Published : 16 Jan 2018 10:46 AM
Last Updated : 16 Jan 2018 10:46 AM
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சேவியர் - விஜியா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய். பிறவியிலேயே கேட்கும், பேசும் திறனற்றவர். 4 வயதில்தான் இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இடிந்து நின்றபோது, சஞ்சய்யின் தங்கையும் பிறந்திருந்தாள்.
கணவரோ லாரி ஓட்டுநர். சொற்ப வருமானத்தில், சஞ்சய்யின் சிகிச்சைக்கான செலவு என சிக்கலில் தவித்தார் விஜியா. இருப்பினும் தாயின் ஊக்கமும் உற்சாகமும் இன்று பல்துறை சாதனையாளராக சஞ்சய்யை மாற்றியிருக்கிறது.
‘ஹியரிங் எய்டு’ பயன்படுத்தும் சஞ்சய்க்கு இப்போதும்கூட 80 சதவீதம் சப்தங்களை கேட்க இயலாது. பேச்சுத்திறன் பயிற்சி பெற்றதாலோ, என்னவோ, பேசுபவர்களின் உதட்டு அசை வைக் கொண்டு தனக்கென பாஷையை உருவாக்கி பதில் அளிக்கிறார். பல்வேறு தடைகள், பல பள்ளிகள் மாறி தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் படிப்பில் படுசுட்டி. தமிழ், கணிதத்தை தன் தனித் திறனால் வென்றவருக்கு ஆங்கிலம்தான் சற்று சிக்கலாக இருந்தது. அதிலும், தாயின் முயற்சிகளால் தேறியிருக்கிறார்.
ஓவியம், அபாகஸ், வில்வித்தை, டிரம்ஸ், யோகாவிலும் முத்திரை பதித்துள்ளார். அபாகஸில் முதல் லெவலில் தங்கப்பதக்கம், 5-வது லெவலில் வெள்ளிப்பதக்கம் என சஞ்சய்யின் பதக்க வேட்டை தொடர்கிறது.
தேவாலயத்தில் டிரம்ஸ் வாசிப்பதை பார்த்து ஆசைப்பட்டு, அடிப்படை வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார் தாய் விஜியா.
இசைக் குறிப்புகளை வைத்து லண்டனில் உள்ள டிரினிட்டி டிரம்ஸ் கல்லூரி சேலத்தில் நடத்திய முதல் கிரேடு தேர்வில், முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். 2-ம் கிரேடிலும் வெற்றி பெற்று, அடுத்த கிரேடுக்கு முன்னேறியுள்ளார்.
வில்வித்தையிலும் கெட்டிக்காரர் சஞ்சய். சமீபத்தில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் தான் சஞ்சயின் அடுத்த இலக்கு.
இதுதவிர யோகாவில் தேசிய அளவில் தேர்வாகியுள்ளார். பல்துறை சாதனையாளரான சஞ்சய்யின் இலக்கு காவல்துறை அதிகாரியாவது. இவரை மாற்றுத்திறன் கடந்த தனித்திறன் சாதனையாளராக்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT