Published : 10 Jan 2018 09:39 AM
Last Updated : 10 Jan 2018 09:39 AM
‘சி
த்துண்ணி சித்துண்ணி செத்தாயா?, நான் ஏன் சாவுரேன் ராஜகுமாரா!' என சின்ன பறவை சித்துண்ணி பற்றிய கதையை ஜெயராமன் விவரிக்க, அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகள் கண்கள் விரிய, வாய் பிளந்து, காதுகளை கூர்மையாக்கி கேட்கின்றனர். கேட்ட அனைவரையும் தன் கதைக்குள் இழுத்துவிடும் வசீகரக்காரர்தான் இந்த கதை சொல்லி ஜெயராமன்.
நாட்டார் இலக்கிய பாடல் மற்றும் கதைகளை கிராமிய மணம் மணக்க, பள்ளி குழந்தைகளிடம் பதிய வைக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். திருச்சி அருகே லால்குடியைச் சேர்ந்தவர்தான் ஜெயராமன். ஆசிரியர். குழந்தைகளோடு இருக்க விரும்பி, சுங்கவரித்துறை பணியைத் துறந்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர்.
கல்வியறிவு இல்லாத தாத்தா, பாட்டி சொல்லும் கதைகளில் குழந்தைகள் சொக்கிப் போவார்கள். 'தாத்தா' என உரக்க கத்தும் குழந்தை, கதை கேட்கும் நேரம் வரும்போது 'ஒரு கதை சொல்லு தாத்தா' என கொஞ்சும் குரலில் கெஞ்சும். எந்த ஒரு ஆசிரியரும் கற்றுத்தராத ரகசியங்களை குழந்தைகள் இவர்களிடம் இருந்து கற்கின்றனர்.
கதை சொல்லிகளிடம் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் குழந்தைகள். ஒரே கதையை பல ஆண்டுகளாக கேட்டாலும் சலிப்பு ஏற்படாது. வெள்ளந்தியாக வெளிப்படும் கதையில் ஒன்றிப்போகும் குழந்தைகள் கதைக்கு ஏற்ப 'ம்', 'அப்புறம்', 'கூஉம்', என ஏற்ற இறக்கங்களை பதிலாகத் தருவர். அவர்கள் கதைக்குள் ஒன்றிவிட்டதற்கான சமிஞ்சை அவை.
கதைகளைப் பற்றிய கலந்துரையாடலில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையும் வெளிப்படும். கதையின் நீதியை விட குழந்தைகளின் புரிதல் சிந்தனையும் கற்பனை திறனும் வளரும்.
இப்போதெல்லாம் கூட்டு குடும்பமும், தாத்தா பாட்டியும் இருப்பது அரிது. பள்ளிகளில் 'ஸ்டோரி டெல்லர் என்பது ஸ்டோரி ரீடிங்' ஆகிவிட்டது. கதை கேட்கும் ஒரு குழந்தை அதன் ஓட்டத்துக்கு தகுந்தாற் போல் முக பாவனைகளை வெளிப்படுத்தும். குழந்தைக்கு தேவையான உளவியல் பயிற்சி கதைக்குள் இருக்கும்.
இதையெல்லாம் ஒரு கதை போல் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கதை சொல்லி ஜெயராமன், குழந்தைகளுக்கு கதை சொல்லுவது குறித்து கூறும்போது, ‘சிறுவயதில் என் தாத்தா ஒரு பாடல் பாடுவார் அது,
'கத்தரிக்கா கூடை ஒன்னு கொண்டா நீ',
'காசுக்கு ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு, அஞ்சு, ஆறு',
என ராகத்துடன் பாடுவார். இதில் கணித எண்களை புரிய வைத்திருப்பார்.
நான் எப்போதும் ராஜா வேடம் அணிந்து சென்றுதான் கதை சொல்லுவேன். என் முன்னே அமர்ந்திருக்கும் எல்லா குழந்தையும் கதை ஓட்டத்தில் பங்கேற்கும். 'சிங்கம், நரி கதை என்றால், ஒரு காட்ல சிங்கம் இருந்துச்சாம்', அப்படின்னு ஆரம்பிக்க மாட்டேன். 'ஒரு காடு இருந்துச்சாம்' அப்படின்னு தொடங்குவேன், அப்புறம் காட்ல என்னனென்ன இருக்கும், என குழந்தைகளிடம் கேட்பேன்.
அவர்கள் மரம், செடி, விலங்கு என காடு குறித்து கூறுவார்கள். இப்படி கதை சொல்லும் போது குழந்தைகளிடம் இருந்து அளப்பரிய ஆற்றல் வெளிப்படும். கதை கேட்கும்போது குழந்தைகள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதும், உள்வாங்குவதும் கனகச்சிதமாக நடக்கும்.
அதேபோல் நாட்டார் இலக்கியத்தில் பிரபலமான சித்துண்ணி கதையில் வரும் சின்ன சித்துண்ணி பறவை என்று ஒன்று இல்லை. குழந்தைகளை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட புனைவு கதையே. இக்கதையில் பலம் பொருந்திய ராஜகுமாரனை சித்துண்ணி பறவை வம்பிழுக்கும். எளிய பறவையை சாகடிக்க முடியாமல் ராஜா தோற்று திரும்புவார். 'எளியாரை வலியோர் எள்ளி நகையாட கூடாது' என்பதே இக்கதையின் நீதி. அதுமட்டுமின்றி சின்ன சித்துண்ணி பறவையாக கதை கேட்கும் குழந்தைகளும் மாறிவிடுவர்.
கதை சொல்வது அற்புதமான கலை. அதை அனைவரும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதன்பேரிலேயே நான் எனது பள்ளியில் பயிலும் குழந்தைகள் பலரை கதை சொல்லிகளை உருவாக்கியுள்ளேன். அவர்கள் சொல்லும் கதைகளில் நான் என்னையே மறந்துவிடுவேன். ஒரு கதைக்குள் மொழி ஆளுமை, சொல், பொருள் உணர்ந்து பேசுதல் எல்லாமே அடங்கியிருக்கும். அதனாலே இன்றைக்கும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.
வகுப்பறையில் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததை குழு கற்றல் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முதல் பரிசு பெற்றேன்.
ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு கற்றுக் கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுக்க வேண்டும். பெரிய விசயத்தை ஒரு குழந்தைக்கு நேரடியாக சொன்னால் புரியாது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று கதை சொல்லும் நிகழ்வு நடக்கிறது. இதில் கடந்த 15 வருடமாக பங்கேற்று குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன் என்றவர் அனைத்து பள்ளியிலும் கதை சொல்லிகளை நியமிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT