டல் பணியை கவனித்து வந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த காட்டு யானை இறந்தது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்ததும், பிரேத பரிசோதனை செய்த பிறகு யானையின் உடல் புதைக்கப்பட்டது.

இறந்த பெண் யானைக்கு வயது 50 முதல் 60 வயதுக்குள் இருக்கும். இந்த யானை வயது முதிர்ந்த நிலையில் பற்கள் முழுவதும் தேய்ந்து போன நிலையில் நீண்ட நாட்களாக போதிய உணவு சாப்பிடாத நிலையில், தனது உடலில் சக்தியில்லாத நிலையில் இருந்தது. மேலும் யானையின் உடல் முழுவதும் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டும் இருந்தன. இதற்கிடையில் அந்த யானை, நீண்ட தூரம் சக்தியில்லாத நிலையில் நடந்து வந்ததாலும் மிகவும் பலவீனம் அடைந்தது. மேலும் ஆற்றில் இறங்கி நீந்திச்செல்லும் போது ஆற்றுத்தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்திருக்கலாம். இது போன்ற பல காரணங்களால் அந்த காட்டு யானை இறந்து இருக்கலாம் என்பது மருத்துவர்கள் கூற்றாக இருந்தது.

வால்பாறை பகுதியில் உள்ளது குரங்குமுடி எஸ்டேட், இப்பகுதியில் புகுந்த 6 காட்டு யானைகள், அப்பகுதியில் இருந்த ரேஷன் கடை கதவை உடைத்து சேதப்படுத்தியது. அங்கு குறைவான பொருட்களே இருந்ததால் அருகில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதிக்குள்ளும் நுழைந்தன. அங்கிருந்த சிந்தாமணி ரேஷன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த அரிசி மூட்டைகளை கிழித்து அரிசியை தின்றது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. ரேஷன் கடையில் இருந்த பொருட்களின் பெரும்பகுதியை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களுக்கு குறைந்த அளவே பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு யானை குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள சேத்துமடை, போத்தமடை, தம்பம்பதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில், சேத்துமடை அருகே உள்ள தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து, அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியது. அதில் சுமார் 300 தென்னை மரங்களை சாய்த்து, குருத்துப் பகுதிகளை உணவாக உட்கொண்டன யானைகள். தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்படியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் செல்லவில்லை. ஒரு தோட்டத்து வீட்டை உடைத்ததுடன், அங்கிருந்த பெண்ணையும் தாக்கியது. அதில் பலத்த காயம் பட்டு அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தொடர்நது டாப் ஸ்லிப்பிலிருந்து கலீம், மாரியப்பன், சுயம்பு மற்றும் வெங்கடேஷ் ஆகிய 'கும்கி' யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் மூலம் இரவு, பகல் என தொடர்ந்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, சேத்துமடை அருகே உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் வராததால், அவை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என்று கருதி 'கும்கி' யானைகளை டாப் ஸ்லிப்பிற்கு கொண்டு சென்றனர் வனத்துறையினர்.

இப்படி தினம், தினம் வால்பாறை, டாப் ஸ்லிப், அமராவதி, ஆனைமலை பகுதிகளின் முக்கியச் செய்திகளை திறந்தால் அதில் ஒன்றோ இரண்டோ யானை குறித்த செய்திதான். ஒன்று யானை, சிறுத்தையால் சேதமுற்ற வீடுகள், இடங்கள் இடம் பெற்றிருக்கும். அல்லது யானை தாக்கி இறந்த மனிதர்கள் சோகம் இருக்கும். சில சமயங்களில் யானைகள் இறந்த கதைகள் விரியும். கடந்த அத்தியாயத்தில் சொன்ன மாதிரி 'ரெட் டீ' நாவல் உருவான காலத்தில் (அது வெறும் நாவல் அல்ல; நாவல் பெயரால் வடிவமைக்கப்பட்டிருக்கும் வரலாற்றுப் பதிவு என்பதை அதை படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்) அதாவது, 1940களில் பெரிசாக ஊருக்குள் நுழையாத வனமிருகங்கள், குறிப்பாக காட்டு யானைகள் இப்போது ஏன் எஸ்டேட்டுகளுக்குள் வருகின்றன. தொழிலாளர்களை கண்ட இடத்தில் போட்டு மிதிக்கின்றன. குடியிருப்புகளை துவம்சம் செய்கிறது? ரேசன் கடைகளை சேதப்படுத்தி அங்குள்ள சர்க்கரை, அரிசி, பருப்பு ஆகியவற்றை உண்கிறது?

காரணங்கள் நிறைய உள்ளன. அதில் முக்கியமானது ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் 50 கிலோமீட்டர் நெடுக மலைப்பாதையும், அதன் நாற்பதுக்கு, நாற்பது கொண்டை ஊசி வளைவுகள் மொத்தமும் அந்தக் காலத்தில் யானைகளின் வலசையாகவே இருந்தன. யானைகள் நடந்த பாதையையே செதுக்கி, செதுக்கி சாலையாக்கி வாகனங்களை ஊர்ந்திட வைத்தது மனிதகுலம். தமிழகத்திலேயே, ஏன், இந்தியாவிலேயே யானைகளின் வலசைப்பாதையே சாலையாக மாற்றப்பட்ட இடம் ஒன்று உண்டென்றால் அது வால்பாறையாகத்தான் இருக்கும் என்கிறது இங்கு காட்டு யானைகள் குறித்து செய்யப்பட்டிருக்கும் ஆய்வு.

இந்திய அளவில் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வரும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு (Nature Conservation foundation) மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் உள்ள உயிர்ச்சூழல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரள, தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனத்துறையினருடன் இணைந்து இவர்கள் செய்து வரும் ஆராய்ச்சியின் முடிவுகளை அரசுக்கு கொடுப்பதோடு, அதில் வனவிலங்கு-மனித மோதல் பிரச்சினைக்கும் சில வடிகால்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் 1997-ம் ஆண்டு முதல் வால்பாறை காடுகளை ஆய்வுக்குட்படுத்திய இவ்வமைப்பின் ஒரு குழுவினர் 2002-ம் ஆண்டிலிருந்து காட்டு யானைகள் குறித்த ஆராய்ச்சியை மட்டும் செய்து முடித்திருக்கிறது. அதன் மூலம் காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை, உயிர்ச்சேதங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்த குழுவில் வால்பாறை காடுகளில் அலையும் காட்டு யானைகள் குறித்து ஒரு தெளிவைத் தருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் வால்பாறை காடுகள் 220 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டவை. 18-ம் நூற்றாண்டிலேயே இங்கே தேயிலை மற்றும் காபி பயிரிடுவதற்காக காடழிப்பை தொடங்கியிருக்கிறார்கள். இங்கே இந்த பயிர் விளைவிப்பதற்கான சூழல் நன்றாக இருப்பதை கார்வார் மார்ஷ் என்ற ஆங்கிலேயர் கண்டறிந்து அதைப் பயிரிட்டிருக்கிறார். இந்த காடுகளில் பூர்வகுடிகளாக காடர், முதுவர், மலசர், புலையர்கள் போன்றவர்களே இருந்துள்ளனர்.

அந்தக் காலத்தில் மலைக்குச் செல்லப் பாதை இல்லை. எனவே யானைகள் நடமாடும் பாதைகளில் (வலசை) புல், பூண்டுகள், செடி, கொடிகள் மிதிபட்டு சுத்தமாகவும், சமதளமாகவும் காட்சியளிக்க, அந்தப் பாதையையே வண்டிப்பாதை ஆக்கியிருக்கிறார்கள். அதிலிருந்தே மோட்டார் வாகனங்கள் செல்லும் அளவு பாதை அமைத்திருக்கிறார்கள். தேயிலை எஸ்டேட்டுகள் அமையும்போது அதற்கேற்ப அவர்களும் பாதை அமைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் எஸ்டேட் ரோடுகள் என அழைக்கப்பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம் வால்பாறை செல்பவர்கள் ஆனைமலையில் புக்கிங் செய்து பிறகுதான் வால்பாறை மற்றும் டாப் ஸ்லிப் செல்ல வேண்டிய சூழல் இருந்துள்ளது. வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்கள் உட்பட மழைக்காலங்களில் சொந்த ஊருக்கு 4 மாதங்கள் சென்று நிரந்தரமாக தங்கி விட்டு பிறகு வருவதையே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். பிறகே அவர்களுக்காக இங்கேயே தங்கும் கொட்டகைகள் வேயப்பட்டிருக்கின்றன.

1912-ம் ஆண்டிலேயே இங்குள்ள குடியிருப்புகளை காட்டு யானைகள் உடைத்தது அய்யர்பாடி எஸ்டேட் ஆவணங்களில் பதிவிடப்பட்டிருக்கிறது. அப்போதிருந்து இப்போது வரை நவம்பர் தொடங்கி ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை 30 யானைகள் முதல் 10-15 யானைகள் கொண்ட குழுக்கள் வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x