Published : 09 Dec 2017 09:41 AM
Last Updated : 09 Dec 2017 09:41 AM
த
ங்களைப் பற்றிய ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதே சிலருக்கு முடியாத காரியம். ஆனால், விளையாட்டுத் துறை சம்பந்தமாக கடந்த 32 ஆண்டுகளாக தினசரி மற்றும் பருவ இதழ்களில் வந்த முக்கியச் செய்திகள் அனைத்தையும் திரட்டி ஆவணமாக வைத்திருக்கிறார் 91 வயதான டி.சங்கரன்.
32 ஆண்டு கால ஆவணம்
பொள்ளாச்சி நகர்மன்ற (ஆண்கள்) பள்ளியில் 1955-ல் தொடங்கி முப்பது ஆண்டுகள் உடற்கல்வி இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர் சங்கரன். பணி ஓய்வுக்குப் பிறகும் இவருக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் விடவில்லை. அதனால், விளையாட்டு சம்பந்தமான முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இவர், கடந்த 32 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியான முக்கியமான விளையாட்டுச் செய்திகளை சேகரித்து ஆவணமாக்கி வருகிறார்.
அப்படி, கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னிஸ், சதுரங்கம் என விளையாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 61 ஆவணத் தொகுப்புகள் இப்போது இவர் வசம் உள்ளன. கிரிக்கெட் ஜாம்பவான்களான நவாப் பட்டோடி, சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கிர்மானி உள்ளிட்டவர்களைப் பற்றிய முக்கியச் செய்திகள் இவரது ஆவணத்தில் இருக்கின்றன.
தரம் பிரிக்கத் தெரியவேண்டும்
இதுமட்டுமல்லாது, பழங்கால நாணயங்கள் தொடங்கி அண்மையில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம் வரைக்கும் சேகரித்து வைத்திருக்கிறார் சங்கரன். பல்வேறு நாடுகளின் பழைய, புதிய கரன்சிகளும் இவரது களஞ்சியத்தில் இருக்கின்றன. விளையாட்டு பற்றி பேசினால் உற்சாகமாகி விடும் சங்கரன், பிஷன் சிங் பேடியின் சுழற்பந்து வீச்சிலிருந்து விராட் கோலியின் பேட்டிங் வரை அசராமல் தடதடக்கிறார்.
ஆவண தொகுப்பு பற்றிப் பேசியபோது, “பணியில் இருக்கும் போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பற்றிய விளையாட்டுச் செய்திகளை எல்லாம் வெட்டி எடுத்து ஆவணப்படுத்துவேன். அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பத்திரிகை செய்திகளில், எது முக்கியமான செய்தி, எந்தச் செய்தி எதிர்காலத்தில் வரலாறாகப் பேசப்படும் என்பதை எல்லாம் தரம் பிரிக்கத் தெரியவேண்டும். அத்தகைய செய்திகளைத்தான் நான் வெட்டி எடுத்து தனியாக பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன்” என்றார் சங்கரன்.
தற்கொலை எண்ணம் வராது
“இந்த வயதிலும் இப்படியெல்லாம் மெனக்கெட்டு ஆவணப்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “ விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும் அர்பணிப்போடு விளையாடுபவர்களுக்கும் தான் இதன் அருமை தெரியும். பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளாக வருகின்றன. பள்ளிகளில் விளையாட்டுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததே இதற்கெல்லாம் காரணம். விளையாட்டில் கவனம் செலுத்தும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் இருக்காது. அதனால் அவர்களுக்கு தற்கொலை எண்ணமெல்லாம் வராது.
சிறப்பு மதிப்பெண்
விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோரிக்கை வைத்தேன். அதை பரிசீலிப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. ஆனால், இன்று வரை பரிசீலிக்கவில்லை. நமது பிள்ளைகளை விளையாட்டின் பக்கம் ஈர்க்க வேண்டுமானால், கேரளத்தைப் போல 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில், விளையாட்டுத் தகுதிக்கென சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். அப்படி சலுகை மதிப்பெண் பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் சங்கரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT