Published : 16 Jan 2018 04:41 PM
Last Updated : 16 Jan 2018 04:41 PM
விடியல் பதிப்பக வெளியீடாக வந்த 'அம்பேத்கர் இன்றும் என்றும்' நூல் விற்பனைக்கு வைத்த வேகத்திலேயே இந்த புத்தகக் காட்சியில் விற்றுத் தீர்ந்துள்ளன.
புத்தகக் காட்சித் தொடங்கி ஆறு நாட்களுக்குள் இந்த விற்பனை. சென்னை புத்தகக் காட்சி 2018-ல் மட்டுமல்ல இதுவரை நிகழ்ந்த புத்தகக் காட்சிகளிலேயே நிகழாத ஒன்று இந்த சாதனை!
இந்த வெற்றிக்குப் பின்னால் நீண்ட கால வரலாறு, உழைப்பு இருக்கிறது. 80களின் இறுதிகளில் தொடங்கப்பட்ட இப்பதிப்பகம் சிறுசிறு வெளியிடுகளாகத்தான் ஆரம்பித்தது. 90களிலேயே மாறிவரும் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் அறிவுக் கருவூலங்களை கொண்டுவந்து தமிழில் சேர்த்தது இப்பதிப்பகம்.
ஆரம்பத்தில் காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஃபிடல் காஸ்ட்ரோ, பாப்லோ நெரூதா போன்ற மாபெரும் ஆளுமைகளின் படைப்புகளை எளிய தமிழில் தரத் தொடங்கினர்.
95-ல் வெளியான 'கண்காணிப்பின் அரசியல்' என்ற புத்தகம் தீவிர வாசிப்பில் நவீன காலத்தின் புரிதல்களை ஏற்படுத்தியது. இதன் பின்னர் 2006-ல் வெளிவந்த "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ஜான் பெர்க்கின்ஸ் அமெரிக்காவுக்காக அடியாளாக செயல்பட்டு உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றை நிறுவும் வேலைகளை செய்யும் பணிகளை வெளிப்படையாகப் பேசியது. இதற்காக என்னென்ன உத்திகளையெல்லாம் கையாள நேர்ந்தது என அடியாளாக செயல்பட்ட ஜான் பெர்க்கின்ஸ் கூறும் வாக்குமூலமாக இந்நூல் விரிகிறது.
கோவை பீளமேடு மசக்காளிபாளையம் சாலை , 61 ஏ பாலன் நகர் முகவரியிலிருந்து செயல்படும் விடியல் பதிப்பகம், சென்னை புத்தகக் காட்சி 2018-ல் கடை எண் 370-ல் விற்பனை அங்காடி வைத்துள்ளனர்.
காரல் மார்க்ஸ் எளிய அறிமுகம்
சென்ற ஆண்டும் பெரியார் இன்றும் என்றும் நூலும் வைத்த சில நாட்களிலேயே பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இந்த ஆண்டு வாசகர்களின் தேவை கருதி 500 ரூபாய்க்கான புத்தகம் ரூ.400க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டது. அதேபோல ரியுஸ் என்பவர் எழுதிய காரல் மார்க்ஸ் எளிய அறிமுகம் என்ற நூல் கார்டூன் மற்றும் சிறு விளக்கங்களால் நிறைந்த இப்புத்தகம் விலை ரூ.200 விலையுள்ள இப்புத்தகம் ரூ.125க்கு கிடைக்கிறது.
பட்டினிப் புரட்சி
இது தவிர, சுற்றுச்சூழல் மனிதர்களின் சுயநலப் போக்கால் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் கோரமுகத்தைக் கூறும் 'பட்டினிப் புரட்சி' எனும் நூல் வெளிவந்துள்ளது.
பூமியை மனிதன் 75 சதவீதம் நுகர்ந்துவிட்ட செய்தியைத் தெரிவிக்கும் படம் அட்டையில் இடம்பெற்றுள்ளது புத்தகத்தைக் கையில் எடுக்கும்போதே நம்முள் சலனத்தை ஏற்படுத்துகிறது. இந்த தலைமுறையே பூமியின் கனிகளை சுவைக்கும் கடைசித் தலைமுறை என்கிறது இந்நூல்.
அடுத்த தலைமுறையில் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் எல்லாமும் மாசடைந்து விஷமாகிப்போகும் காரணத்தால் நுகர எதுவும் இல்லாமல் போகும் அபாயத்தை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவில் தனது பிஎச்டி ஆய்வை முடித்து அங்கேயே ஐடி நிறுவனத்தை நடத்திய ராமகிருஷ்ணன் என்பவர் 'பரிதி' என்ற தனது புனைபெயரில் எழுதியுள்ளார். அமெரிக்காவிலிருந்து வந்த கையோடு சத்தியமங்கலம் அருகே 25 ஏக்கரில் மாசற்ற இயற்கைச்சூழலை உருவாக்கி பேணிவருகிறார்.
அதில் விவசாயம் ஏதுமில்லை. அங்கு இயற்கையாக வளர வாய்ப்புள்ள மரம், செடிகொடிகளுக்கே முதலிடம். 'பட்டினிப் புரட்சி' நூலை தானே டைப்செட் செய்து வடிவமைத்து விடியல் பதிப்பகத்திடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்நூலில் கிடைக்கும் ராயல்டியை மறுத்துள்ளார்.
அம்பேத்கர் இன்றும் என்றும்
அம்பேத்கர் இன்றும் என்றும் நூல் ரூ.300க்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. புத்தகக் காட்சியில் ரூ.200க்கு விற்பனைக்கு வைத்திருந்தனர். தற்சமயம் அனைத்துப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துள்ளன. மெகா சைஸில் வெளிவந்துள்ள இப்புத்தக தயாரிப்பின் செலவைக் கணக்கிட்டால் நிச்சயம் இவ்விலை அவர்களுக்கு கட்டுபடியாகாது. எனினும் வாசகர்களை இந்நூல் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் இந்த விலையை வைத்துள்ளதை அறிய முடிகிறது.
மஹாராஷ்டிரா அரசு அம்பேத்கர் நூல்களின் அனைத்து தொகுதிகளையும் மலிவு விலையில் வெளியிட்டது. அவை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்தான் அம்பேத்கர் இன்றும் என்றும் நூலில் இடம்பெற்றுள்ளன.
விடியல் பதிப்பக வெளியீடுகளாக இதுவரை 129 நூல்கள் வெளிவந்துள்ளன. விடியல் பதிப்பகத்தை நிறுவிய சிவா தற்போது உயிருடன் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்ததால் ஈழப் பெண் போராளிகளின் கவிதைகளை தொடர்ந்து சிறு சிறு நூற்களாக தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 2012-ல் எதிர்பாராத நோய்த்தாக்குதலில் உயிரிழந்தார்.
பின்னர் மார்க்சியப் புள்ளியில் ஒருங்கிணைந்து செயல்படும் ஆர்வம் மிக்கவர்களாக ராஜாராமன், சௌந்தரம், விஜயகுமார், கண்ணன் போன்றவர்கள் விடியல் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT