Published : 29 Dec 2017 10:42 AM
Last Updated : 29 Dec 2017 10:42 AM
ச
ச்சின் டெண்டுல்கர் – மிகச் சிறந்த ஆட்டக்காரர். சந்தேகம் இல்லை. அவரது ஆட்டத்தை வியந்து மகிழ்ச்சியுடன் பார்த்தது உண்டு. ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் அவரை, கடவுள் அளவுக்குத் துதி பாடுகிற போதெல்லாம் இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றும்.
மாநிலங்களவை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டபோது பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதற்கேற்றாற்போல் கடந்த 4 ஆண்டுகளாக அவர் மாநிலங்களவையில் எதுவும் பேசவில்லை. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தார். ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அவரது சமீபத்திய பேச்சு, ஓர் ஆனந்த அதிர்ச்சி தந்தது. அவையில் சச்சின் ஆற்றிய கன்னிப் பேச்சு – ஓர் அற்புதம்
என்ன ஒரு பேச்சு! அதில் என்ன ஒரு அக்கறை! சபாஷ் சச்சின்! கடந்த டிசம்பர் 21-ம் தேதி மாநிலங்களவையில் முதன்முறையாக உரையாற்றினார் சச்சின். இந்த உரையில் அவர் வைத்த விவரங்களும், விடுத்த கோரிக்கைகளும் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியவை. இளைஞர்களின் எதிர்காலம், ஆரோக்கியம், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு குறித்த அவரது எண்ண ஓட்டம், ஓர் உண்மையான மக்கள் பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுகிறது.
அவையில் அவரை சுதந்திரமாகப் பேச விடாமல் ஏராளமான தடங்கல்கள். முழுப் பேச்சையும் அவரால் முடிக்க இயலவில்லை. ஆகவே, ‘பேஸ்புக்’ மூலம் தனது உரையைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். என்னதான் சொல்கிறார் சச்சின்..?
என் தந்தையிடம் இருந்து எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கொடை – ‘விளையாடுவதற்கான சுதந்திரம்’; ‘விளையாடுவதற்கான உரிமை’. தனது உரை முழுவதிலுமே, குழந்தைகள் (பள்ளிச் சிறுவர்கள்) விளையாடுவதற்கான முழு உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அவர் அழுத்தமாக வலியுறுத்துகிறார்.
இன்று பல பள்ளிகளில் அடிக்கடி ரத்து ஆகிற வகுப்பு என்றால், அநேகமாக அது விளையாட்டு நேரமாகத்தான் இருக்கிறது. அதிலும், ஆண்டுத் தேர்வு நெருங்குகிறது என்றாலே, ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர், நண்பர்கள் எல்லாரும், விளையாட்டுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்துக் கொண்டு விடுகிறார்கள். விளையாட்டை, கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கைக்கு சற்றும் தேவை இல்லாத, நேரத்தை வீணடிக்கிற விஷயமாகப் பார்க்கிற பழமைத்தனம் இன்னும் மாறவே இல்லை.
இதில் வேதனை, தேர்வைக் காட்டி, விளையாட்டுப் பழக்கத்தை முடக்குகிற போக்கு, நன்கு படித்த பெற்றோரிடமே மிகுந்து காணப்படுகிறது. இதற்கு எதிராக மிகவும் நாசூக்குடன் பேசுகிறார் சச்சின். “நம்மில் பலர் வெறுமனே விவாதிக்கிறோம். விளையாடுவதே இல்லை”. இதற்கு மேல் அவர் சொல்கிற உண்மைதான் நம்மைச் சுடுகிறது.
“விளையாட்டை விரும்புகிற தேசமாக இருக்கிறோம்; விளையாட்டை ஆடுகிற தேசமாக மாற வேண்டும்” எந்தப் பள்ளி, கல்லூரிக்குச் சென்றாலும், இதனை வலியுறுத்துகிறோம். ஆனால் விளைவுதான் பெரிதாக இல்லை. இப்போது சச்சின் சொல்வதால், மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நமது நாட்டில் தொலைக்காட்சி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவர்களில் மிகப் பெரும்பான்மையோர், தாம் விளையாடுவதற்காக, எந்த விளையாட்டு மைதானத்திலும் ஒருமுறை கூட கால் வைத்தது இல்லை.
விளையாட்டுடன் சுகாதாரம், உடற்தகுதி இரண்டையும் கலந்து சொன்ன விதம்தான் சச்சினின் உரையில் ஆகச் சிறந்த அம்சம்.
2020-ம் ஆண்டில், மக்களின் சராசரி வயது அடிப்படையில், உலகின் இளமையான நாடாக இந்தியா இருக்கப்போகிறது. ஆனால் இதைப் பற்றி, பெருமை கொள்ள முடியவில்லை. உலகில், நீரழிவு நோயின் தலைநகரமாக நாம் இருக்கிறோம்; உடல் பருமனில் உலகின் மூன்றாவது இடம் நமக்கு. இந்த நோய்கள் ஏற்படுத்தும் பொருளாதார சுமை, நமது வளர்ச்சியைத் தடுக்கும்; ஆரோக்கியமற்ற முழு உடற்தகுதி இல்லாத இளம் நாடு என்பது, பேரழிவுக்கு சமம் என்று எச்சரிக்கை விடுக்கிற சச்சின் சொல்கிற ஒரு புள்ளி விவரக் கணக்கு, நம்மை ஒரு கணம் துணுக்குற வைக்கிறது.
இந்தியாவில் 2012 முதல் 2030 வரையிலான காலத்தில், தொற்றா நோய்கள் மீதான சிகிச்சைக்காகவே, 6.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகுமாம். இது இந்திய ரூபாய் மதிப்பில், நான்கு கோடி, கோடி ரூபாய்!! தனது உரையில் அவரே குறிப்பிடுவது போல, நான்கு கோடி… கோடிதான்.
’
ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டு வயது அதிகபட்சம் 35-ல் இருந்து 40 வரைதான். அதன்பிறகு அவர்கள், பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்க நேர்கிறது. ஆனால், இன்னமும் கூட, இந்த சமுதாயத்துக்குத் தருவதற்கு இவர்களிடம் நிரம்ப உண்டு; இவர்களை எல்லாம் பள்ளி, கல்லூரிகளில் பயிற்சியாளராக நியமிக்க ஓர் அமைப்பு வேண்டும். இவர்களால் இளம் வயதில் பல சாதனையாளர்களைக் கண்டறிய முடியும்; தகுந்த பயிற்சி அளித்து, பல பதக்கங்களைக் கொண்டு வர முடியும்.
“புதல்விகளின் விளையாட்டுத் திறனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்; கனவுகள் எல்லாருக்கும் பொதுவானதுதானே..? பிறகு நாம் ஏன் பாகுபடுத்திப் பார்க்க வேண்டும்…?” என்று சச்சின், யதார்த்தமாக வினவுகிறபோது, இதை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
திறந்த இடங்களை ஆக்கிரமிப்பதைத் தவிர்த்து, விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்க வேண்டும். 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமை சட்டம் போலவே, விளையாட்டையும் உரிமையாக்குகிற சட்டம் வேண்டும். பள்ளிப் பாடத் திட்டத்தில், விளையாட்டும் ஒரு கட்டாய பாடம் ஆக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி, மாநிலம், தேசிய அளவில் விளையாடுவதற்குத் தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
மாநிலங்களவையில் சச்சின், உரை ஆற்ற முடியவில்லை. பரவாயில்லை. தனது உரையைப் பதிவு செய்து இருக்கிறார். இளைஞர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் தரும், நல்ல பல கருத்துகளை முன் வைத்து இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT