Published : 09 Jan 2018 10:21 PM
Last Updated : 09 Jan 2018 10:21 PM
குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பேரிக்காய் மரங்கள் 15 ஆயிரத்திற்கும் மேல் இருந்தன. அவற்றில் ஜூன் முதல் செப்டம்பர் வரை மரத்துக்கு சுமார் 100 கிலோ பேரிக்காய்கள் கிடைக்கும். அவற்றை விவசாயிகள் அறுவடை செய்யும் முன்னரே கரடிகள் சாப்பிட்டு விடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒரு கரடி ஒரு நாளைக்கு 100 கிலோ பேரிக்காய்களை கூட சாப்பிட்டு துவம்சம் செய்து விடுகிறது. இவை தவிர குரங்குகளும், காட்டு மாடுகளும் கூட பேரிக்காய்களை ஒரு வழியாக்கி விடுகிறது. இதனாலேயே பேரிக்காய் விவசாயத்தை பெருமளவு கைவிட்டு விட்டதுதான் விவசாயிகளின் வேதனை. இதனால் கூடலூர், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தற்போது 3 ஆயிரம் பேரிக்காய் மரங்கள் இருந்தாலே அதிகம் என்கிறார்கள்.
''கரடிகள் பெருக்கத்திற்கும், அவை ஊருக்குள் நடமாடுவதற்கும் காடுகள் அழிப்பு, கரடிகளுக்கான உணவு அங்கே கிடைக்காதது மட்டும் காரணமல்ல. நீலகிரி சுற்றுவட்டார கிராமங்களில் பழச்சாறு ஊறல் போடுவதும், அதில் கிடைக்கும் சாராயமும் ஒரு காரணம். இன்றைக்கும் உள்ளூர் ஊறல் போடும் சாராயத்தை திருவிழாக்களில் பயன்படுத்தும் வழக்கம் நீலகிரி கிராமங்களில் உள்ளது. அப்படி போடப்படும் ஊறல்களை யானைகளும், கரடிகளும் அவ்வப்போது தோண்டி எடுத்து குடித்து விடுகின்றன. அதில் பழக்கப்பட்டுத்தான் அவை கிராமங்களுக்குள் வந்தால் வெளியேறுவதில்லை!'' என்றொரு விநோத தகவலை தெரிவிக்கிறார் பத்திரிகை மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞரான மதிமாறன்.
அதில் இவருக்கு ஏற்பட்ட இரண்டு நகைச்சுவை ப்ளஸ் அதிர்ச்சி சம்பவங்களைப் பாருங்கள்.
மேற்சொன்ன கொலக்கம்பை கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டு வாசலில் இரண்டு கரடிகள் இறந்து கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதைக் கேட்டு குன்னூரிலிருந்து பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஓடியிருக்கிறார்கள். அங்கே மல்லாக்காக கிடந்த கரடிகளை விதவிதமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துத் தள்ளினர். கதவை அடைத்துக் கிடந்ததால் அவற்றை ஆளாளுக்குப் பிடித்து தள்ளியும் போட்டனர். அதற்குள் வனத்துறையினரும் வந்துவிட்டனர். சிலர் அந்த கரடிகளின் கையைப் பிடித்தும், கட்டிப்பிடித்தும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். சில மணி நேரம். திடீரென்று ஒரு கரடியின் கையில் அசைவு தெரிந்தது. இன்னொரு கரடி கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டது. அதைக் கவனித்த மீடியாக்காரர்களும், பொதுமக்களும் பதறிப் போயினர். கொஞ்ச நேரம்தான் கசமுசப்பு. இரண்டு கரடிகளின் ஒட்டுமொத்த உடலிலும் அசைவு தெரிந்தது. பிறகு தள்ளாடித்தள்ளாடி எழுந்து நிற்க சுற்றிலும் நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துளியும் கண்டு கொள்ளாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து அவை காட்டுக்குள் சென்று மறைய அதை கட்டிப்பிடித்தும், கை குலுக்கியும் போஸ் கொடுத்தவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.
இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து தொட்டபெட்டாவிற்கு கீழே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூனேறி கிராமத்தில் ஒரு 4 வயதுள்ள குட்டி யானை ஒன்று இரவு நேரங்களில் வந்து அழிச்சாட்டியம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தபடி இருந்தனர். ஒருநாள் திடீரென்று அந்த வழியே வந்த சிறிய லாரி ஒன்றில் அந்த குட்டி யானை மோதி விழுந்துவிட்டது.
அதில் அந்த கிராமமே திரண்டு, 'குட்டி யானை மீது நீதான் லாரியை மோதிக் கொன்று விட்டாய்!' என பொதுமக்கள் குற்றம் சுமத்த, லாரி டிரைவர் அதை மறுத்து, 'நான் ரொம்ப மெதுவாகத்தான் வந்த கொண்டிருந்தேன். அந்த யானை வருவதை பார்த்து வண்டியை நிறுத்தினேன். ஆனாலும் அந்த யானை வண்டியின் மீது வந்து மோதி, தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. அப்படியே விழுந்து இறந்தும் விட்டது!' என்றார்.
அதையடுத்து அங்கே வனத்துறையினர் வரவழைக்கப்பட மீடியா ஆட்களும் வந்து விட ஒரே சச்சரவு. வித, விதமாய் புகைப்படம் எடுத்ததோடு, டிரைவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி வம்பு செய்தனர். கடைசியில் லாரி மோதி கிடந்த குட்டி யானை தூக்கி அப்புறப்படுத்தலாம், மருத்துவர்கள் வந்து பிரேதப் பரிசோதனை செய்யட்டும் என்று வனத்துறையினர் தூக்கினர்.
அப்போது அதன் தும்பிக்கையில் அசைவு தெரிந்ததைப் பார்த்து சுற்றிலும் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். யானையைத் தூக்கிய வன ஊழியர்களும் அதை விட்டுவிட்டு சற்று தூரம் போக, அந்தக் குட்டி யானை தள்ளாடித்தள்ளாடி எழுந்தது. ஆட்களை பார்த்து துரத்த ஆரம்பித்துவிட்டது. பிறகு அங்கே ஒரே களேபகரம்தான். அந்த குட்டி யானை வீடுகள், கடைகள், தோட்டங்கள் என்று உள்ளே புகுந்து விளையாட, அதை விரட்டிப் பிடிக்க முதுமலையிலிருந்து கும்கிகள் வரவழைக்கபட்டன.
காலை 7 மணிக்கு லாரியில் மோதி விழுந்த அந்த குட்டி யானை காலை 10 மணிக்கு எழுந்து எல்லோரையும் துரத்த ஆரம்பித்து, மாலை 6 மணி வாக்கில்தான் கும்கிகளுக்கு கட்டுப்பட்டது. அதற்குப் பிறகு அதைப் பிடித்து எப்பநாடு வழியாக முதுமலை தெப்பக்காட்டிற்குள் கொண்டு போய் விட்டனர் வனத்துறையினர்.
''இதில் கரடிகள், குட்டி யானை இரண்டுமே சாராய ஊறலைக் குடித்துவிட்டுத்தான் அப்படி மயங்கிக் கிடந்தன. அது தெரியாமல் நானே அவற்றை நானே பிடித்துத் தூக்கினேன். அதிலும் ஒரு கரடியின் கையைப் பிடித்து புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொண்டேன். ஒரு வேளை அந்த நேரத்தில் அது விழித்தெழுந்திருந்து என்னை பிறாண்டியிருந்தால் என்னவாகியிருக்கும்ன்னு இப்ப நெனச்சாலும் பயமாகத்தான் இருக்கிறது!'' என்கிறார் மதிமாறன்.
இப்பவும் நீலகிரி மலைகிராமங்களில் திருவிழாக் காலங்களில் தேடினால் தடுக்கி விழுந்த இடத்தில் எல்லாம் சாராய ஊறல்களைக் காணலாம். திருவிழாவுக்கு திருவிழா மக்கள் சொந்தமாக தயாரித்த சரக்கை அருந்தாமல் இருப்பதில்லை. இது வனத்துறையினருக்கும், போலீஸாருக்கும் நன்றாகத் தெரியும்தான். அந்த கிராமத்துக் கட்டுப்பாடு, அரசியல் பிரச்சினை காரணமாக கண்டும் காணாமலே இருக்கின்றனர். ஆனால் கரடிகளும், யானைகளும், இதர வனவிலங்குகளால் அப்படியிருக்க முடியுமா? புளித்த வாசம் தெரிந்தாலே ஊருக்குள் வந்து விடுகிறது. ஊறல்களை தேடி எடுத்து மூச்சு முட்ட குடிக்கிறது. அப்படியே போதையில் படுத்தும் விடுகிறது. 'இதை என்னவென்று சொல்ல?' என்கிறார்கள் மதிமாறனை போன்ற கானுயிர் ஆர்வலர்கள்.
கரடிகள் இப்படி ஊறல் போதைக்கு மட்டுமல்ல, மிதமிஞ்சி தேன் குடித்துக் கொண்டும் நிறைந்த மயக்கத்தில் ஆழ்வதுண்டு. அப்படி வரும் கரடிகள் அதிகமாக தேயிலை தோட்டங்களுக்குள்தான் ஊடுருவுகின்றன. அப்படி கரடியால் கடிபட்ட தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை.
அதில் நான்கு முறை கரடி கடித்து பாதிப்புக்குள்ளான ஞானதிலகம் கதை மிகவும் வேதனை மிக்கது. இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. பந்தலூர் வட்டம், கொளப்பள்ளி தேயிலைத் தோட்டத்தில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றுகிறார். இவரது கணவர் ராஜூ. இவரும் தேயிலை காட்டில் நிரந்தர பணியாளர்தான். இருவருமே இலங்கையிலிருந்து (ஸ்ரீமாவே பண்டாரநாயகா ஒப்பந்தப்படி) தாயகம் திரும்பியவர்கள்.
ஞானதிலகம் 2012-ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது பின்புறமிருந்து யாரோ கட்டிப்பிடித்ததை உணர்ந்து பதறிப்போய் அனிச்சையாக உதறியிருக்கிறார். பிடி தளராமல் இருக்கவே பிடித்த கையைப் பற்றி விடுவிக்க முயல, அப்போதுதான் அவருக்கு உண்மை உரைத்திருக்கிறது. தன்னை இறுகப்பிடித்த கரம் கருமுசுன்னு கருமுடிகளுடன் நீளமான நகங்களுடன் கொடூரமாக இருந்துள்ளது.
தன்னை கட்டிப்பிடித்தது கரடி என்று உணர்வதற்குள்ளாகவே அது கழுத்து முகம், என்று கண்டபடி கடித்துக் குதற ஆரம்பித்திருக்கிறது. ஞானதிலகம் சப்தம் எழுப்ப, சுற்றிலும் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கரடியை அடித்து விரட்டினர். ஞானதிலகத்தை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
அதில் வீடு திரும்பிய ஞானதிலகத்தை ஒரு மாதம் கழித்து மீண்டும் கரடி தாக்கியது. அப்போதும் அந்த கரடியை விரட்டி விட்டு ஞானதிலகத்தை காப்பாற்றினர் பொதுமக்கள். இதற்கு பிறகு 2015 ஜூன் 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்த போது 3-வது தடவையாக கரடி ஒன்று ஞானதிலகத்தின் மீது எகிறிப்பாய்ந்தது.
இதில் அவர் படுகாயமுற்ற நிலையில் பொதுமக்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு மாதம் சிகிச்சை. இனி வெளியில் சென்றால் கரடி கடித்து விடும் என்ற பயம் கவ்வ ஞானதிலகம் தோட்டத்து வேலைக்கும் முழுக்குப் போட்டு விட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்தார்.
இந்த சூழலில் 2016 ஜூன் மாதம் 15-ம் தேதி காலை 7 மணிக்கு வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார் ஞானதிலகம். அப்போது நடந்ததுதான் ஆச்சர்யம்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT