Last Updated : 16 Jan, 2018 04:53 PM

 

Published : 16 Jan 2018 04:53 PM
Last Updated : 16 Jan 2018 04:53 PM

புத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா? - நிலா காமிக்ஸ்

புத்தகக் காட்சியின் பாதைகளில் நடந்துசெல்லும்போது நம்மை ஈர்க்கின்றன அந்த கிராபிக்ஸ் அமேனிமேஷன் மோஷன் சித்திரங்கள்... மாட மாளிகைகள், அரண்மனைகள் லேசர் கிராபிக்ஸ்ஸில் மிளிர்கின்றன... ஒரு வாலிபன் வாளை ஏந்தி வருகிறான்... எதிரிகளை பந்தாடுகிறான்... நாயகி காத்திருக்கிறாள்... அங்கே நாயகன் வருகிறான்..

இப்படியான காட்சிகள் திரையில் ஓட அதற்கு அருகே சிறு மேசையில் சில புத்தகங்கள்... அவர்களை அணுகி ''ஹலோ என்ன நடக்குது இங்கே'' என்று கேட்டோம்...

''சார் இது பொன்னியின் செல்வன் அனிமேஷன் புக்ஸ் கடை'' என்றனர்...

நவீன தொழில்நுட்பத்திலான அவர்களது முயற்சிகளை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கினோம்.

இந்த மாதிரியான முயற்சிகளுக்கு நிறைய செலவு பிடிக்குமே, எப்படி இந்த எண்ணம் வந்தது?

இப்போ இருக்கும் குழந்தைகள் டார்ஜான், சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் என வெளிநாட்டு சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களையே விரும்புகின்றனர். அதற்குக் காரணம் நம்முடைய காவியப் படைப்புகளின் நாயகர்களை இன்று குழந்தைகள் விரும்பும் தொழில்நுட்பத்தில் நாம் சரியாக இதுவரை தரவில்லை.

நாம் ஏன் நம்முடைய நம்ம ஊர் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்கக்கூடாது என்ற எண்ணமே எங்களை இப்பணியில் ஈடுபட வைத்தது.

இப்பணி எப்போது தொடங்கப்பட்டது?

பொன்னியின் செல்வன் கதையை 2டி அனிமேஷன் படமாக வெளியிடுவதற்கு 4 வருடங்களுக்கு முன்பேயே தொடங்கிவிட்டோம். அதற்கு பெரிய பொருட்செலவு ஆகும் என்பது தெரிந்தது. அதனால் அந்த வேலை ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே சரி முதலில் அதை முதலில் அனிமேஷன் புத்தகமாக குழந்தைகளிடம் கொண்டுசெல்லலாம் என்று இந்த முயற்சியில் இறங்கினோம்.

2டி அனிமேஷன் படமாக பொன்னியின் செல்வனை வெளியிடுவதற்கான பொருட்செலவுக்குத்தான் இந்த முயற்சியா?

அப்படி சொல்லமுடியாது. நீங்கள் நினைப்பதுபோல இதுஒரு சாதாரண புத்தகமாக இருந்தால் அனிமேஷன் திரைப்பட முயற்சிக்கான பொருட்செலவை இதிலிருந்து எடுப்பது குறித்து யோசிக்கலாம். ஆனால் இந்தப் புத்தகங்கள் புத்தகம் உலகத் தரத்திற்கேற்ப கொண்டுவந்துள்ளோம்.

உலகத் தரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?

இந்தப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட விதத்தைத்தான் சொல்கிறேன். பக்கத்துக்குப் பக்கம் கிளாஸி பேப்பரில் அச்சடித்துள்ளோம். இப்புத்தகத்திற்கான அட்டையைப் பாருங்கள். பின்னணியிலிருந்து கதைமாந்தர்கள் தனியே எடுத்துக்காட்டும்விதமாக அமைந்துள்ளன. இதற்கு மேட் பினிஷிங் செய்யப்பட்டு யுவி கோட் அச்சடிக்கப்பட்ட அட்டையில் கதைமாந்தர்களின் இமேஜ் தனியே வெளிப்படும்விதமாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். இந்தப் புத்தகத் தயாரிப்புகளைப் பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கேற்ப பலன் கிடைத்தாலே போதும்.

இப்புத்தகத்திற்கான தயாரிப்புப் பணியில் எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர்?

எங்கள் பப்ளிஷர் சரவணராஜா பொன்னுசாமி, இதற்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். நான் விற்பனைப் பிரிவில் டிஜிஎம்மாக பணியாற்றி வருகிறேன். கிரியேட்டிவ் ஹெட் மற்றும் டெவலப்மென்ட் பொறுப்பில் ஓவியர் மு.கார்த்திகேயன் தலைமையில் ஒரு பெரிய குழு இயங்கி வருகிறது.

வண்ணங்கள், எழுத்து வடிவங்கள் ஒழுங்கமைப்பு, மொழியாள்கை என பல பிரிவுகளில் 20 பேர் வேலை செய்கிறார்கள். இது தவிர 15 பேர் இப்புத்தகத்தை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக விற்பனைப் பிரதிநிதிகளாக பணியாற்றி வருகின்னர். எங்கள் புத்தகங்கள் தமிழகம் முழுவதும் அநேகக் கடைகளில் கிடைக்கின்றன.

பொன்னியின் செல்வன் 5 பாகங்களைக்கொண்ட பிரமாண்ட படைப்பு... சிறுசிறு புத்தகங்களாக பிரித்து வெளியிடும் முறையை சொல்ல முடியுமா?பொன்னியின் செல்வன் 5 வால்யூம்கள். ஒவ்வொரு வால்யூகளிலும் 25 புத்தகங்கள் ஆவது வெளிவரும்.

அப்படியெனில் 125 புத்தகங்கள் தயாராகிவிட்டனவா?

இல்லை இல்லை... முதல் வால்யூம் மட்டும் தயாரான நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் 2 புத்தகம் வீதம் வெளியீடு செய்து வருகிறோம். தற்சமயம் முதல் பாகத்தில் 4 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

என்னென்ன மொழிகளில்?

தற்சமயம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகம் தயாராகி வருகிறது. வரவேற்புக்கு ஏற்ப மற்ற மொழிகளிலும் இந்த முயற்சி விரிவடையும்.

சரவணராஜா பொன்னுசாமியின் இந்த புத்தக முயற்சி துணிச்சலானது, வணிக நோக்கம் என்றுமட்டுமே சொல்லிவிடமுடியாது. தமிழ் இலக்கியங்களிலிருந்து சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி அதை குழந்தைகள் மனதில் பதியவைக்க வித்தியாசமாக யோசித்திருக்கிறார் என்பதால் அது பாராட்டக்கூடியதுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x