Published : 13 Dec 2017 10:35 AM
Last Updated : 13 Dec 2017 10:35 AM
ந
ம்ம ஊர் பக்கம் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகள் எப்படியோ அதுபோல மொரீஷியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில், ‘ஸ்போக்கன் தமிழ்’ வகுப்புகள் பிரபலம்!
என்னது.. தமிழர்களுக்கு ‘ஸ்போக்கன் தமிழ்’ வகுப்பா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நானும் இப்படித் தான் குழம்பிப் போய் நின்றேன். மொரீஷியஸ் நாட்டில் செயல்படும் தமிழ் பேசுவோர் ஒன்றியம் மற்றும் இந்திய மொழிகள் ஒன்றியங்களின் தலைவரான முனைவர் ஜீவேந்திரன் சேமென் எனது குழப்பத்தைப் போக்கினார்.
தாய்மொழியில் பேசத் தெரியாது
மொரீஷியஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 12 லட்சம். இதில் தமிழர்கள் மட்டுமே சுமார் 80 ஆயிரம் பேர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது. இவர்கள், மொரீஷியஸ் நாட்டின் கிரியோல் பாஷையையே பிரெஞ்சுக் கலப்புடன் பேசுகிறார்கள். இவர்கள் தங்களது மூதாதையர்கள் பாடிய தேவாரம், திருவாசகத்தை எல்லாம் பக்தி மணக்கப் பாடுவார்கள். ஆனால், அதன் அர்த்தம் தெரியாது. பிற இந்திய மொழிகளின் நிலையும் இதுதான்.
இவர்களுக்கு எல்லாம் மொரீஷியஸில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் தாய்மொழியைக் கற்றுத் தரும் மையமாகச் செயல்படுகிறது. இதன் கீழ் பணியாற்றும் ஜீவேந்திரன் சேமெனும் அவரது குழுவினரும் தான் தமிழர்களுக்கு தமிழ் பேசக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அண்மையில் கோவை வந்திருந்த சேமென், தங்களது தயாரிப்பான ‘ஸ்போக்கன் தமிழ்’ புத்தகங்களை விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோருக்கு வழங்கினார்.
உதவித் தொகையும் உண்டு
அப்போது மொரீஷியஸ் தமிழர்கள் ஸ்போக்கன் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான விதத்தை விவரித்தார் ஜீவேந்திரன் சேமேன், “கி.பி. 1830-களில் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, மொரீஷியஸில் அடிமைகளாக இருந்தவர்கள் தாயகம் திரும்பிவிட்டனர். அந்த சமயத்தில் விவசாய வேலைகளுக்காக ஆங்கிலேயர்கள் தமிழகத்திலிருந்து மொரீஷியஸுக்கு ஆட்களை வரவழைத்தனர். அப்படி வந்தவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்கும் மொரீஷியஸில் இருக்கிறோம்.
மொரீஷியஸில் 12-ம் வகுப்பு வரைக்கும் ஆங்கிலத்துடன் தமிழும் மொழிப்பாடம். இதில்லாமல், தமிழகம் வந்து தமிழ் கற்க விரும்பினால் முழுமையான உதவிக் தொகையும் அரசு வழங்குகிறது. அப்படித்தான் நான்கூட எம்.ஏ., முதுகலை வரை படித்து முனைவர் பட்டமும் பெற்றேன்” என்றார் சேமென்.
கல்வியே கேலிக்கூத்தாகிவிடும்
தொடர்ந்து பேசிய அவர், “மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட்டில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த நான் புலத்தலைவர், இந்திய மொழிகள் துறை தலைவர் பதவிகளிலும் நியமிக்கப்பட்டேன். அப்போதுதான், தமிழில் படிப்பவர்கள் தமிழில் பேசமுடியாமல் தவிப்பதைப் பார்த்தேன். ‘எப்படி இருக்கே?’ன்னு கேட்டா, ‘நல்லா இருக்கேன்’ன்னு கூட அவங்களுக்குச் சொல்லத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தமிழில் வளமாக எழுதத் தெரியும். மொழிப் படிப்புக்காக அரசாங்கம் கோடிகளைச் செலவழிக்கிறது. அப்படியிருந்தும் யாருக்கும் இங்கே தாய்மொழியில் பேசத் தெரியாவிட்டால் கல்வியே கேலிக் கூத்தாகிவிடும் என நான் பல கூட்டங்களில் பேசினேன்.
இதைக் கேள்விப்பட்டு மொரீஷியஸ் முதலமைச்சரே என்னை அழைத்துப் பேசினார். அப்போதுதான், பிற மொழிகளுக்கு இருப்பது போல தமிழுக்கும் ஓர் ஒன்றியத்தை அமைத்து என்னை அதன் தலை வராக்கினார். ஒன்றியத்தின் மூலமாக, தமிழில் தடையின்றி பேசுவதற்கான ‘ஸ்போக்கன் தமிழ்’ பாடங்களை உரிய ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கி, அதை பள்ளிகளிலும் கிராம அளவிலும் கற்பித்து வருகிறோம் .
கிராமங்களில் பாமர மக்களுக்கும் இந்தப் பாடங்களைப் படித்துக் காட்டி அவர்களை தகுந்த உச்சரிப்புடன் தமிழைப் பேசப் பழக்கி வருகிறோம். இதற்காக கிராமங்களில் உருவாக்கப்பட்ட சிறப்பு மையங்கள் மூலம் இப்போது சுமார் 1,000 பேர் ‘ஸ்போக்கன் தமிழ்’ படிக்கிறார்கள். இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பேச்சுத் தமிழைக் கற்றுக் கொண்டு சரளமாக தமிழைப் பேசுகிறார்கள்” என்று பெருமை பொங்கச் சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT