Last Updated : 10 Jan, 2018 05:44 PM

 

Published : 10 Jan 2018 05:44 PM
Last Updated : 10 Jan 2018 05:44 PM

சத்யம் திரையரங்க பாப்கார்னுக்கு வயது 15; அமெரிக்க பாப்கார்ன் சென்னை வந்த கதை!

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு புதிதாக வேலையில் சேர்ந்திருந்தார் பவேஷ் ஷா. அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை, ’உலகிலேயே சிறப்பான பாப்கார்னைக் கண்டுபிடி!' என்பதுதான். கேட்க எளிமையான விஷயமாக இருக்கிறதா?

இணையமும் தொழில்நுட்பமும் உலகையே சுருக்கிவிட்ட இக்காலகட்டத்தில் அப்படித்தான் இருக்கும். ஆனால் அன்றைக்கு அப்படி இல்லை.

இதுகுறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்யம் திரையரங்கின் அனுபவம் மிக்க ஆளுமையான பவேஷ் ஷா.

''அக்காலகட்டத்தில் பட இடைவேளையின்போது விற்கப்படும் சிற்றுண்டிகளில் முழுமையான தரம் இல்லை. ஒன்று எங்களின் சப்ளையர்களை மாற்ற வேண்டும், அல்லது நாங்களே சொந்தமாக சிற்றுண்டிகளை உருவாக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

அப்போது ஹாங்காங்கில் நடைபெற்ற சினிமா மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கே அமெரிக்க விவசாயி ஒருவர் தொழில்முனைவோராக மாறி, பாப்கார்ன் விற்றுக்கொண்டிருந்தார். நெப்ராஸ்காவில் தயாராகி அதிக விளைச்சலைத் தரும் சோள வகை அது.

உடனே நெப்ராஸ்காவுக்குச் (மத்திய மேற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்று) செல்லும் விமானத்தை நோக்கிப் பறந்தோம். அங்கே தரையிறங்கியபோது 18 டிகிரி குளிர் எங்களைத் தாக்கியது. ஆயினும் அவர் விற்ற பாப்கார்னின் தரத்தால் கவரப்பட்ட நாங்கள் முதல் இறக்குமதியைப் பேசி முடித்தோம்.

15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பாப்கார்ன் விதைகள் சத்யம் திரையரங்குக்குக் கொண்டுவரப்பட்டன.

அதிக விளைச்சல்; கூடுதல் ருசி

பாப்கார்ன்களில் அதிக விளைச்சல் தருபவை சுவை கூடுதலாக இருந்தன. குறைவான விளைச்சலைத் தரும் ரகங்கள், அடர்த்தியாக இருந்தாலும் ருசி குறைவாகவே இருந்தன.

பாப்கார்ன் விதைகளை வாங்கியாயிற்று. அதை எப்படி உண்பது? சிகாகோவில் பாப்கார்ன் இயந்திரத்தை வாங்கினோம். பாப்கார்ன்கள் ஒரே ருசியில் இருக்காமல், வெவ்வேறு சுவையில் இருக்க வேண்டுமல்லவா?

சிகாகோவில் படிப்பை முடித்து, அங்கேயே பாப்கார்ன் தயாரித்துக் கொண்டிருந்த கல்லூரிப் பட்டதாரிகள் இருவரை சென்னைக்கே வரவழைத்தோம். பாப்கார்ன் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது.

சில வருடங்களுக்குப் பிறகு, அடிப்படையை மாற்றாமல் உள்ளூர் நிறுவனம் ஒன்றை வைத்து பாப்கார்னைத் தயாரிக்க ஆரம்பித்தோம். ஆனால் நாங்கள் எப்போதெல்லாம் மாற்றத்தைப் புகுத்த விரும்பினோமோ அப்போதெல்லாம் பின்னடைவு ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று புரிந்தது.

விதவிதமான பாப்கார்ன் வகைகள்

எல்லோருக்கும் தனிப்பட்ட வகையில் பாப்கார்ன் செய்முறையில் ஆர்வம் இருக்கிறது. கவுன்ட்டர்களில் மக்களே செஃப்களாக மாறிவிடுகின்றனர். சீசனுக்கு ஏற்ற பாப்கார்ன்கள், அனைத்து சுவையையும் கொண்ட பாப்கார்ன்கள், சுவையற்ற பாப்கார்ன்கள் என ஒவ்வொரு வித பாப்கார்ன்கள் ஒவ்வொரு வித மக்களுக்குப் பிடிக்கின்றன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, எங்களின் 40 சதவீத வாடிக்கையாளர்கள் இன்றும் எந்த சுவையும் இல்லாத, வெண்ணெய் சேர்க்கப்படாத பாப்கார்னையே விரும்புகின்றனர்'' என்கிறார் பவேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x