Published : 07 Dec 2017 09:57 AM
Last Updated : 07 Dec 2017 09:57 AM
கா
ங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகப் பதவி ஏற்கவிருக்கும் ராகுல் காந்தி பின்பற்றும் மதம் எது, அவருடைய நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமானது என்பது பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்க வேண்டியதில்லை, ஆனால் நிலைமை கையை மீறிவிட்டது. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வரலாறுகளில் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது. பூணூல் அணிந்திருப்பதைப் புகைப்படத்துடன் ராகுல் இனி வெளியிட்டாலும், சோம்நாத் கோயில் பதிவேட்டில் ‘இந்துவல்லாத’ பிறருக்கான பகுதியில் கையெழுத்திட்டிருப்பதை பாஜக தொடர்ந்து சுட்டிக்காட்டாமல் இருக்காது.
ராகுல் காந்தியின் நம்பிக்கைகளோ, மதமோ தேசிய அரசியலில் ஒரு பிரச்சினையே அல்ல; அவருடைய தாய்க்கு வேண்டுமானால் அந்தப் பிரச்சினை இருந்திருக்கலாம், அவர் வேற்று நாட்டவர் என்பதால்.
மதங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாத யதார்த்தவாதியான நேரு தொடங்கி, அனைத்தையும் அரவணைக்கும் வாஜ்பாய், அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை என்ற விளக்கத்துக்கு உட்பட்ட வரையில் மட்டும் மதச்சார்பற்றவராக இருந்துகொண்டு இந்துத்துவ பற்றாளர் என்பதை காட்டிக்கொள்ளத் தயங்காத நரேந்திர மோடி வரையில் மதச்சார்பின்மையின் தன்மையும் எல்லைகளும் வேறுபடுகின்றன. இடதுசாரிகளை இங்கே குறிப்பிடாமல் இருக்கக் காரணம், நாத்திகர்களுக்கு மதச்சார்பின்மை என்பது பொருந்தாது.
இந்நாட்டு மக்கள் கடவுள் நம்பிக்கை குறித்து கவலையேபடாத நேருவைப் பலமுறையும், கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் திராவிடக் கட்சிகளைப் பல முறையும், கடவுள் நம்பிக்கையே இல்லாத இடதுசாரிகளையும், காவியுடுத்திய சாதுக்களையும், சீக்கிய – இஸ்லாமிய மத போதகர்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களிலும் சில மாநிலங்களிலும் மட்டும்தான் மதம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பஞ்சாபில் அகாலிதள், கேரளத்தில் முஸ்லிம் லீக் (முஸ்லிம்), கேரள காங்கிரஸ் (கிறிஸ்தவர்கள்), ஹைதராபாதில் ஒவாய்சியின் கட்சி ஆகியவை மத ரீதியான ஆதரவைப் பெற்றுள்ளன.
. காங்கிரஸ் கட்சி சுதந்திரச் சிந்தனையாளர்கள் கட்சி, மதச்சார்பின்மையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் கட்சி, தேசியவாதம் என்ற கொள்கையைத் தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடியது. பாரதிய ஜனதாவோ இந்துத்துவத்தில் தீவிரப் பற்று கொண்டது, அரசியல் சட்டம் கூறுகிறதே என்பதற்காகக் குறைந்தபட்ச மதச்சார்பின்மையுடன் செயல்படுவது, தேசியவாதத்தைக் கடுமையாக முரசறைவது, தன்னுடைய இந்துமதப்பற்றை வெளிக்காட்டத் தயங்காதது. இந்த நிலையில், ராகுல் காந்தி அல்லது அவருடைய ஆலோசகர்கள் எதற்காக பாஜகவுக்கு சாதகமான விஷயத்தில் மூக்கை நுழைத்தார்கள் என்று தெரியவில்லை.
ராகுல் காந்தி சில கோயில்களுக்குச் செல்வதில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. 2014-க்குப் பிறகு, தேசியவாதி என்றால் இந்துமத நேசராக இருக்க வேண்டும் என்பதும் நியதியாகிவிட்டது. அரசின் நிர்வாக அமைப்புகளிலிருந்து சிறுபான்மையினர் விலக்கப்பட்டுவிட்டார்கள்.
கோயிலுக்குப் போவது, சோம்நாத் கோயில் பதிவேட்டில் கையெழுத்துப் போடுவதைத் தாண்டி இந்த விவகாரம் சென்றுவிட்டது. மோடியின் காலத்தில் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பார்வையாளர் பதிவேடு குறித்து ராகுலின் ஆலோசகர்கள் முன்னதாகவே சிந்தித்திருக்க வேண்டும். ‘கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்ற வகையில் நான் எல்லா மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கிறேன்’ என்று ராகுல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தால் இது வளர்ந்திருக்காது.
1977 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் வரையில் நேரு-இந்திரா குடும்பத்தினர் எந்த மத அடையாளத்தையும் பொதுவெளியில் காட்டியதே இல்லை. தேர்தல் தோல்வி மற்றும் சஞ்சய் காந்தியின் இழப்பு போன்றவற்றால் இந்திரா காந்தியின் மனம் மாறியது. அனைவருக்கும் தெரியும்படி ருத்ராட்சம் அணிந்தார். பாபாக்கள், தாந்த்ரீகர்களிடம் ஆசி பெற்றார். புறா போன்ற பறவைகள் மூலம் தன்னுடைய எதிரிகள் தனக்குக் கெடுதல்களைச் செய்துவிடக் கூடும் என்று அஞ்சினார். அவர் வசித்த வீட்டின் எல்லா ஜன்னல்களையும், வென்டிலேட்டர்களையும் மூடி வைக்க உத்தரவிட்டார். அப்போதும்கூட அவர் தனது மத அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை.
ராஜீவ் காந்தி காலத்தில்தான் மிகப் பெரிய மாற்றம் வந்தது. ஜீவனாம்சம் கேட்டு ஷா பானு தொடுத்த வழக்கில் அவருக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மவுல்விகளின் கோரிக்கைகளுக்கு இணங்கி, சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். மக்களவையில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜகவுக்கு புதிய பலத்தைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டே போனார். பாபர் மசூதி – ராமஜன்ம பூமி வழிபாட்டிடக் கதவின் பூட்டைத் திறக்க ஆணையிட்டார். ஆலயம் கட்டும் அடிக்கல்நாட்டு விழாவை அனுமதித்தார். ‘ராம ராஜ்யம் அமைப்பேன்’ என்று உறுதி கூறி 1989-ல் தேர்தல் பிரச்சாரத்தை ராமஜன்ம பூமிக்கு அருகிலிருந்தே தொடங்கினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் முன்னர் பெற்றிருந்த 414 இடங்களில் சரி பாதிக்கும் மேல் இழந்து 197-ல் மட்டுமே வென்றது. முஸ்லிம்களின் ஆதரவை இழந்தது. பாஜக பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களை மத ரீதியாக இணைத்து 85 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது.
காங்கிரஸ் கட்சி அதிலிருந்து இன்னமும் மீளவில்லை. பாஜகவுக்கு எது வலிமையான ஆயுதமோ அதைக் கையிலெடுக்க முற்பட்டார் ராஜீவ். அதில் தோற்றார். அதே தவறை ராகுல் காந்தியும் இப்போது செய்ய விரும்பினால், அப்படிச் செய்யும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. ராகுல் காந்தி இப்போது பக்குவப்பட்ட நடுத்தர வயதுக்காரர், அவருடைய கட்சிக்குத் தலைவர்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்
முதன்மை ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT