Published : 09 Jan 2018 09:07 AM
Last Updated : 09 Jan 2018 09:07 AM
ந
ம்முடைய தேசிய அரசியலில் தலித்துகளுக்கான அத்தியாயம் உருவாகிறதா? சமூக-அரசியல் ரீதியாக தலித்துகள் தங்களை நிலைநிறுத்தும் முயற்சியா அல்லது தேர்தல் பருவங்களில் அரசியலை சிதறவைக்கத் தங்களாலும் முடியும் என்று ஆற்றலைக் காட்டும் உத்தியா? அப்படியிருந்தால் 2019 மக்களவை பொதுத் தேர்தல் வரையில் இந்த எழுச்சிக்குக் காரணமானவர்களிடம் ஆற்றல் தொடருமா அல்லது அதற்குள் செலவழிக்கப்பட்டு தீர்ந்துவிடுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வேறு சில கேள்விகள் மூலம் விடை தேடலாம். தலித் அரசியலின் முகமாக ஜிக்னேஷ் மேவானி உருவாகியிருக்கிறாரா? அரசியல் அகராதிப்படி அவர் இன்னொரு கான்ஷிராமா, மகேந்திர சிங் திகைத்தா அல்லது கர்னல் கிரோரி சிங் பைன்சலாவா?
இந்திய அரசியல் களத்தில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 16.6%. அதனால்தான் முஸ்லிம்களைவிட வலுவான சமுதாயமாகத் திகழ்கிறார்கள். .
ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு முஸ்லிம்கள் கூட்டாக வாக்களிப்பதைப் போல, தலித்துகள் வாக்களிப்பதில்லை. இதனால்தான் பாஜகவால் வளர முடிந்தது. உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களில் தலித் வாக்குகள் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்குச் சென்றது. அது பாஜகவுக்கு சாதகமானது.
நாட்டிலேயே பஞ்சாபில்தான் தலித்துகள் வாக்கு வங்கி அதிகம் (32%) இதில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். தலித்துகளின் வாக்குகள் அனைத்தும் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஒரே கட்சிக்குக் கிடைத்தால் அந்தக் கட்சி ஆளும் கட்சியாகிவிடுகிறது.
மாநில எல்லைகளைக் கடந்த கவர்ச்சி மிக்க தலைவர் தலித்துகளுக்கு தேவை; 1970-களின் மத்திய காலம் வரை பாபு ஜகஜீவன் ராம், காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகையில் உதவிகரமாக இருந்தார். மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே தலித் தான். ஆனால் அவரிடம் கவர்ச்சி இல்லை.
அதைவிட மோசமான நிலையில் பாஜக இருக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்ணியமானவர், தலித், ஆனால் தலைவர் அல்ல. அவர் ஒரு அடையாள இருப்பு.
சிறுபான்மை சமூகத்தவர், பழங்குடிகள், தலித்துகள் முக்கியமான துறைகளில் அமைச்சர்களாகவோ, மாநில முதலமைச்சர்களாகவோ இப்போது இல்லை. இதுதான் ஜிக்னேஷ் மேவானி மேலே வருவதற்கான வாய்ப்பு. பீமா-கோரேகான் சம்பவம் சமீபத்திய உதாரணம்.
உனா என்ற இடத்தில் தலித்துகள் தாக்கப்பட்டதையடுத்து மேவானி கிளர்ந்தெழுந்தார். தொடக்கத்தில் அவரை குஜராத்துக்கு மட்டுமான உள்ளூர் தலைவராகவே பார்த்தனர். தேர்தலில் போட்டியிடுவது, மிகப் பெரிய தேசியக் கட்சியின் ஆதரவில் நிற்பது என்று அவர் முடிவெடுத்தவுடன் நிலைமை மாறிவிட்டது. குஜராத் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தாலும் அவருடைய அரசியல் வீச்சு அதையும் தாண்டிவிட்டது.
மேவானிக்கு பல அம்சங்கள் சாதகமாக இருக்கிறது. பாஜக மட்டுமே எதிர்க்கப்பட வேண்டிய ஒரே இலக்கு என்பதில் தெளிவாக இருக்கிறார். தலித்துகளிலேயே மிகப் பெரிய சாதிப் பிரிவைச் சேர்ந்தவர். பஞ்சாபிலிருந்து வந்த கான்ஷிராம் மிகப் பெரிய தேசியத் தலைவராக உருவானார் என்பதால் மேவானிக்கும் அதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. சண்டிகருக்கு அருகில் உள்ள ரூப்நகரைச் சேர்ந்தவர் கான்ஷிராம். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை சமூகத்தவருக்கான தேசிய ஊழியர் சங்கத்தை நிறுவியவர்.
1980-களின் பிற்பகுதி அது. சீக்கிய பிரிவினைவாதிகளை அவர் தனது மேடைகளில் ஏற்றினார். செல்வாக்கு வளர்ந்த பிறகு தீவிரவாதத் தலைவர்களை கான்ஷிராம் உதறித்தள்ளினார். இந்தி பேசும் மாநிலங்களில் செல்வாக்கு பெறாமல் தேசியத் தலைவராக முடியாது. இதை கான்ஷிராம் 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உணர்ந்துவிட்டார்.
அமிதாப் பச்சன் 1988-ல் அலாகாபாத் மக்களவை தொகுதியில் ராஜிநாமா செய்ததால் இடைத் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சிகளின் ஆதரவில் வி.பி. சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் சுநீல் சாஸ்திரி போட்டியிட்டார். வி.பி. சிங் வெற்றி பெற்றார். ஆனால் கான்ஷிராம் 65,000 வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்தார்.
தலித்துகளை மட்டுமல்லாது பிற வெகுஜன மக்களையும் ஈர்க்கும் வகையில் தன்னுடைய கட்சியை ‘பகுஜன் சமாஜ்’ என்று அடையாளப்படுத்தினார். மாயாவதியை அரசியல் வாரிசாக உருவாக்கினார். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் தலித்துகளின் வாக்குகள் மட்டும் போதாது என்று முஸ்லிம்களையும் மேல் சாதிக்காரர்களையும் அரவணைத்தார்.
கான்ஷிராம் நினைத்ததை நிறைவேற்றும் ஒற்றைச் சிந்தனையைக் கொண்டவர். மாயாவதி என்ற சந்திரகுப்தருக்கு அவர் கௌடில்யராகத் திகழ்ந்தார். மேவானியிடம் இதே திறமைகளும், ஒற்றைச் சிந்தனையும் இருக்கிறதா? இப்போதே கூறிவிட முடியாது. ஆனால் அவருடைய அரசியல் எழுச்சி பாஜகவுக்கும் இந்து பழமைவாதிகளுக்கும் பெருத்த கவலையைத் தருகிறது என்பது மட்டும் நிச்சயம்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT