Published : 03 Jan 2018 09:51 AM
Last Updated : 03 Jan 2018 09:51 AM
பு
சுபுசுவென்ற ரோமத்துடன், கம்பீர உடல்வாகு கொண்ட வெளிநாட்டு நாய்கள் பெரும்பாலும் பணக்கார வீடுகளின் படுக்கை வரை உலா வரும். அதேபோல பாசம் காட்டி வளர்த்தாலும், நாட்டு நாய்களுக்கு பெரும்பாலும் இந்த மரியாதை கிடைப்பதில்லை. கழுத்தில் சங்கிலி, வாசல் வராண்டாவில் தட்டு சோறு என்ற அளவுக்குதான் அவற்றின் நன்றி விசுவாசம் மதிக்கப்படும்.
இதில் சற்றே வித்தியாசம், மதுரை தபால் தந்தி நகர் கலைநகரைச் சேர்ந்த ராமசாமி (58) - லட்சுமி (55) தம்பதி. வளர்க்க முடியாமல் விடப்படும் நாய்கள், வாகனங்களில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள் என ஆதரவின்றி இருக்கும் நாய்களை மீட்டு, அடைக்கலம் தந்து பராமரிக்கின்றனர். கடந்த 2003 முதல் இப்பணியை செய்து வருகின்றனர். பொமரேனியன்(பப்பி), பக், டாபர் மேன், நாட்டு நாய்கள் என மொத்தம் 35 நாய்கள் படுக்கை அறை, சமையல் அறை என இவர்களது வீடு முழுவதும் சுதந்திரமாக வளையவருகின்றன.
ஒரே மகன் அமெரிக்காவில் இருப்பதால், தம்பதியருக்கு இந்த முப்பந்தைந்தும்தான் பிள்ளைகள். அதுகள் செய்யும் சேட்டைகளை பார்த்துப் பார்த்து ரசிக்கின்றனர். செல்லமாக கடிந்துகொள்கின்றனர். நேசத்தோடு கட்டியணைத்துக் கொள்கின்றனர். இவர்களது வீட்டில் குழந்தைகள் போல ஒவ்வொரு நாய்க்கும் ஒரு பெயர். அந்தப் பெயரைச் சொல்லியே பாசத்தோடு அழைக்கின்றனர். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள், அக்கம்பக்கத்தினர் யாராவது பேச்சுவாக்கில் ‘நாய்’ என்று சொல்லிவிட்டால், தம்பதியரின் முகம் வாடிவிடுகிறது.
‘‘ஜீவராசிகளிடம் காட்டும் பரிவு, சாமி கும்பிடுவதற்கு சமம் என்பார்கள். இந்த ஜீவராசிகளை வளர்க்கிறதால மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இதுங்க குட்டி போடும்போது, சிலர் ஆசையா கேப்பாங்க. கொடுப்போம். எங்கயாச்சும் வெளியே போயிட்டு வந்தா, பாசத்தோடு பாய்ஞ்சு, மேல வந்து விழும். சில நேரம், அதன் நக கீறல்கள் மேல படும். அதனால, தடுப்பூசி போட்டுக் கொள்வோம். பராமரிப்பு செலவு ஒரு நாளுக்கு ரூ.1,000 ஆகுது. முன்னெல்லாம் எங்ககூட பெட்ல படுத்துக்க போட்டி போடும். ஒவ்வொண்ணா சேரச் சேர, பெட்ல இடம் பத்துறதில்ல. இப்பல்லாம், நாங்க கீழப் படுத்துக்குவோம். அவங்களுக்குதான் பெட்’’ என்று ராமசாமி கூறும் நேரத்தில், எங்கிருந்தோ ஓடிவந்த குட்டி ஒன்று ஜிவ்வென்று அவரது மடியில் பாய்ந்து, முகத்தை நக்கிவிட்டு, ஓடி மறைந்தது.
‘‘எங்களை நம்பி இருக்கிற இந்த ஜீவன்களை விட்டுட்டு வெளியே போக மனசே வராது. 10 வருஷமா வெளியூர் போனதில்லை. சொந்தக்காரங்க வீட்டு விஷேசத்துக்குகூட ரெண்டு பேரும் சேர்ந்து போறதில்லை. ‘எங்களைவிட அதுக முக்கியமா?’னு உறவுக்காரங்களோட ஏச்சு, பேச்சுக்கு ஆளாகியிருக்கோம். அவங்களுக்காக, இந்தக் குழந்தைகளை விட்டுக் கொடுக்க முடியுமா..’ என்று நெகிழ்கிறார் லட்சுமி.
தம்பதியரின் நாய்ப் பாசம் பற்றி அறிந்த கால்நடை மருத்துவர் மெரில்ராஜ், இவர்களது வீட்டுக்கே வந்து கட்டணம் வாங்காமல் வைத்தியம் பார்க்கிறார். கூட்டமாக நாய்களை வளர்க்க அக்கம்பக்கத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். அதனால், நாய்களை பராமரிக்க வசதியாக விஸ்தாரமாக சொந்த வீடு வாங்கியிருக்கிறார் ராமசாமி. விரைவில் தங்களது செல்லப் ‘பிள்ளை’களோடு புதுமனை புகுவிழா காணப்போகும் சந்தோஷத் தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT