Published : 21 Jan 2018 07:39 PM
Last Updated : 21 Jan 2018 07:39 PM

யானைகளின் வருகை 121: ரெட் டீ பேசும் சரித்திர உண்மை!

 

'வால்பாறை' என்றவுடன் உங்களுக்கு சட்டென்று என்ன நினைவுக்கு வரும்? அங்கே உள்ள தேயிலை எஸ்டேட்டுகள். அதில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான எஸ்டேட் தொழிலாளர்கள். அடிப்படை வசதிகூட இல்லாத அவர்களின் குடியிருப்பு கொட்டகைகள். அவர்களை இரவு பகல் பாராமல் மிரட்டும் புலிகள், துரத்தி மிதிக்கும் காட்டு யானைகள், குழந்தைகளை கவ்விக் கொண்டு போகும் சிறுத்தைகள், மூலைக்கு மூலை கடித்து ரத்தம் கொட்ட வைக்கும் அட்டைப்பூச்சிகள். இதுதானே? இப்போதுதான் இப்படி. ஆனால்... வரலாறு அதிலிருந்து மாறுபட்டுப் பேசுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு நாய், நரி, ஆடு,மாடுகளை விட கேவலமாக மனிதர்கள் நடத்தப்பட்ட ஓர் இடம் என்றால் அது நிச்சயம் வால்பாறை காடுகளாகத்தான் இருக்கும். காடழித்து அத்தனையும் தேயிலை எஸ்டேட்டுகளாக மாற்றிய ஆங்கிலேய முதலாளிகள் இங்கு நடத்திய அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிலாளர்களே கொடுங்கோன்மை சிறையில் அடைபட்ட அந்த கொடுமையை பக்கம், பக்கமாக விவரிக்கிற நூல் பி.எச்.டேனியல் எழுதிய RED TEA நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் முருகவேள் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த கதையின் பாடுபொருளே 'பரதேசி' திரைப்படமாகவும் வெளிவந்து மக்களிடம் பரவலான அதிர்வலையை ஏற்படுத்தியது.

1940-ம் ஆண்டு வால்பாறை காரமலை எஸ்டேட்டில் தலைமை மருத்துவ அதிகாரியாக நுழைந்த டேனியல் அங்கே நிலவிய சகிக்கவே முடியாத மனிதத்தன்மையற்ற சூழலை கண்டு மனதளவில் நொறுங்கினார்.

1930-40களில் நிலவிய பஞ்சம், வறுமை, கொடுமை, பட்டினி சாவுகளின் நீட்சியாக அந்த மக்களை எல்லாம் சாவிலிருந்து மீட்கும் கடவுளர்களைப் போல், சொற்ப முன் பணத்தை கொடுத்து தம் கங்காணிகளை விட்டு தென் மாவட்டங்களில் மக்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள் எஸ்டேட் துரைமார்கள். இந்த துரைமார்கள் வலையில் அகப்படும் தொழிலாளர்கள், அதிலும் மனைவி மக்களோடு அகப்படும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். ஆதிகால ஆடு, மாடு பட்டிகளை விடவும் கேவலமான கொட்டகைகளில் அடைக்கப்பட்டு, அட்டைக்கடியிலும், மழை, வெயில் பணியிலும் வாங்கின சொற்ப கடனையும் கட்ட முடியாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊரையே தூக்கிப்போடும் மலேரியா காய்ச்சல் கண்டு கொத்துகொத்தாய் மரணிக்கும் காட்சிகள் இருக்கிறதே. கரையாத கல் மனதையும் கரைய வைத்துவிடும். தொழிலாளிகளின் நிலைதான் இப்படி என்றால் இங்கே கங்காணிகளுக்கு மேலாக பணிபுரியும், கிளார்க்குகள், சூப்பர்வைசர்கள், மானேஜர்கள் பாடு அதை விட திண்டாட்டம்.

இப்படி பாவப்பட்ட மக்களுக்காக தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார் டேனியல். அந்த சங்கம் தென்னகம் முழுக்க பரவியது. முன்பு நினைத்தே பார்க்க முடியாதவையாக இருந்த ஏராளமான உரிமைகளை வென்றெடுத்தது. அந்த அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத நூலாசிரியர் இந்த தேயிலைத் தோட்டத்தொழிலை நிர்மாணிப்பதற்காக ஆயிரமாயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களும், எழுத்துப் பணியாளர்களும் புரிந்த மாபெரும் தியாகங்கள் அங்கீகரிக்கப்படவேயில்லை என்பதில் வருத்தம் கொண்டிருந்தார். அந்த வகையிலேயே 'ரெட் டீ' நாவலை எழுதினார். அரசர்களின் கதைகள் பேசிய அக்கால இலக்கிய யுகத்தில் முதன்முறையாக, எதற்காக சாகிறோம் என்றே அறியாமல் தேயிலைத் தோட்டத்தொழிலில் ரத்தமும் சதையுமாக செத்துக் கொண்டிருந்த அதிரர்களின் (தொழிலாளர்களின்) வரலாற்றை ரத்தமும், சதையுமாகப் பேசியது.

சரி அந்தக் கதை இங்கே எதற்கு? ஒரு வேளை வால்பாறை எஸ்டேட்டுகளை மையமாகக் கொண்டு சமகாலத்தை பற்றிய நாவலை யாராவது எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் நிச்சயம் அதில் 99.99 சதவீதம் பக்கங்கள் புலி, சிறுத்தைகள், யானைகள், ராஜநாகம், மலைப்பாம்பு, செந்நாய் போன்ற வன மிருகங்களால் தொழிலாளர்கள் படும் துன்பங்களைத்தான் கலந்து கட்டி எழுதியிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் 300க்கும் மேற்பட்ட நாவல் நீளும் அதன் 'ரெட் டீ'யின் பக்கங்களில் ஒரே ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வன மிருகங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அதுவும் எப்படி? தற்போதைய கேரள பகுதியில் இருக்கும் மூணாறு (அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்டது) தேயிலைக் காடுகளிலிருந்து சில குடும்பங்கள் வால்பாறை தேயிலை எஸ்டேட் காடுகளுக்கு வேலைக்கு வருகிறது. அந்த குடும்பத்தினர், இங்குள்ள குடும்பத்தினரும் பேசிக் கொள்கிறார்கள். அந்த சம்பாஷனையை கேளுங்கள்.

''மூணாறுல காட்டுயானைக பயங்கரமான தொந்தரவு கொடுக்கும்ன்னு சொல்றாங்களே. அப்படித்தானாண்ணே?''

''ஆமா, காலையில 9 மணிக்கு முன்னாலயும், சாயந்திரம் 5 மணிக்கு பின்னாலயும், உடுமலைப் பேட்டை மூணாறு ரோட்டுல நடமாடவே முடியாது. அந்த நேரத்துல முட்டாள்தனமா வெளியே சுத்தின கூலிகள் பல பேர் உயிரை விட்டிருக்காங்க. பெரும்பாலும் தனியா இருக்கிற காட்டு யானைகள்தான் பெருந்தொல்லை பண்ணும். அதுக எஸ்டேட்டுகள்ல ஆளுக குடியிருக்கிற எடத்துக்கு ரொம் பக்கத்துலயே கூட வந்துரும். அதுகளுக்கு கூலிகள் தோட்டத்துல போட்டு வச்சிருக்கிற வாழை, கரும்புன்னா ரொம்ப பிடிக்கும். எஸ்டேட்டுல கூட ராத்திரியானா வெளியில யாரும் வர்றது நல்லதில்லை!''

''இங்கேயும் (வால்பாறையில்) யானைங்க உண்டு. ஆனா நீங்க சொல்லுத அளவுக்கு பிரச்சினையில்லை. ஆனா யாராவது காட்டுக்குள்ளே போய் மாட்டிகிட்டா கண்டிப்பா ஆபத்துதான். விறகு வெட்ட காட்டுக்குள்ளே போற கூலிகளை அடிக்கடி யானைக விரட்டிட்டு வரும். பொள்ளாச்சி ரோடும் பாதுகாப்பானதில்லை. யானைக்கு மூங்கில் குருத்துன்னா ரொம்ப பிடிக்கும். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வளர்ந்திருக்கிற மூங்கில் குருத்துக்களை தின்ன யானைகள் பொள்ளாச்சி ரோட்டுக்கு கூட்டம் கூட்டமா வரும். அது சரி, மூணாறுல நோய் நொடியெல்லாம் எப்படி?''

''எல்லா எஸ்டேட்டும் மனுசனை கொன்னு பொதைக்கறதுக்குன்னே கட்டினதுதானே? அங்கே மட்டும் எப்படி வேற மாதிரி இருக்கும்? மூணாறு டவுன்ல மலேரியா கொஞ்சம் கம்மி. ஆனா அங்கியே கீழே இருக்கிற மத்த எஸ்டேட்டுகள்ல நெலமை இதை விட (வால்பாறை எஸ்டேட்டுகளில்) கூட மோசம். அங்கே நிம்மோனியா, இன்புளூயென்சாவும் கொன்னு தள்ளின ஆளுகளுக்கு கணக்கே கெடையாது!''

'ரெட் டீ' பாத்திரங்களின் மேற்சொன்ன உரையாடல்களிலிருந்து நிச்சயம் ஒன்று தெரிகிறது. வால்பாறை காட்டிற்குள்தான் காட்டு யானைகளும் மற்ற மிருகங்களும் இருந்தன. அவை மூங்கில் குருத்துகள் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் நிரம்பியிருந்ததால் அதை உண்ணவே அங்கே வந்தன. காட்டு யானைகள், சிறுத்தைகள் என்பவை மலேரியா, இன்புளுயன்சா முன்னாடி ஒன்றுமே இல்லை. மூணாறு காடுகளில் கூட வாழை, கரும்பு பயிர்கள் ஆங்காங்கே வைத்ததால்தான் அவற்றை கபளீகரம் செய்ய காட்டு யானைகள் எஸ்டேட்டுகளுக்குள் வந்துள்ளன என்பதுதான். ஆனால் இன்று நடப்பது என்ன? அண்மையில் நடந்த சில சம்பவங்கள், அதையொட்டி வெளியான செய்திகள் சிலவற்றை பாருங்கள்.

வால்பாறை வனச் சரகத்திற்குள்ளடங்கியது கருமலை எஸ்டேட். இங்கு 2016 டிசம்பர் மாதம் முதல் இரண்டு வார காலம் பெண் காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியும், வாழைமரங்களை சேதப்படுத்தியும் வந்தது. அதன் உச்சகட்டமாக இங்குள்ள முதியவர் ஒருவரை அந்த காட்டு யானை மிதித்து கொன்றது. வனத்துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும், அந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்ட வேண்டியும் இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் டாப் ஸ்லிப்பிலிருந்து கலீம், மாரியப்பன், பரணி ஆகிய மூன்று கும்கி யானைகளை கொண்டுவந்து அந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கும்கி யானைகளை கண்டதும் கருமலை எஸ்டேட் பகுதியில் நின்றிருந்த அந்த காட்டு யானை வெள்ளமலை எஸ்டேட் பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டப் பகுதியில் போய் நின்று கொண்டது.

ஆனால் கால்நடை மருத்துவர், உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகர்கள், மற்றும் ஓய்வு பெற்ற வனச்சரகர்கள் மூவர் முப்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த காட்டு யானையை காஞ்சமலை எஸ்டேட் வழியாக சிங்கோனா வனப்பகுதியை நோக்கி விரட்டி கொண்டு சென்றனர். ஆனால் ஆனால் அந்த காட்டு யானை கும்கி யானைகளுக்கே போக்கு காட்டிவிட்டு, வேறு வழியில் பச்சைமலை எஸ்டேட்டிற்கும் நடுமலை எஸ்டேட்டிற்கும் இடைப்பட்ட சிறு வனச் சோலைக்குள் போய் நின்று கொண்டது.

என்றாலும் மூன்று கும்கி யானைகளும் விடாமல் வனச்சோலைக்குள் சென்று அந்த காட்டு யானையை கண்டுபிடித்து விரட்ட ஆரம்பித்தது. இந்த விரட்டலில். வெள்ளமலை ஆற்று பகுதிக்கு வந்த காட்டு யானை அங்கே ஆற்றிலேயே சற்று நேரம் விளையாடியது. வனத்துறையினர் யானையை காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அந்த காட்டுயானை வெள்ளமலை ஆற்றிலேயே இறங்கி நீந்தி, நடுமலை எஸ்டேட்டின் தெற்கு பிரிவு தேயிலைத் தோட்ட பகுதிக்குள் போய் நின்று கொண்டது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x