Published : 13 Dec 2017 10:29 AM
Last Updated : 13 Dec 2017 10:29 AM
இ
து அரசுப் பள்ளிகள் புத்துயிர் பெறும் காலம். முன்னாள் மாணவர்கள் சேர்ந்து தாங்கள் படித்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தரும் நல்ல காரியங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதோ இந்த தாழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியையும் அப்படித்தான் சுமார் 20 லட்ச ரூபாய் செலவு செய்து புனரமைத்திருக்கிறார்கள் அதன் முன்னாள் மாணவர்களும் மக்களும்.
தனியார் பள்ளி மோகத்தால்..
நாகர்கோவிலை அடுத்துள்ளது தாழக்குடி பேரூராட்சி. இங்கே திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலேயே தொடங்கப்பட்ட பள்ளி இப்போது அரசு மேல்நிலைப் பள்ளியாகச் செயல்படுகிறது. அக்கம் பக்கத்தில் மெட்ரிக் பள்ளிகள் வேகமாக முளைத்ததால் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்திருந்த இந்தப் பள்ளி, புதிதாக பொறுப்பேற்ற தலைமையாசிரியர் தயாபதி நளதத்தின் தொடர் முயற்சியால் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்தப் பள்ளியைத்தான் இப்போது இதன் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து புனரமைத்துள்ளனர்.
இந்தத் தகவலை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட தலைமையாசிரியர் தயாபதி நளதம், “எங்கள் பள்ளிக்கு இப்போது வயது நூறு. தாழக்குடியில் பெருவாரியாக வசிக்கும் விவசாயிகள் வீட்டுக் குழந்தைகள் தான் இங்கு படிக்கின்றனர். முன்பு, தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இங்குள்ள பிள்ளைகளை நாகர்கோவிலுக்குப் படிக்க அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பள்ளிக்கு இது நூற்றாண்டு
அரசுப் பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்வி இருக்கிறது என்று தொடங்கி, அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களின் பட்டியலை எல்லாம் எடுத்துச் சொல்லி பெற்றோர்களின் மனதை மாற்றினோம். இதில், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு வின் பங்கும் மிக முக்கியமானது. நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் இப்போது இந்தப் பள்ளியில் 333 பிள்ளைகள் படிக்கின்றனர்.
இந்த ஆண்டு இந்தப் பள்ளிக்கு நூற்றாண்டு என்பதால் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஊர் கமிட்டி அமைத்தார்கள். அதற்காக கூட்டம் போட்டு பேசிய சமயத்தில் தான், வெறுமனே கூடிக் கலையும் கூட்ட மாக இது இருக்கக்கூடாது. நாம் படித்த பள்ளிக்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் கிராம மக்களும் ஏகமனதாக ஒரு முடிவெடுத்தார்கள்.
பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் எடுக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதாக நாங்களும் உறுதி கொடுத்தோம். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் ஊர் மக்களும் தாங்களாகவே உதவ முன்வந்தார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்களும் தங்களால் ஆன நிதியுதவியை அளித்து உதவினர்.
முன்னாள் மாணவரான சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி குழுமத் தலைவர் மேகநாதன் தனது பங்காக பள்ளியில் நூலகம் கட்ட 12 லட்ச ரூபாய் தந்தார். இதே போல் பரசுபிள்ளை என்பவர் 1,50,000 ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிக் கொடுத்தார். பத்மநாபபிள்ளை என்பவர் 70 ஆயிரம் மதிப்பீட்டில் இரும்புக் கதவு, கழிப்பறை வசதிகளை அமைத்துத் தந்ததுடன் பெயின்ட் அடிக்கும் செலவையும் ஏற்றுக் கொண்டார். திருச்சியில் உள்ள என்.ஐ.டி-யின் டீன் சி.நடராஜனும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான். அவர், தரைத்தளம் அமைக்க 2 லட்ச ரூபாய் தந்தார். இப்படி நிறையப் பேரை சொல்லலாம். நூற்றாண்டு விழா கமிட்டியின் பொதுநிதியிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கு புது வர்ணம் பூசிக் கொடுத்தார்கள்” என்றார்.
கோயில் திருவிழா போல்..
இந்த நிலையில், அண்மையில் நடந்த இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவானது கோயில் திருவிழாப் போல அமர்க்களப்பட்டது. வாழை மரம், தோரணங்கள் கட்டி மதிய விருந்து சகிதம் விழாவை மணக்க வைத்தார்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். விருந்து உபசரிபுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டவர் முன்னாள் மாணவர் நீலகண்டன். அருணாச்சலம் பிள்ளை குடும்பத்தினர் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளி நூற்றாண்டு விழா அலங்கார வளைவை அமைத்துத் தந்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளியின் நூற்றாண்டு விழா கமிட்டி தலைவர் பத்மநாபன், “இது நாங்கள் படித்த பள்ளி. எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய தாய் மாதிரித்தான் இந்தப் பள்ளியை நாங்கள் பார்க்கிறோம். எனவே, ஒரு தாய்க்கு, பிள்ளைகள் செய்யும் நியாயமான நன்றிக் கடன்தான் இந்த விழாவும் அதற்காக செய்யப்பட்ட புனரமைப்புப் பணிகளும். இந்தப் பள்ளியை புனரமைக்க ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களுமே ஏதாவதொரு வகையில் உதவி செய்திருக்கிறார்கள். போதாதுக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் தனது பங்காக 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து இரண்டு கழிப்பறைகளை அமைத்துத் தந்துள்ளார்.
திரும்பிப் பார்க்க வேண்டும்
இன்று எங்கள் ஊர் பள்ளியை அதன் முன்னாள் மாணவர்களும் ஊர் மக்களும் நன்றியுடன் திரும்பிப் பார்த்திருப்பது போல் அனைத்து அரசுப் பள்ளிகளையும் அதன் முன்னாள் மாணவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். தங்களை உருவாக்கிய பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர தயங்காமல் முன்வர வேண்டும்” என்றார்.
ஊர் மக்களால் வாழ்த்திப் புகழப்படும் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தயாபதி நளதம், குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது!
படங்கள் உதவி: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT